Wednesday, April 14, 2010

அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.


ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும் என்ற தலைப்பில் வந்தவாசி அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் சொல்லப்படாத துயரத்தை கவிதையாக்கி கவிஞர் வெண்ணிலா அவர்கள் 23-2-2011 ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதியதைப்பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் ரூ.9 லட்சம் மதிப்பில் டாய்லெட்டுகளும்,பாத்ரூம்களும் கட்ட பணித்துள்ளார்கள் என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல,பாராட்டுதலுக்கும் உரியதாகும்...இப்பிரச்சனை, இப்பள்ளியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மாணவிகள் அனுபவித்துவரும் மெளனத்துயரமாகும்.


இதோ அந்தக்கவிதை


ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்!


பதினோரு மணிக்கு மட்டுமே

வெளியே வர வேண்டும்

காலையில் ஒரு முறை

மத்தியானம் ஒருமுறை

குழாயில் தண்ணீர் வரும்

வேளை தப்பி

வெளியே வருபவர்கள்

மைதானம் பெருக்க வேண்டும்

கடும் விதிகளை அறியாமல்

வயிறு பிசையும்

உள்ளாடை நனைந்து

ஈரம் பரவும்


உள்ள யாரு, வெளிய வா

உரத்து ஒலிக்கும்

அதிகாரக் குரலுக்குப் பயந்து

பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்

தண்ணீர் போகாமல்

வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன

நாப்கின்களால் நிறையும்

கழிப்பறை பீங்கான்கள்.


தினம் பத்து பேர்

அந்த நேரத்துக்குப்

போக மாட்டேன்றீங்க

என்ன சொன்னாலும்

உங்க இஷ்டத்துக்குத்தான்

போவீங்க

பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது

அதிகாரத்தின் குரல்


கூச்சம் தொலைக்கலாம்

நின்று மாற்றவாவது

இடம் வேண்டுமல்லவா

கழிப்பறையில்.


மாசத்துக்கு

மூணு, நாலு நாள்

லீவு எடுத்தா என்ன பண்றது?

பதில் எதிர்பார்க்காமல்

ஒலிக்கும் கேள்வி

அறை முழுதும் பரவும்

வெட்கம் பூசிய சிரிப்புகளும்

நமுட்டுப் புன்னகைகளும்

வலி தோய்ந்த மௌனங்களும்

ஆங்காங்கு எழும்

கொடுக்குள்ள விலங்கொன்று

விஷம் இறக்கிய மகிழ்வில்

இடம் நகரும்.

(இந்தக்கவிதை ஒரு சமூக அக்கறையுள்ள ஆசிரியையின் பார்வையில் எழுதப்பட்டது. கவிதையில் வரும் அதிகாரக்குரல்கள் ஆசிரியைகளுடையது என்பதுதான் வேதனை.)


இக்கவிதை 23-2-2011 அன்று ஆனந்தவிகடனில் வெளிவந்த கவிதை..இது கற்பனைக்கவிதையல்ல..தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் மாணவிகள் அனுபவித்துவரும் நிஜம்....பெண்கல்வி பெருக வேண்டுமானால்..இத்துயரத்திற்கு தீர்வுகண்டாக வேண்டும்..இதோ ஒரு தீர்வு......

இப்பிரச்சனைக்கான தீர்வாகதிருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 1997-ம் ஆண்டிலிருந்து எங்களின் சுயமுயற்சியின் காரணமாக படத்தில் உள்ளது போன்ற நாப்கின் பாய்லரை வடிவமைத்து பயன்படுத்தி வருகிறோம்..ஒரே சமயத்தில் 4 மாணவிகள் சுகாதார முறையில் பயன்படுத்தலாம். தண்ணீர் வசதி,சோப்பு போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியின் நாப்கின் பாய்லரின் படம்.


ஏன் வேண்டும் சானிட்டரி பாய்லர்?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறி பெண்கல்விக்கு முட்டுக்கட்டை போட்ட சமூக அமைப்பைக்கேள்விக்குறியாக்குகிற வகையில் கட ந்த சில பத்தாண்டுகளாக பெண்கள் கல்விச்சாலைகளில் பயின்று வருகிறார்கள். 2011-ல் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி இந்தியளவில் கல்விகற்ற பெண்கள் 65% சதமாகும். இது 2001-ல்(53%) இருந்ததைவிட 12% சதம் அதிகமாகும்.அதே சமயம் ஒன்றாம் வகுப்பில் சேரும் பெண்கள் 8-ம் வகுப்பு வரும்போது இடைவிலகல் அதிகமாக இருக்கிறது. இதற்கு குடும்ப சூழ் நிலைமை மட்டுமல்ல,பள்ளியில் பெண்குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும்,தண்ணீர் வசதியும் இல்லாததும் காரணமாகும். இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்துவகையான பள்ளிகளிலும் 70% பள்ளிகளில் டாய்லெட் வசதி இல்லை! 54% பள்ளிகளில் தண்ணீர் வசதியில்லையாம்! இதன் காரணமாகவே 7 & 8-ம் வகுப்பு வரும்போது வயதுக்கு வந்துவிடுவதால் 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்களாம்!

