Sunday, September 16, 2012

அக்கிரமம்!.மாநகராட்சிப்பள்ளி இடத்தை ஆக்கிரமித்த ரோட்டரி கிளப்பினர்...


கல்வித்தாஜ்மஹாலை ஆக்கிரமிப்பு செய்த திருப்பூர் ரோட்டரி கிளப்பினர்..

உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றி அனைவரும் அறிவோம். அதென்ன கல்வித்தாஜ்மஹால்.?.எனக்கேட்கிறீர்களா...திருப்பூரில் ஜெய்வாபாய்  நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குத்தான் கல்வித்தாஜ்மஹால் என்ற புனைப்பெயர் உண்டு...திரு.டி.ஓ. ஆஷர் என்பவர் 1948-ம் ஆண்டு தனது மனைவியின் கடைசி வேண்டுகோளுக்கிணங்க முதன் முதலில் திருப்பூரில் ஒரு பெண்கள் பள்ளியைத்தொடங்கி அதை நகராட்சிக்குத்தானமாக வழங்குகிறார். ஒரு முறை இப்பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல  சாகத்தியவிருது பெற்ற  நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைப்படித்துவிட்டு, 6000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கல்விகற்கும் இப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மஹால் எனப்பெயரிட்டழைத்தார்.


                                     

 ஜெய்வாபாய் பள்ளி 
வரலாறு..

            திருப்பூரில் பஞ்சு வியாபாரத்தில் சிறந்து விளங்கியவர் தேவ்ஜி ஆஷர். இவரது மனைவி ஜெய்வாபாய். தனது 33 வது வயதில் 4 வது பிரசவத்தின்போது ஏற்பட்ட உடல் நலக்கோளாறால், இறக்கும் தருவாயில் தனது கணவரிடம், திருப்பூரில் பெண்களுக்கென்று தனியாக பள்ளி கட்டுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார். தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில் 1942-ம் ஆண்டு ஷீமதி ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷர் உயர் நிலைப்பள்ளியை ஆரம்பித்து நகராட்சிக்கு வழங்குகிறார். இந்தியளவில் 7000-த்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவிகள் கல்விபயில்கின்ற  பெண்கல்வியில் முத்திரைபதிக்கும்..  ஒரு நகராட்சிப்பெண்கள் பள்ளி...இதன் மீது யார் வழக்குத்தொடுக்க முடியும் என்ற வினா ஏற்படுவது சகஜம் தான்.....அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்....அப்படியானால் இதற்குப்பின் வசதியும் அரசியல் செல்வாக்கும் பெற்றவர்களாலதான முடியும் என நீங்கள் நினைத்தால், அது சரிதான்...இந்த விசித்திர வழக்கை கீழே பாருங்கள்..

ரோட்டரி பள்ளி பெயர் பலகை
      

      இந்த தீர்ப்பு பற்றி 29-7-2005-ம் தேதி தீக்கதிர் நாளிதழில் அதன் நிருபர்.

திரு.வே.தூயவன் அவர்கள் முக்கியமானதை எழுதியுள்ளார். ( நன்றி: தீக்கதிர்.) அதிலிருந்து எடுத்து எழுதப்பட்டது..

         திருப்பூர் நகரின் இதயப்பகுதியில் 1942-ம் ஆண்டு முதல் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளிக்கூடம் சுமார் ஏழரை ஏக்கரில் செயல்பட்டு வந்தது. இப்பள்ளியின் தெற்குப்பகுதியில்  திருப்பூர் ரோட்டரி சங்கம் மழலைகள் பள்ளி நடத்துவதற்கு 1960-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆலோசனையை மீறி  நிபந்தனையுடன் வழங்கியது. ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி வளாகத்திற்குள் சிறுவர் பள்ளி(மாண்டிசோரி) மாதர் பூங்காவும் அமைத்து மீண்டும் நகராட்சிக்கே ஒப்படைத்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

