Monday, May 29, 2017

எங்கள் தேசம்.. இந்திய தேசம்.. வாழ்க வாழ்கவே!

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வரலாற்றுக்காவியம்..
கொங்கு வேளாளர் கவுண்டர்களில் 70 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் உண்டு.. இந்த கூட்டங்கள் என்பதும், குல தெய்வம் என்பதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு தாய்வழியில் வந்த சமூகமாகவும், அந்த தாயே குலதெய்வமாகவும் இருந்திருக்கவேண்டும்..! இப்படி கொங்கு வேளாளர்களில் ஒரே கூட்டத்திற்குள் திருமண உறவு இருக்காது.. ஏனென்றால் ஒரே குலத்திற்குள் இருக்கும் ஆணும், பெண்ணும் சகோதரமுறையில் வருவார்கள்.. அதனால் ஒரே கூட்டத்தில் திருமணம் முடிக்காமல் வேறு கூட்டத்திற்குள் தான் திருமணம் நடைபெறும்.
இப்படி கொங்கு வேளாளர் திருமணங்களில் சமீப ஆண்டுகளில் அக்னி குண்டம் வளர்த்தி சமஸ்கிருத மந்திரம் ஓதி புரோகிதர்கள் மூலம் திருமணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இருந்தாலும் அருமைக்காரர் என்றும் சீர் காரர் என்றும் இருப்பவர்கள் இல்லாமல் திருமணம் நடைபெறுவதில்லை..இந்த சீர்காரர்களின் கூட்டத்தின் பெயர் முழுக்காதன் கூட்டம் அல்லது பொருள் தந்த கூட்டம் ஆகும். இவர்களின் குலதெய்வம் வெள்ளையம்மாள்.. கோவில் காடைஈஸ்வரர் கோவில், காங்கயம் அருகில் உள்ளது. இவர்கள் வணங்கும் மரம் , தல விருட்சம் வெடத்தலான் மரமாகும். 

