நீர் நமது உயிர்! தண்ணீரை வீணாக்காதீர்!!

தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே ! என்பது நான் சிறுவயதில் கிராமத்தில் கேட்ட பழமொழி! தாயைவிட தண்ணீருக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்று அன்று தெரியவில்லை! இன்று தெரிகிறது!!

எனது பாட்டி ஆற்று நீரைக்குடித்தார்!
எனது அம்மா கிணற்று நீரைக்குடித்தார்!!
நான் குழாய் நீரைக்குடித்தேன்!!!
எனது மகள் பாட்டில் நீரைக்குடிக்கிறாள்!!!!
நாளை எனது பேரனும், பேத்தியும்...................?

தமிழ் நாடு மூன்று பக்கமும் கடலால் மட்டுமல்ல,ஆந்திரா, கர்நாடகா
கேரளா என்ற மாநிலங்களாலு சூழப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீரை வழங்கும் ஆறுகள் எல்லாம்(தாமிரபரணி தவிர) இந்த மாநிலங்களில் உற்பத்தியாவதால் தண்ணீருக்காக அவர்களிடம் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு இந்தியன் என்ற உணர்வுகள் மறைந்து, இன உணர்வு ஏற்பட்டு விரும்பத்தகாத சண்டைகள் ஏற்படுவதைக்கண்ட போதுதான் கிராமத்தில் கேட்ட பழமொழியின் உண்மை புரிகிறது! தண்ணீரின் மகத்துவம் புரிகிறது!

சமீபத்தில் பேருந்தில் திருச்சி செல்லும்போது தாகமாக இருந்ததால் பக்கத்தில் உள்ளவரிடம் தண்ணீர் கேட்டேன்! அவரும் தந்தார்! பாட்டில் காலியானது! எனது தாகமும் தீர்ந்தது! தண்ணீர் தந்தவர் பத்து ரூபாய் கேட்டார்! நான் புரியாமல் முழித்தேன்! காசு கொடுத்து வாங்கியது என்றார்! பசும்பாலைவிட தண்ணீரின் விலை அதிகம்! கலி முற்றிவிட்டது!தவித்த வாய்க்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கமுடியுமா? என்றார்.

தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலமாகும்! இன்றைய நமது குறிக்கோள் நீர் சிக்கனமட்டுமல்ல, நீர் மறுசுழற்சியாகவும் இருக்கவேண்டும்.குறிப்பாக கல்லூரிகள்,பள்ளிகள்,திருமணமண்டபங்களில் கைகழுவும் நீரை மறு சுழற்சிசெய்து மரங்களுக்குப்பயன்படுத்தவேண்டும்.திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2000-ம் ஆண்டிலிருந்து மழை நீர் சேகரிக்கப்பட்டுவருகிறது. 2005-ம் ஆண்டில் இருந்து மாணவிகள் குடி நீர்குழாய்களைப்பயன்படுத்தும் போதும்,பாத்திரம் மற்றும் கைகழுவும் போது வீணாகும் நீரை, கூலாங்கற்கள்,மணல்,கரி,கல்வாழை பரப்பிய பாத்தி வழியாக வரவைத்து, வடிகட்டி கீழ் நிலைத்தொட்டியில் சேகரிக்கிறோம். பின்பு அதை மின்மோட்டார் மூலம் மேல் நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு மரங்களுக்குப்பயன்படுத்தப்படுகிறது. தினமும் சுமார் 3000-ம் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை மூலம் குழாயடியில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதைத்தடுப்பதோடு,மரங்கள் வைத்துத்தண்ணீர்விட்டு வளர்ப்பதன் மூலம்
சுற்றிச்சுழலும் பூமி
உன்னைச்சூடுபடுத்தியது யாரு?
மரங்களை வைத்து குளிர்விக்கிறோம்- நீ
சந்தோசமாகச்சுழன்றாடு!
எனக்கூறி புவி வெப்பமடைவதை கடுகளவு குறைக்க முயல்கிறோம். எங்களது இம்முயற்சிக்கு, தமிழகரசின் அறிவியல் நகரத்தின்(SCIENCE CITY) சார்பாக கடந்த 2-3-2010-ல் மாண்புமிகு உயர்கல்வியமைச்சர் டாக்டர் பொன்முடி அவர்கள் எம்து பள்ளி மாணவிகளுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.