ஜெய்வாபாய் பள்ளிக்குள் ரோட்டரி பள்ளி

          திருப்பூர் நகராட்சியின் நிபந்தனைப்படி, மாண்டிசோரி பள்ளியமைத்த ரோட்டரி கிளப்பினர் மாதர் பூங்கா அமைக்கவில்லை..மேலும் தாங்கள் ஒத்துக்கொண்டபடி மாண்டிசோரி பள்ளியை(  ரோட்டரி சங்கத்தின் கொள்கைகளை மீறி) நகராட்சிக்கு வழங்காமல் தாங்களே வைத்துக்கொண்டு, பள்ளியை நடத்தியதோடு, தங்கள் வாராந்திர கிளப் நடவடிக்கைகளையும் ( தண்ணியடிப்பது, மட்டன் சாப்பிடுவது , யாரவது ஏழைகளுக்கு சிறு உதவி செய்வது உட்பட) செய்து வந்தனர். இந்த நிலையில் 1987-ம் ஆண்டு ரோட்டரி கிளப்பினரின் வேண்டுகோளை ஏற்றும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தை 99 வருட குத்தகைக்கு வழங்க நகராட்சி நிர்வாகமும், மாநில அரசும் தாரை வார்க்க முடிவு செய்தன. நகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் வந்தது..அப்போதைய மார்க்சிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் திரு.என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டது. இதில் என்ன கொடுமையென்றால்...ஒரு நகராட்சிப்பெண்கள் பள்ளியின் இடத்தைத்தாரைவார்க்க, சி.பி.ஐ.(எம்) கட்சி தவிர பிற அனைத்து கட்சிகளும் , பணவசதியும் செல்வாக்குமிக்க ரோட்டரிகிளப்பினருக்கு ஆதரவாக இருந்தனர் என்பது தான் (அன்று பறம்பு மலையை முற்றுகையிட்டு, பாரி என்ற அரசனைக்கொல்ல ஒன்று சேர்ந்த சேர, சோழ ,பாண்டிய மன்னர்கள் போன்று) கொடுமை. இதையறிந்த பள்ளி தலைமையாசிரியை, பிற ஆசிரியைகள் அனைவரும்  நகர் மன்றம் சென்று ரோட்டரி பள்ளிக்கு இடம் கொடுப்பதற்கு ஆட்சேபனை செய்தனர்.
ஜெய்வாபாய் பள்ளி கலையரங்கம்.
                                                      
காலை வழிபாட்டு கூட்டம்..
        இப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் என்ன செய்தது என்ற கேள்வி வருகிறதா? ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் தான் ரோட்டரி பள்ளியின் தாளாளர். அது மட்டுமல்ல அன்றைய நகர்மன்றத்தலைவரின் உற்ற நண்பர்.. 1988-ம் ஆண்டு , நகர் மன்ற ஆணையாளரின் எதிர்ப்பை மீறி,  சி.பி.ஐ.(எம்) கட்சியினரை சூழ்ச்சி செய்து வெளியேற்றிவிட்டு,  நகர் மன்றத்தில், ரோட்டரி பள்ளிக்கு ஒரு ஏக்கர் இடத்தைத்தர தடையின்மைச்சான்று வழங்கிட  தீர்மானம் போட்டனர்.., நகராட்சி ஆணையாளரை மீறி இந்த தீர்மானம் வந்ததாலோ என்னவோ தெரியவில்லை, ஆணையாளர் தீர்மானத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பாமல், சென்னையில் உள்ள நகராட்சி மற்றும் குடி நீர் வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டார். இதற்கிடையே ரோட்டரி பள்ளியினர் தங்களது மாண்டிசோரி பள்ளியை 5-ம் வகுப்பு வரை நர்சரி & பிரைமரி ஆங்கில வழிப்பள்ளியாக மாற்றி விட்டனர். நர்சரி பள்ளி விதிமுறைகளுக்குப்புறம்பாக சங்க கூட்டங்கள் உட்பட இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன  இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது..          1990-ம் ஆண்டு ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் இணைந்த என். கோபாலாகிருஷ்ணன் மூலம் பள்ளியின் இடம் ரோட்டரி கிளப்பினர் ஆக்கிரமித்துள்ளனர் என்ற செய்தி தெரியவந்தது..அதிலிருந்து பள்ளியின் இடம் சம்பந்தமாக ஆறு ஆண்டுகள்  கடிதம், தீர்மானம் என பல்வேறு வகையிலும் தமிழகரசிற்கு பல முறை முறையிட்டும் எதுவுமே நடக்கவில்லை...ஏனென்றால்  நகர்மன்றத்தலைவர் அ.தி.மு.க.வாக இருந்தாலும் , தி.மு.க.வாக இருந்தாலும் அவர்கள் பணக்கார ரோட்டரி கிளப்பினரின் பாசப்பிணைப்பில் இருந்ததால் எங்களின் கோரிக்கையெல்லாம்...குப்பைக்கூடைக்கே போயின.. 1996-ம் ஆண்டு அன்றைய தமிழகரசு, ரோட்டரி பள்ளிக்கு ஜெய்வாபாய் பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தை  99 வருட கால குத்தகைக்கு தர இருப்பதாக கடிதம் மூலம் தாசில்தார் தெரிவித்தார். அப்போது ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 5000-த்தைத்தாண்டியது..விளையாட்டு இடம் போன்றவை குறைந்தால் பள்ளி அங்கீகாரம் போய்விடும், பள்ளிக்குத்தேவையான அனைத்து வசதிகளும் செய்வதற்கு இடம் இருக்காது.....என்ன செய்வது எனத்தெரியவில்லை.

