தமிழகத்தின் கல்வித்தொழிற்சாலைகள்....


ன்றைய முதலீடு ரூபாய் 3 லட்சம் நாளைய(சேமிப்பு) லாபம் ரூ. 30 லட்சம்.


அன்பான பெற்றோர்களே! அதுவும் ஓரளவு நடுத்தர வருமானம் உள்ள தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்..உங்கள் மகனோ, மகளோ ஒரு மருத்துவராகவோ,ஒரு பொறியாளராகவோ மாறி லண்டன்,அமெரிக்கா சென்று  உங்கள் குடும்பத்தின் அந்தஸ்தை உயர்த்தி வளமாக வாழ நினைக்கிறீர்களா? அட என்னய்யா நீ....இப்படி கேட்கிறாய்? தந்தை மகற்காற்றும் கடமையே அது தானே..இதைத்திருவள்ளுவரே சொல்லியுள்ளாரே... நீ படித்ததில்லையா? என நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது?

நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புகிறோம்? அறிவு பெறவா? வேலைக்காகவா? அட இது கூடவா தெரியாது.. நல்லா படித்து,பெரிய வேலைக்குப்போய்  நல்லா சம்பாதித்து நம்மைக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடாமல் நம்மைக்காப்பாற்றத்தான்..என ஒவ்வொருபெற்றோரும் நினைக்கிறோம்...அதற்காக வாயைக்கட்டி வயித்தைக்கட்டி பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து...அட அதென்ன நல்ல பள்ளி என்கிறீர்களா? அதாங்க அம்மா அப்பாவை, மம்மி,டாடி என்று மூன்று வயதிலேயே சொல்லித்தருகின்ற, அப்பா அம்மா பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்,குறிப்பாக அம்மா வீட்டில் இருந்து சொல்லித்தரவேண்டும்..இப்படி பல நிபந்தனைகளுடன் கூடிய  அழகான மெட்ரிகுலேசன் பள்ளியில்,விடிய விடிய வரிசையில் காத்திருந்து பள்ளியில் ஆயிரக்கணக்கில் கொட்டியழுது சீட் வாங்கி சேர்க்கிறோம்.. நமது குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பதை, மாஞ்சு மாஞ்சு வீட்டுப்பாடம் எழுதுவதைப்பார்த்து புளகாங்கிதம் அடைகிறோம்.!. நமது மகனை விட பக்கத்து வீட்டு சாந்தியின் மகன் அதிக மார்க் வாங்கக்கூடாது என மனதிற்குள் நமது இஷ்ட தெய்வத்தை வேறு வணங்குகிறோம்..

மூன்று வயதில் எல்.கே.ஜி.யில் சேர்த்த மகனோ, மகளோ மெட்ரிகுலேசன் தேர்வை எழுதிவிட்டார்களா?...பெற்ற மனது பதறுகிறது...என்ன மார்க் வருமோ...தொண்ணூறு,தொண்ணூற்றிஐந்து  சதவீதத்திற்குமேல்  மார்க் வந்துவிட்டதா? கவலையே படாதீர்கள்..உங்கள் குழந்தைகள் மருத்துவராகவும், பொறியியல் வல்லுனராகவும் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், அண்ணா பொறியியல் கல்லூரியிலும் அரசின் குறைவான கட்டணத்தில் சேருவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதொல்லாம் ஒன்றே ஒன்றுதான்...உங்கள் குழந்தைகளை  இதற்கென தமிழகரசின் முழு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தையே இரண்டுவருடம் தினம் 16 மணி நேரம் மனப்பாடம் செய்யவைக்கும் திறன் படைத்த பல கல்வித்தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன..குறிப்பாக நாமக்கல் மாவட்டம் தான் இதில் முன்னிலையில் இருக்கிறது.
     தற்போதுள்ள நிலவரப்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகரசின் 17 மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் 1653 தான். தற்போது சுமார் இருபதாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகரசின் மிகக் குறைவான கட்டணத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் பாக்கியம் படைத்த மாணவ மாணவிகள் இம்மாவட்டத்தனியார் பள்ளிகளில் படித்தவர்களே..இந்தாண்டு இம்மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 7 பள்ளிகளில் மட்டும் மருத்துவபடிப்பிற்கு கட் ஆப் மதிப்பெண் 196 பெற்றவர்கள் 650 பேராகும்.இதல்லாம் அவர்களே செய்தித்தாள்களில் மாணவர்களின் போட்டோவுடன் முழுப்பக்க விளம்பரங்களில் பார்க்கலாம்...அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் 1000க்கும் மேலானவர்கள் 196 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கின்றனர்.தமிழகத்தில் 2008-09ம் ஆண்டு கணக்கின்படி 5062 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் 6,15,593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மருத்துவ,பொறியியல் பாடத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் தேர்வாகியிருப்பார்கள்.  நாமக்கல் தனியார் பள்ளிகள் மட்டும் தட்டிச்செல்லும் மருத்துவ படிப்பிற்கான காட்சியைக்காணுங்கள்.. நமக்கும் இப்பள்ளிகளில் குழந்தைகளைச்சேர்க்க ஆசையாக இருக்கிறதல்லவா? 

     பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடனே..உடனே ராசிபுரம், திருச்செங்கோட்டிற்கு பணத்தை மூட்டைகட்டிக்கொண்டு  பிரம்மாண்டமாக மைசூர் மகாராஜாவின் அரண்மனை போல கட்டப்பட்டுள்ள கல்வித்தொழிற்சாலைகளுக்குச்செல்லுங்கள்...உங்கள் குழந்தையை பள்ளியிலும், விடுதியிலும் சேர்த்து விடுங்கள்..ஒரு சில மாதத்திலேயே விடுதி பிடிக்கவில்லை என்று உங்கள் செல்லக்குழந்தை கூறும்..பல்லைக்கடித்துக்கொண்டு 2 வருடம் பொருத்துக்க கண்னா..எனக்கூறிப்பாருங்கள்... குழந்தை அடம் பிடிக்கிறதா...சமாதானப்படுத்த முடியவில்லையா? கட்டாயப்படுத்தாதீர்கள்..உங்கள் குழந்தை மனஉலைச்சல் காரணமாக விபரீத முடிவை எடுப்பதற்கு தூண்டுகோலாகி விடாதீர்கள்..வேறு வழியே இல்லையா? இருக்கிறது.. கவலையே படாதீர்கள்..அங்கேயே வாடகைக்கு வீடுகள் நிறைய கட்டி விடப்பட்டுள்ளன..வீட்டில் பெரிசுகள் இருந்தால் வீடு பிடித்து சமைத்துப்போட்டு மகனையோ,மகளையோ படிக்கவைக்கலாம். பெரிசுகள் இல்லையா? அம்மாவே போய் இரண்டு வருடம் மகனுக்கோ, மகளுக்கோ சமைத்துப்போடவேண்டும்...வீட்டில் கணவருக்கு சமைக்கத்தெரிந்தால் பிரச்சனையில்லை..இல்லையென்றால 2 வருடம் ஓட்டல் ...தான்.. உங்கள் செல்ல குழந்தைகளுக்காக இந்த தியாகத்தை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். சர்க்கரை ஆலைகளில் கரும்பை ஒருபுறம் விட்டால் மறுபுறம் சர்க்கரையாக வருவது போல இங்குள்ள பள்ளித்தொழிற்சாலைகளில் சேர்த்து விட்டால் இரண்டாவது வருடம் உங்கள் குழந்தை டாக்டர்/பொறியாளருக்குரிய மதிப்பெண்ணுடன் வெளியே வருவார்கள். இரண்டு வருடத்திற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை ஆகும்..  
        இரண்டு வருடத்திற்குப்பின் பனிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு மருத்துவக்கல்லூரியில் உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ இல்வசமாக குறைவான கட்டணத்தில் இடம் கிடைத்துவிடும்..பல தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஒரு சீட்டிற்கு ரூ.30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வாங்குகிறார்கள்.இதனுடன் ஒப்பிட்டால இரண்டு வருட முடிவில் நீங்கள் போட்ட முதலீடு ரூ. 3 லட்சம் ரூ.30 லட்சத்தை உங்களுக்கு(சேமித்து) பெற்றுத்தருகிறது...

         ஒரு மாணவி கூறுகிறார் “ நான் எப்படி படித்தேன் என்று எனக்கே தெரியாது..எங்க சார் என்ன கூறினாரோ அதை அப்படியே BLIND ஆக FOLLOW செய்தேன்.”
       இப்பள்ளிகளில் முன்பெல்லாம காலையில் படித்ததை மாலையில் எழுதிக்காட்டவேண்டும்..அப்படி செய்யாவிட்டால் பிரம்பு கொண்டு அடிக்கவும் செய்வார்கள்..ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே தூக்கம்...மீதி 18 மணி நேரத்தில் குளியல்,சாப்பாடு நேரம் போக மீதி நேரங்களில் எல்லா  நேரமும்,,,மனப்பாடம்ம்ம்ம்..தேர்வு....மனப்பாடம்....தேர்வு...இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகும் ஒரு சில மாணவர்கள் தற்கொலைகள் கூட செய்துள்ளனர்... ....இதனால் தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்..இது பற்றி ஒரு பள்ளி நிர்வாகி இணையத்தில் இப்படி கூறியுள்ளார்.