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காடையூரில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு மூன்று பையன்களும், ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். பெண் குழந்தை வெள்ளையாக இருந்ததால் திருமண வயது வந்தும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை..இதனால் சகோதரர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டனர். தன் பெண்ணிற்கு தகுதி வாய்ந்த மாப்பிள்ளை கிடைக்காததால்.. பெற்றோர் கவலைப்பட்டனர். அப்போது பக்கத்து ்நாடான கருமாபுரத்தில் இருந்து ஒரு இளைஞன் மாடு மேய்த்துக்கொண்டு காடையூருக்கு வருகிறான். அவனிடம் பேசி வெள்ளையம்மாளை திருமணம் செய்து கொண்டால் பல ஏக்கர் நிலங்களை சீராக தருவதாக உறுதி கூறி திருமணம் செய்து வைக்கின்றனர். இருவருக்கும் மூன்று பையன்கள் பிறக்கின்றனர். பின் மீண்டும் கருத்தரிக்கும் போது வெள்ளையம்மாளின் அப்பா, அம்மா இருவரும் காலமாகிவிடுகின்றனர். அண்ணன்கள் அண்ணிமார்களின் போக்கு மாறுகிறது. அப்பா அம்மா இருந்தவரை அன்பாக இருந்த அண்ணிமார்கள் இப்போது வெள்ளையம்மாளையும் அவள் கணவரையும் திட்டி தீர்க்கின்றனர். இனியும் கூட்டுக்குடும்பமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த கருமாபுரத்தான் தன் திருமணத்தின் போது கூறியபடி காணி நிலத்தை பிரித்து தரும்படி கேட்கிறார். மச்சினமார்கள் மூவரும்.. வா.. உனக்கு எந்த நிலம் வேண்டும் எனக்கூறி அழைத்துச்சென்று கொன்று விடுகின்றனர். தங்கையிடம் வந்து கணவனை காணவில்லை எனக்கூறிவிடுகின்றனர்.
பின்.. வெள்ளையம்மாளை கொடுமை செய்ய ஆரம்பிக்கின்றனர்..ஒரு நாள் இரவில் குழந்தைகளுடன் வெள்ளையம்மாளை வீட்டை விட்டு துரத்திவிடுகின்றனர்.
வெள்ளையம்மாள் தன் மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு, வயிற்றுக்குள்ளும் ஒரு குழந்தையோடு எங்கு போவது எனத்தெரியாமல் கால் போன போக்கில் நடந்து போகும்போது, ஒரு படைப்பிரிவு வந்ததைப்பார்த்து பயந்து போய் மரத்தடியில் மறைகிறார்.. இதனைப்பார்த்த அந்த படைப்பிரிவின் முஸ்லீம் தளபதி, வெள்ளையம்மாளை அழைத்து அவரைப்பற்றி விசாரிக்கிறார். வெள்ளையம்மாளும் விபரத்தைக்கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சர்தார் வெள்ளையம்மாளை அவளது சகோதரர்களிடம் அழைத்துச்சென்று விசாரிக்கிறார். வெள்ளையம்மாளுக்கு சேரவேண்டிய நிலங்களை தரச்சொல்கிறார்..தளபதிக்கு பயந்த அண்ணன்மார்கள் சூழ்ச்சியாக, எங்கள் தங்கை சோரம் போய்விட்டார்.. கணவன் இறந்தும், கர்ப்பமாகி உள்ளார். எனவே ஊரார் அவளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..அவள் பத்தினி என நிரூபித்தால் நாங்கள் சொத்துக்களை தருகிறோம் என்கிறார்கள்.. சரி என்ன நிபந்தனை என சர்தார் கேட்கிறார்.
பச்சை மண்ணில் பானை செய்து, அதில் தண்ணீர் எடுத்து வந்து இங்குள்ள மண்குதிரைக்கு தெளிக்கவேண்டும். அப்படி தெளிக்கும் போது மண் குதிரை கணைக்கவேண்டும். இங்குள்ள பட்டுப்போன வெடத்தலான் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி, அதனை துளிர்க்க வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.. இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றமுடியாது..இதனை ஏற்றுக்கொள்ளாதே என்கிறார். ஆனால் வெள்ளையம்மாள் நான் பத்தினி என்பதை நிரூபிப்பேன் எனக்கூறி.. பச்சை மண்குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து மண்குதிரை மேல் தெளிக்க அது கணைக்கிறது.. பின் அதே தண்ணீரை வறண்டு போன மரத்திற்கு ஊற்ற அது துளிர்விடுகிறது.( இது அதீதமான கற்பனையாக இருக்கலாம்) இதனால் ஊரார் வெள்ளையம்மாளை தெய்வமாக வணங்குகிறார்கள்.. பயந்து போன சகோதரர்கள் சொத்தை தருகின்றனர். நான்கு குழந்தைகளுடன் வாழும் வெள்ளையம்மா, உதவி செய்த சர்தாருக்கு நன்றி கூறி வழியனுப்பி வைக்கிறார். பின் ஊர் பெரியவர்களிடம், சர்தாருக்கு நாம் எந்த வழியில் நன்றி செலுத்துவது என கூடி பேசுகிறார்கள்.. முஸ்லீம் சமுதாயத்தில் ஒரு குழந்தை பிறந்து சில வருடம் ஆனபின் சுன்னத் என்ற சீர் செய்தால் தான் அந்தக்குழந்தை முஸ்லீமாக அறியப்படும். எனவே நாம் அது போல செய்யாமல், நம் குழந்தைகளுக்கு காது குத்தாமல் சில வருடம் முஸ்லீம்கள் போல வளர்ப்போம். பின் காது குத்தி நாம் நம் இனத்திற்கு மாற்றிக்கொள்வோம் என முடிவெடுக்கிறார்கள்.
அதன் படியே இந்தக்குலத்தில் வந்தவர்கள் தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை காது குத்தாமல் முஸ்லீமாக இருக்கும் குழந்தைகளை சில வருடம் கழித்து சீர் செய்து, காது குத்தி இந்துவாக மாற்றிக்கொள்கிறார்கள்.இந்த நடைமுறை சில நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த முழுக்காதன்: கூட்டத்தில் இருக்கும் கணவனும் மனைவியும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின் மூன்று நாட்கள் சீர் செய்து, பின் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துவந்து காது குத்தி இந்துவாக மாற்றிக்கொள்கிறார்கள்.. இவர்களே அனைத்து கொங்கு வேளாளர் கூட்டத்தினருக்கும் முன் நின்று திருமணத்தை நடத்திவைக்கிறார்கள்..
ஒரு முஸ்லீம் தளபது செய்த ஒரு நல்ல காரியத்திற்கு நன்றிக்கடனாக, அந்த சர்தாரின் இனத்திற்கே நன்றி கூறும் முகமாக இன்னும் இந்த வழக்கம் முழுக்காதன் கூட்டத்தாரிடையே நடைபெற்று வருகிறது..
இதனை இந்தக்கோவிலில் சிற்பமாக வடிவமைத்து வரலாற்றை எழுதி வைத்துள்ளனர்.
இந்த வரலாறுகளை தெரியாதவர்கள் தான் இன்று இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்குள்ளும் சண்டையை மூட்டி, மசூதியை இடித்து..இந்தியாவை பதட்டத்தில் எப்போதும் வைக்கவேண்டும் என்ற அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றனர். இவர்களை புறக்கணிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...