        .அந்த சமயத்தில் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் திரு. கே.சந்துரு அவர்களின் வாதத்திறமையும்,, ஏழை பாழைகளின் பக்கம் நின்று நியாயத்திற்கு போராடுபவர் என பத்திரிக்கை வாயிலாக கேள்விப்பட்டு, அவரிடம் பாரத குடியரசு தலைவருக்கு வரவேற்பு..
சென்றோம்..அவரும் எங்களின் நியாயம் அறிந்து சென்னை உயர் நீதி மன்றத்தில், தமிழகரசு, பள்ளி இடத்தை ரோட்டரி பள்ளிக்குத்தருவதற்கு தடையானை பெற்றுத்தந்தார். தற்காலிகமாக பள்ளி இடம் பறிபோவது தடுக்கப்பட்டது..ஆனால் பள்ளிக்குள் ரோட்டரி பள்ளியினர் தங்களது பள்ளி உட்பட அனைத்துவித நடவடிக்கைகளயும்  தமிழகரசு மற்றும் நகர்மன்றத்தின் ஆதரவுடன் தொடர்ந்தனர். கூடவே ஜெய்வாபாய் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகளை விலைக்கு வாங்கப்பார்த்தனர்...மசியவில்லை என்றபோது அரசியல் ரீதியாக மிரட்டலும் வந்தது...பெற்றோர்-ஆசிரியர் கழகத்திற்கு ஆதரவாக சி.பி.ஐ.(எம்) இருந்த காரணத்தால் அடக்கியே வாசித்தனர்.

         ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை சார்பாக திரு.என்.கோபாலாகிருஷ்ணன் தாக்கல் செய்த இந்த வழக்கு(W.P.19362 of 1996) , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரணியம் முன்னிலையில் விசாரனை நடைபெற்றது. ரோட்டரி கிளப்பினருக்கு ஆதரவாக தமிழகரசும், நகராட்சியும் ஆஜராகி வாதிட்டனர் ஜூன் 24-ம் தேதி 2005-ம் ஆண்டு நீதியரசர் சிவசுப்பிரணியம் அவர்கள் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை, ஜெய்வாபாய் பள்ளிக்கு ஆதரவாகத்தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் மாநில அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கடுமையாக விம்ர்சித்துள்ளார். மேலும் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியைப்பாராட்டியுள்ளார்.

         இந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக திருப்பூர் நகராட்சி ஆஜராகியிருப்பது மிகவும் முறையற்ற செயல். பிரச்சனைக்குரிய இடத்தை தனியாருக்கு நகராட்சி வழங்கியது சட்ட விரோதமானது. அந்த இடத்தில் ரோட்டரி சங்கம் தொடர்ந்து இருந்தது எந்த வகையிலும் முறையில்லாதது. திரும்ப ஒப்படைப்பதாக கூறிய இடத்தி ஏதோ ஒரு வகையில் கைப்பற்ற ரோட்டரி சங்கம் முயன்றதி எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

          தனியார் சங்கத்தின் குறுகிய நலனுக்காக நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறி அவர்களுக்கு.வளைந்து கொடுத்திருப்பது எதிர்பாராதது. விதி முறைகளை மீறியது மட்டுமின்றி ரோட்டர் சங்கத்திற்கு குத்தகைக்குவழங்க வேண்டும் என்று மாநில அரசு அனுமதித்திருப்பது வருந்தத்தக்கது. நகராட்சி பள்ளிக்கு உரிய சொத்தின் ஒரு பகுதியில் ரோட்டரி கிளப் கட்டடம் கட்டிக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததன் மூலம் , சட்ட விரோத நடவடிக்கை நியாயமானது ஆகிவிடாது.                       

தினமணி செய்தி...
           உள்ளூர் வருவாய்த்துறையும், கல்வித்துறையும்,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகமும், பொதுமக்களும் இடத்தை மாற்றிக்கொடுக்க கடும் எதிர்ப்பைத்தெரிவித்துள்ளனர்.  எனினும் ரோட்டரி சங்கம் விதிமுறைகளுக்கு புறம்பாக மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துவதற்கு ஆதரவாக மா நிலஅரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. ஒரு பள்ளிக்கு அருகில் மற்றொரு பள்ளி நடத்துவதற்கு எவ்வளவு தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதியையும் அரசு புறக்கணித்துள்ளது.