மாணவ, மாணவியர்களை அடிக்கக் கூடாது என்றாலும், கடுமையாக அவர்களைப் பேசக் கூடாது என்பது மாணவர்களின் மனப்பாங்கைப் பொறுத்தவரை சரியாக இருந்தாலும்கூட, அவர்களை அதிக மதிப்பெண்

பெற வைப்பதில் சற்று பின்னடைவையே ஏற்படுத்தும்.
மேலும் கூறுகிறார் கேளுங்கள்..


அதிக மதிப்பெண்கள் மட்டும் போதுமா?
பிற திறன்களையும் மாணவர்கள் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் மதிப்பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த கல்லூரிகளில் அட்மிஷன் என்ற நிலை இருக்கிறது. தற்போதைய நிலையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு பிற திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளலாம்.
         நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் முதலில் தோன்றிய இக்கல்வித்தொழிற்சாலையை தோற்றுவித்தவர்கள் அரசுப்பள்ளியின் ஆசிரியர்கள் தான்..இவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியின் காரணமாக பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு பல கல்வித்தொழிற்சாலைகளை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்திவிட்டனர். இவர்களைப்பார்த்து கோபி, அந்தியூர் ,திருவண்ணாமலை என வளர்ந்து கொண்டே உள்ளது.. நாமக்கல்லில் மட்டுமே கடை விரித்த இப்பள்ளிகள் தற்போது தங்கள் கிளைகளை கோவை, திருச்சி, தஞ்சாவூர் என கிளைகளைத்தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு/ நகராட்சிப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு மருத்துவ இடம் கூட கிடைப்பதில்லை.
                தமிழகரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குழந்தைகள், பிற அரசு உயர் அதிகாரிகள்,மத்தியதரவர்க்கத்தினரின் குழந்தைகள் இப்பள்ளிகளில் தான் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமே தமிழகரசின் மருத்துவ, பொறியியல் கல்வி நிலையங்களில் இடம் கிடைக்கும்..கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு மருத்துவபடிப்பு என்பது கானல் நீர் தான்.. 

           தற்போது தமிழகரசும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்வித்தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ளது..திருப்பூர் மாவட்டத்தில் மூலனூரில் சகல வசதிகளுடன் விடுதியுடன் கூடிய பள்ளி ரூ. 5 கோடியில் அமைக்கும் பணி நடைபெறுகிறது..மேலும் குண்டடத்தில் ஒன்றும் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.இங்கேயும் ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீதி கிடைக்காது...

          இதற்கு ஒரே வழி!
அரசு மருத்துவக்கல்லூரிகளில், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இடம்..தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்குச்செல்லவேண்டும் என தமிழகரசு சட்டம் கொண்டுவரவேண்டும் அல்லது 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை  கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு போல தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விகிதாசாரப்படி 20%க்கு மேல் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.

Comments

  1. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 25% இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. பிரச்சனைகளைப் பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள்.

    அல்லிக் குளம் பசுமையாக.. சுற்றிவர மாணவமணிகள் எதிர்கால கனவுகளுடன். நல்லதே நடக்கட்டும். அரசு ஆவன செய்யுமென நம்புவோம்.

    ReplyDelete
  3. அழகப்ப செட்டியார்,அவினாசிலிங்கம் போன்ற கல்வியாளர்கள் கல்வி வறுமையிலிருக்கும் மக்களை மேம்படுத்த உதவும் என்று எண்ணி சமூக சேவையாக கல்விப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். சமூக நோக்கு தவிர வேறெதுவுமில்லை அவர்களுக்கு. எண்பதுகளின் துவக்கத்தில் சுய நிதி என்ற பெயரில் (அதுவரை தமிழகத்தில் மொத்தம் 7 பொறியியற் கல்லூரிகள் மட்டுமே இருந்தது) தங்கு தடையற்ற பொறியியற்கல்லூரிகளுக்கு அன்றைய ஆட்சியாளர்கள் தொடங்கி இன்று வரை அனுமதி அளித்ததன் விளைவு இன்றைக்கு மத்திய தர ஏழை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  4. அழகப்ப செட்டியார்,அவினாசிலிங்கம் போன்ற கல்வியாளர்கள் கல்வி வறுமையிலிருக்கும் மக்களை மேம்படுத்த உதவும் என்று எண்ணி சமூக சேவையாக கல்விப்பணியில் தங்களை
    ஈடுபடுத்திக்கொண்டார்கள். சமூக நோக்கு தவிர வேறெதுவுமில்லை அவர்களுக்கு. எண்பதுகளின் துவக்கத்தில் சுய நிதி என்ற பெயரில் (அதுவரை தமிழகத்தில் மொத்தம் 7
    பொறியியற் கல்லூரிகள் மட்டுமே இருந்தது) தங்கு தடையற்ற பொறியியற்கல்லூரிகளுக்கு
    அன்றைய ஆட்சியாளர்கள் தொடங்கி இன்று வரை அனுமதி அளித்ததன் விளைவு இன்றைக்கு
    மத்திய தர ஏழை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..