1990-ம் ஆண்டு ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3000-ம் மாணவிகள் கல்வி பயின்ற போதும்(2011-ல் 7200 மாணவிகள்) நவீன கழிப்பறையில்லாமல்,உலர் கழிப்பறைகளால் மாணவிகள் மிகவும் துன்பப்பட்டனர்.மாதத்திற்கு ஒரு நாளாவது லீவு எடுக்கவேண்டிய நிலமை! 1993-ல் கோவைமாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு.சி.வி.சங்கர் அவர்கள் துணை மற்றும்,பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 20 நவீன டாய்லெட்டுகள் கட்டப்பட்டு,பள்ளிக்கூடத்தின் குப்பைகளைப்போடும் குப்பைத்தொட்டியாக இருந்த கிணறு தூர்வாரப்பட்டு தண்ணீர்வசதியும் செய்யப்பட்டது. மாணவிகள் உபயோகிக்கும் நாப்கின்கள் அடிக்கடி டாய்லெட்டில் அடைத்துக்கொள்வது பிரச்சனையாக இருந்தது. 1997-ம் ஆண்டில் பிரச்சனை பெரியதாக மாறியது..டாய்லெட் சுகாதாரப்பணியாளர் அடைப்புகளை எடுக்கமுடியாமல்,வேலையே வேண்டாம என்று ஒரு சனிக்கிழமை சம்பளத்தை வாங்கிக்கொண்டு நின்றுவிட்டார். என்ன செய்வது? எனக்கு ,திங்கள் கிழமை மாணவிகள் எப்படி டாய்லெட்டை பயன்படுத்துவார்கள் என்ற கவலை! வேறு ஆட்கள் கிடைக்கவில்லை.. நானும்,பகல் காவலரும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் போராடி அடைப்பை நீக்கினோம்..இதற்கு என்ன தான் வழி! ஒரு வாரம் இதே யோசனை! இரவு தூக்கமே வராது..ஒரு வாரம் கழித்து பிரச்சனைக்கு மாற்றுவழி கண்டுபிடித்தேன். கிணற்றின் மேல் உபயோகப்படாமல் இருந்த பழைய இரும்பிலான தண்ணீர் டிரம்மை கீழே இறக்கினேன்..அதில் சில மாற்றங்களைச்செய்து புகை போக்கியுடன் கூடிய பாய்லராக்கினேன். அதன் இருபுறமும் 2 பாத்ரூம் அமைத்தேன். பாத்ரூம் செல்லும் மாணவிகள் சிலிண்டரில் உள்ள சிறிய திறப்பானைத்திறந்து துணியை போட்டுவிடலாம்..மாலையில் சிலிண்டரின் கீழேயுள்ள கதவைத்திற ந்து சீமெண்ணை ஊற்றி எரித்துவிடலாம்..இப்படியாக டாய்லெட் அடைப்புக்கு தீர்வு கண்டேன்.. ஒரு நகராட்சிப்பள்ளியில் இப்படியொரு வித்தியாசமான முயற்சியைக்கண்டு, 1997-ம் ஆண்டு மங்கையர் மலர்,மகளிர் சிந்தனை,மாலைமலர் போன்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன 2006-ம் ஆண்டு பழைய இரும்புக்கடையில் சிலிண்டர் வடிவ குழாயை வாங்கி 2 பாய்லரும், 4 பாத்ரூம் நவீன முறையில் ரூ.30,000-த்தில் கட்டியுள்ளோம். இதைக்கேள்விப்பட்டு திருப்பூர் பகுதிகளில் உள்ள மில்,கல்லூரிகளில் இருந்து பார்வையிட்டுச்சென்று இதைப்போன்ற பாய்லரை நிறிவியுள்ளனர். மேலும் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த திரு.சி.கார்மேகம் அவர்கள் இம்மாதிரியை கோவை மாவட்ட அரசு பெண்கள் பள்ளிகளில் செயல் படுத்த முயற்சி எடுத்துள்ளார். தற்போது தொழில் ரீதியாக மின்சாரம் மற்றும் எல்.பி.ஜி. கேஸ் கொண்டு பயன்படுத்தும் நாப்கின் பாய்லர்களைத்தயாரித்து பெண்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு விற்று வருகிறார்கள்.

மத்தியரசின் RMSA திட்டம் மூலமாக பெண்கள் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..வெறும் கழிப்பறைகள் மட்டும் கட்டுவதைவிட, சானிட்டரி நாப்கின்களை எரிக்கும் பாய்லர் & பாத்ரூம் வசதியுடன் அமைக்க தமிழகரசும்- கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

6 comments:

 1. உங்களின் அனைத்து முயற்சிகளையும் அறிந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நகரத்து அரசுப்பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்னும்போது கிராமத்துப்பள்ளிக்கூடங்களில் கேட்கவே வேண்டாம். கிராமத்துப்பள்ளி ஒன்றில் பல வருடங்களுக்கு முன் ஆசிரியையாக இருந்து இந்த மாதிரி, மற்றும் வெவ்வேறு பிரச்சினைகளை சந்தித்தவள் நான். கிராமத்துப்பள்ளிகளுக்கு என்று விடிவு வருமோ தெரியவில்லை. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அவைகளுக்குக் கிடைத்த வெற்றிகளுக்கும் என் பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 2. Mano saminathan avarkalukku,thankal paaradduthalkalukku enathu manamaarntha nanrikal.

  ReplyDelete
 3. அன்புடையீர் வணக்கம்! கிராமப்புற பள்ளிகளின் பால் அக்கறை கொண்ட ஒரு குருவிடம் இருந்து முதன் முதலில் எனது பணிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!எனது 21 வருட அனுபவங்கள் அவ்வப்போது பல்வேறு செயல்பாடுகளின் வடிவில் அரங்கேறும்! யாராவது ஒருவர் ஏதாவது ஒரு அரசுப்பள்ளியை மாற்றுவதற்கு துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன்.

  ReplyDelete
 4. அருமையான கண்டுபிடிப்பு ஐயா! நல்ல சிந்தனையும் கூட! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. Settings - comments - show word verification for comments - என்பதில் No என்பதை தேர்வு செய்யவும் ஏனெனில் நாங்கள் ரோபார்ட் அல்லவே ஐயா :) :) :)

  ReplyDelete

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...