           இந்தப்பிரச்சனைகளோடு நேரடி தொடர்பு கொண்ட அனைத்துத்தரப்பினரின் நியாயமான ஆட்சேபணைகளையும் மாநில அரசும், நகராட்சியும் புறக்கணித்திருப்பது துரதிருஷ்டவசமானது. இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நம் நாட்டின் மிகப்பெரிய பெண்கள் பள்ளிக்கூடங்களில் ஒன்றின் சொந்த இடத்தை தனியார் சங்கத்துக்கு வழங்க அரசும் நகராட்சியும் உறுதியுடன் செயல்பட்டுள்ளனர். இதற்காக சட்ட விரோதமாக செயல்படவும் நகராட்சி தயாராகியுள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் திருமதி ஆர்.ஜரீன் பானு பேகம்..

            இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர்(திருமதி.ஜரீன் பானு) விருது பெற்றுள்ளார்.  நம் நாட்டின் குடியரசுத்தலைவரும்(மேன்மை மிகு டாக்டர் அப்துல்கலாம்) மாநில முதலமைச்சரும்(மாண்புமிகு ஜெ.அம்மா அவர்கள்) பாராட்டியுள்ளனர். பல்வேறு சமூக நல நடவடிக்கைகளில் இந்த பள்ளி மாணவிகள் விருதுகள் பெற்றுள்ளனர். பல்வேறு கல்வியாளர்கள் இப்பள்ளி வளர்ச்சியைப் பாராட்டியுள்ளனர்.

            இந்த வகையில் இந்த பள்ளிக்கூடம் ஒரு புதுமையான மிகவும் அரிதான கல்வி நிறுவனம் ஆகும். அதுவும் நகராட்சியால் நடத்தப்படும் இந்த பள்ளி எந்த ஒரு தனியார் பள்ளியோடும் ஒப்பிட்டாலும் சிறப்பானதாக திகழ்கிறது. இப்படிப்பட்ட நகராட்சிப்பள்ளிக்கு, சிலரது நிர்பந்தத்திற்கும், குறுகிய நலன்களுக்காகவும் அதே நகராட்சியால் பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது.அதுவும் பள்ளியின் இடம் குறைந்தால் ஏற்படும் மோசமான பாதிப்பை பற்றியும் நகராட்சி புத்தியில்லாமல் இடத்தை ஒதுக்க முயன்றுள்ளது. எனவே நகராட்சியின் ஒட்டு மொத்த செயல்பாடும் சட்ட விரோதமானது.

 v    ஜெய்வாபாய் பள்ளி பருந்துப்பார்வை.ய்ஜெ
                                                                        எல்லோரையும் ஒதுக்கிவிட்டு.     அரசும் நகராட்சியும் , ஆசிரியர்கள், பொதுமக்களின் ஏகோபித்த கோரிக்கையையும் நிராகரித்தது துரதிருஷ்டவசமானது..மேலும் இப்பிரச்சனையை நேரடியாக கையாளக்கூடிய சம்பந்தப்பட்ட கல்வித்துறை, உள்ளூர் வருவாய்த்துறையினரின் நியாயமான ஆட்சேபனைகளையும் இவர்கள் புறக்கணித்துள்ளனர். இத்துடன் நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தனியார் கிளப் ஒன்று கான்வெண்ட் அமைப்பதற்கு சாதகமாக உறுதியாக செயல்பட்டுள்ளனர். இந்த விசயத்தில் அரசே ஒப்புக்கொண்டுள்ள படி நகராட்சி சட்ட விரோதமாக செயல்படவும் துணிந்துள்ளனர் என்பதை ஒட்டு மொத்த நிலவரங்களும் வெளிப்படுத்துகின்றன.

                                        - நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம்..            எனவே ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் பள்ளிக்கு ஒட்டுமொத்த நிலத்தின் மீதும் முழு உரிமை உள்ளது. இந்த நிலத்தில் பிரச்சனைக்குரிய பகுதியை 2006-ம் ஆண்டு ஜீன் 1-ம் தேதிக்கு முன்பாக ஜெய்வாபாய் பள்ளிக்கு வழங்கிட வேண்டும் என்று நீதிபதி சிவசுப்பிரமணியம் அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளார்.


        மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து ரோட்டரி பள்ளி நிர்வாகத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு (W.A.No. 2211 of 2005 ) செய்தனர்.( அதே சமயத்தில்  தங்களுக்கிருந்த அரசியல் செல்வாக்கைப்பயன்படுத்தி பெ.ஆ.கழகத்தலைவர் ஆ.ஈசுவரனை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்கக்கூறினார்கள். அவர் மறுக்கவே,  ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தையே கல்வித்துறையின் மூலம் 9-1-2006 அன்று கலைத்துவிட்டனர். மீண்டும் நடந்த தேர்தலில் 9 முனைப்போட்டியில் ஆ.ஈசுவரன் 99% சதமான வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.) இதன் மீதான தீர்ப்பை நீதியரசர்கள் எலிபி தர்மாராவ் மற்றும் எஸ்.ஆர்.சிங்காரவேலு இருவரும் 28-2-2008-ல் வழங்கினார்கள். அதில் ஏற்கனவே 24-6-2005-ல் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் எனக்கூறி ரோட்டரி கிளப்பினர் தாக்கல் செய்த ரிட் மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.

            இந்த தீர்ப்பின் மீதும் சமாதானம் ஆகாத ரோட்டரி கிளப்பினர் மீண்டும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனுவை (Review Application No, 61 of 2008 )  தாக்கல் செய்தனர்..இதே சமயம் ரோட்டரி பள்ளிக்கான அங்கீகாரத்தை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் (.ஏனென்றால் அரசு விதி 10(1)ஏபி-ன் படி, ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற அந்தப்பள்ளியின் பெயரில் இடப்பத்திரம் இருக்க வேண்டும், அல்லது 30 வருட வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விதிகளையும் தனியார்பள்ளிகளுக்கு கறாராக அமுல்படுத்தும் மெட்ரிகுலேசன் கல்வித்துறை 40 ஆண்டுகளாக ரோட்டரி பள்ளிக்கு மட்டும் அமுல்படுத்தவில்லை.) கோர்ட் தீர்ப்பையொட்டி ,புதுப்பிக்க மறுத்துவிட்டார். எனவே அவர்கள் மீதும் Writ Petition Nos 14670 and 14671 of 2008  வழக்குப்போட்டனர்.           மேற்கண்ட வழக்கின் மீதான தீர்ப்பு 22-10-2010-ல் வந்தது. அதிலும் ரோட்டரி கிளப்பினர் தாக்கல் செய்த அனைத்து பெட்டிசன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதற்குப்பிறகாவது உலகாளவிய ரோட்டரி கிளப்பின் ஒரு அங்கமான திருப்பூர் ரோட்டரி கிளப்பினர், ரோட்டரி கிளப்பின் கொள்கை, 

கோட்பாடுகளுக்கு எதிராகவும், கோர்ட்டில் தாக்கல் செய்த உறுதிமொழிக்கு மாறாகவும் , தங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு ரோட்டரி பள்ளியை மாற்றவில்லை.  மாறாக மேற்கண்ட தீர்ப்பையும் எதிர்த்து ,ஈகோவின் காரணமாக  சுப்ரீம் கோர்ட்டிற்கு (எண்: 4053/2011) சென்றுள்ளனர்.  ஈகோவா..ஆம் ஈகோதான்..ஒரு சாதாரண நகராட்சிப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், சமூகத்தில் செல்வமும், செல்வாக்கும் பெற்ற மல்டி மில்லியனர்களான ரோட்டரி நிர்வாகத்தினருக்கு எதிராக, நகராட்சி மற்றும் தமிழக அரசையும் எதிர்த்து 1996 முதல் சளைக்காமல் போராடி வருபவர்கள் டெல்லி வரை வர  நேரமும், பணமும் இருக்காது..மேலும் அதற்குள் தங்களுக்கு ஆதரவான நபரை  பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவராக்கிவிட்டால் வழக்கை வாபஸ் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தின் காரணமாகவே சுப்ரீம் கோர்ட்டிற்கு வழக்கை எடுத்துச்சென்றுள்ளனர்.. வெல்லுமா...பெண்கல்வி..? 

        

Sunday, July 22, 2012

அரசுப்பள்ளிகளில் விலையில்லா மடிக்கணணிகள்....

    திருப்பூர்   ஜெய்வாபாய் பள்ளியின் 1101-மாணவிகளுக்கு மடிக்கணணி....

 திருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2011-12-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பயின்ற 1100 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணணி வழங்கும் விழா 21-7-2012 அன்று மதியம் 12  மணியளவில் நடைபெற்றது..விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.கஜலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.  விழா புகைப்படக்காட்சிகள்...


 

மேடையில் வைக்கப்பட்ட விழா பற்றிய பேக் ட்ராப்..

கலையரங்கத்தில் அமர்ந்துள்ள 2011-12-ல் அ12-ம் வகுப்பு பயின்ற  ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஒரு பகுதி.
 மாண்புமிகு தமிழக இந்து அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை வரவேற்க காத்திருக்கும் பள்ளி பேண்ட் வாத்தியக்குழு மாணவிகள்.மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வி.ஐ.பி. சல்யூட் . மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு முதமைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி அவர்கள் கல்வித்துறையின் சார்பாக புத்தகம் வழங்கி வரவேற்கிறார்திருப்பூர் மா நகராட்சி துணை மேயர் திருசு.குணசேகரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கப்படுகிறது..

 முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமதி. நூர்மாலிக் அவர்கள் விழாவினை கவனிக்கிறார்.


ஜெய்வாபாய் பள்ளியின் கலையரங்க மேடை மிகப்பிரம்மாண்டமானது. விழாவானது அதைவிடப்பிரம்மாண்டமானது.ஏனென்றால் தமிழகத்திலேயே இப்பள்ளியில் மட்டுமே  1100 மாணவிகளுக்கு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மடிக்கணணி வழங்கப்படுகிறது...மேடையின் பேக் ட்ராப் இன்னும் பெரிதாகவும், விழா மேடையில் உட்காருபவர்களின் த்லைக்கு மேலாக எழுத்துக்கள் தெரியும்படி மேலே தூக்கி அமைத்திருந்தால் இன்னும் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.. மேடையில் வீற்றிருப்பவர்கள் உட்கார்ந்தவுடன்  மாண்புமிகு தமிழக முதல்வரின் பெயர் மற்றும் விபரம்  மறைக்கப்பட்டு விட்டது...உயரமான மேடைக்குக்கீழே அமர்ந்திருப்பவர்களுக்கு மேடையின் பேக் ட்ராப் தெரியவாய்ப்பில்லை. ஜெய்வாபாய் பள்ளியின் முன்னாள் மாணவி நந்தினி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த விழாவினைக்காண வருகை புரிந்தார்.விழாவிற்கு தலைமை தாங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கஜலட்சுமி அவர்கள், தமிழக முதல்வர் மாணவிகளுக்கு வழங்கியுள்ள மடிக்கணணியை ஆக்க பூர்வமாகப்பயன்ப்டுத்த வேண்டும் என்றும், ஃபேஸ் புக் பக்கம் போய் தங்கள் பொன்னான நேரங்களை வீணாக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். விழாவில் உரையாற்றிய வணக்கத்திற்குரிய திருப்பூர் மா நகர மேயர் திருமதி அ.விசாலாட்சி அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடுபடுகிறார், உங்களுக்காகவே சிந்திக்கிறார் என்றார். இவருடைய உரையில் ஜெய்வாபாய் பள்ளியின் வரலாற்றைக்கூறிய போது மாணவிகள் கண்கலங்கினர்..இவருடைய உரை மாணவிகளைக்கவர்ந்தது...மிகச்சிறந்த பேச்சாளர் அல்லவா?மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும்போது, கொஞ்ச நேரம் முன்பு பிசப்பள்ளியில்  நான்கு பள்ளிகளைச்சேர்ந்த 1115 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணணிகள் தந்தோம்...ஆனால் இங்கு இந்த ஒரு பள்ளியில் மட்டும் 1101 மாணவிகளுக்கு தரப்படுகிறது..மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..ஜெய்வாபாய் பள்ளிக்கு மட்டும் 144 புதிய ஆசிரியைகள் நியமிக்கப்பட உள்ள்னர் என்ற செய்தியை  கூறிய போது அரங்கமே அதிர்ந்தது....

ஜெய்வாபாய் பள்ளியின் 12-ம் வகுப்பில் பயின்ற 1101 மாணவிகளுக்கும் தரமுடியாத காரணத்தால், 12-ம் வகுப்பில்  முதல் 4 இடங்கள் பெற்ற 5 மாணவிகளுக்கு அமைச்சர் அவர்கள் மடிக்கணணிகளை வழங்கினார்.


 மாணவிகள் சார்பாக செல்வி செந்தூர்ப்பிரியா மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

                  

Thursday, May 10, 2012

பெற்றோர்களும்-மாணவிகளும் பார்க்க வேண்டிய சினிமா..             இது வரை எனது பிளாக்கில் சினிமா பற்றி எழுதியதில்லை..கல்வி சம்பந்தமான எனது அனுபவங்களை எழுதுகிறேன்.. ஒரு மாறுபட்ட முயற்சியாக  வழக்கு எண் 18/9 - சினிமா பற்றி எழுதவேண்டியதாகி விட்டது..இது கல்வி பற்றி இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இன்று மாணவிகள் கல்வியை இழப்பதைத் தடுக்கக்கூடிய முறையில் ஒரு விழிப்புணர்வு படமாக நான் பார்ப்பதால் இதை எழுத வேண்டியதாகி விட்டது...
  
             காலம் மாறிக்கொண்டே வருகிறது...சினிமா என்பது மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி, மனதில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சுமார்.. 40/50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கதாநாயகர்களின் காதலில் ஒரு முதிர்ச்சி இருந்தது..சுமார் 30 வயதிற்கு மேலானவர்கள், குடும்பத்தை நடத்திட ஒரு வேலையோ, தொழிலோ இருப்பவர்கள் தான் காதலிக்கவேண்டும் என்ற பிம்பத்தை  அன்றைய சினிமாக்கள் நமக்கு ஏற்படுத்தியது..பின் ஜெயசங்கரும், ரவிச்சந்திரனும், கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் வந்த போது 20/25 வயதுள்ள இளைஞர்கள் காதலிக்கலாம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியது...பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் வந்த போது, மீசை முளைக்காத பள்ளி மாணவர்கள் கூட காதலிக்கலாம், குடும்பம் நடத்தலாம் என்ற மாயச்சித்திரத்தை ஏற்படுத்தியது..இன்றும் இது தொடர்கிறது..சின்னப்பசங்களும், சின்னப்புள்ளைகளும் காதலித்து கட்டிப்பிடித்து திருமணம் செய்வதைக்காட்டும் படங்கள் அவர்கள் வருமானம் இன்றி வாடுவதைக்காட்டுவதில்லை.
.
              .பெண்ணின் திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் கூறினாலும்  பெண்ணின் காதலிக்கும் வயது 12/13 என்று சினிமாக்கள் கூறுகின்றன.....இதனால் என்ன நடக்கிறது?  இது நான் கண்ணால் கண்டு, காவல் நிலையத்திற்கும், பெற்றோர்களின் வீட்டிற்கும் அலைந்த அனுபவம்..  தமிழகத்தின் ஒவ்வொரு பெண்கள் பள்ளியாகட்டும், அல்லது இருபாலர் படிக்கும் பள்ளியாகட்டும், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு, காதல், கேர்ள்பிரண்ட், பாய் பிரண்ட் என்ற கலாச்சாரத்தால்  உடல் இச்சைக்கு முதலிடம் கொடுத்து, பள்ளிப்படிப்பை  கைவிடும் மாணவிகள் ஆண்டிற்கு குறைந்தது 5 பேர்களையாவது  ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் காணலாம்..போதாதற்கு காதலர் தின கொண்டாட்டங்கள் என்று  ஊடகங்கள் வாயிலாக (பன்னாட்டு அழகு சாதன கம்பெனிகளின் விளம்பர உத்தியால்) 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளிடையே கூட தனக்கு ஒரு பாய்பிரண்ட் இல்லையே, ஒரு கேர்ள் பிரண்ட் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

                ஒரு புறம் தமிழகரசு பெண்கல்வி பெருக பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்ற வேலையில், இந்த பாழாய்ப்போன சிறுவயது உடல் ஈர்ப்பை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு, ஆண்டுக்காண்டு மாணவிகள் படிப்பை விட்டுப்போவது, தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது..கடந்த 20 ஆண்டுகளில்  ஆசிரியரே மாணவியை அழைத்துக்கொண்டு ஓடியது, 8-ம் வகுப்பு மாணவி எவனோ ஒரு பனியன் தொழிலாளியை நம்பி ஓட, அவன் அந்த மாணவியை  ஒருவாரம் திருவாரூரில் வைத்திருந்து விட்டு, அவன் மாமனிடம் ஒப்படைக்க, அவன் அந்த மாணவியை கேரளாவில் ஒரு வீட்டில் சமையல்காரியாக 1000ரூபாய்க்கு விற்றது வரையும் கண்டுபிடித்து ,மாணவிகள் இப்படி முள்ளில் மேல் விழுந்த சேலையாக மாறுகிறார்களே என கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்..இந்த மாணவிகளுக்கு விழிப்புணர்வு வருவது போல யாராவது ஒரு சினிமா எடுக்க மாட்டார்களா என ஏங்கிக்கொண்டிருந்த எனது மனக்கவலையைத் தீர்க்கும் விதமாக வந்துள்ள சினிமாதான்  வழக்கு எண் 18/9 என்ற படமாகும். இது படம் அல்ல....மாணவிகளுக்கு ஒரு பாடம

         ஆனந்த விகடன் விமர்சனம் படித்துவிட்டு, இன்று வழக்கு எண் 18/9 
 1. பார்த்தேன். விகடன் விமர்சனம் படிக்கு முன்பு, டிரெய்லர் பார்த்ததில், பள்ளிக்கூட மாணவ-மாணவியும் ஓடிப்போகும் கதையாக இருக்கும், இதைப்பார்த்து இன்னும் மாணவிகள் உடல் ஈர்ப்பை, காதல் என தவறாகப்புரிந்து கொண்டு, பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துக்கொள்வதில்லாமல், தங்கள் வாழ்க்கையையும் முள்ளில் மேல் விழுந்த சேலையாக கிழித்துக்கொள்ளப்போகிறார்கள் என நினைத்துத்தான் படத்தைப்பார்த்தேன்...ஆனால் படமோ, ஒவ்வொரு மாணவியும் இந்தப்படத்தைப்பார்த்து, இன்றைய கலாச்சார சீரழிவில் இருந்து , பாய் பிரண்ட் என்ற துச்சாதனர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளத்தக்களவில் விழிப்புணர்வு அடைவார்கள் என்பது எனது எண்ணமாகும.

                    தர்மபுரி பகுதியில் குடும்ப வறுமை காரணமாக படிப்பைக்கைவிட்ட  கதாநாயகன், வட நாட்டில் முறுக்குக்கம்பெனியில் கொத்தடிமையாக விற்கப்படுகிறான்..அப்பா, அம்மா இறந்த செய்தியைக்கூட மறைத்துவிட்ட கடைக்கார கயவனிடம் இருந்து தப்பி சென்னை வருகிறான்..பசி மயக்கத்தில் பிளாட்பாரத்தில் மயங்கி விழுகிறான்..படித்த மனிதர்கள் பாதையில் இருந்து விலகிப்போகும்போது, அப்படி, இப்படி என்று வாழும் ரோசி என்ற பெண் தனது மனிதத்தன்மை காரணமாக அவனுடைய பசியாற்றி, பிளாட்பார இட்லிக்கடையில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்கிறாள்..அருகில் உள்ள அபார்ட்மெண்டிற்கு வீட்டு வேலைக்குச்செல்லும் கதா நாயகியை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறான்..சில சூழ் நிலைமை காரணமாக கதா நாயகி, இவனை ஒரு பொறுக்கியாக நினைக்கிறாள்..

                       கதா நாயகி வேலை செய்யும் மத்தியதரகுடும்பத்தின் 16 வய்து பெண் சைக்கிளில் ஆங்கில வழிப்பள்ளிக்கு செல்கிறாள்.. வழியில் இம்மாணவியைக்காணும்  ஒரு பணக்கார மாணவன் தன் வலையில் வீழ்த்த பாடத்தில் சந்தேகம் என்ற பெயரில் வீட்டிற்குள் நுழைந்து மாணவிக்குத்தெரியாமலேயே செல்போனில் அவளை பதிவு செய்து, சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்..மாணவியின் சக தோழிகளும் மாணவியை உசுப்பேத்தி விடுகின்றனர். இத்தொடர்பு, கடற்கரை விடுதிக்கு காப்பி சாப்பிடும் வரை கொண்டு செல்கிறது..கடலில் விளையாடிய மாணவிக்கு தனி அறை ஏற்பாடு செய்து, உடை மாற்றுவதைக்கூட செல்லில் ரகசியமாக பதிவு செய்கிறான்..வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் எதிர்பாரதவிதமாக தனது பாய்பிரண்டு மாணவனின் செல்லில் தனது படங்களைக்கண்டு அதர்ச்சியடைந்த மாணவி, அவனுக்குத்தெரியாமல் மெமரி கார்டை உருவிக்கொள்கிறாள்..மாணவனின் நட்பை கைவிடுகிறாள்..இதைப்பொறுக்காத மாணவன், காரேற்றி கொல்லப்பார்க்கிறான். இதனால் பள்ளிக்கு தனது அம்மாவுடன் தினமும் செல்கிறாள்..இதனால் வெறுப்படைந்த மாணவன் அபார்ட்மெண்ட் சென்று கதவைத்தட்டுகிறான்.  மாணவிக்குப்பதிலாக நமது கதா நாயகி வேலக்காரப்பெண் கதவைத்திறக்க, அவள் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு, ஓடி விடுகிறான்..கதா நாயகி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள்..போலீஸ் கேஸாகிறது..வழக்க்ப்படி போலீஸ் அபார்மெண்ட் அருகில் இட்லிக்கடையில் வேலை செய்யும், வேலுச்சாமியைப்பிடித்து விசாரிக்கிறது.. பணக்கார மாணவன்மீது சந்தேகப்பட்ட மாணவி, போலீசில் அவனைப்பற்றி விபரத்தைக்கூறி, தன்னிடம் உள்ள மெமரி கார்டையும் ஒப்படைக்கிறாள்..போலீஸ் பணக்கார மாணவன் மீது எப்.ஐ.ஆர்.போட்டு விசாரிக்கிறது..பணம் ரூ.10 லட்சம் கை மாறுகிறது..பணக்காரப்பையன் தான் ஆசிட் வீசிய உண்மையான குற்றவாளி எனத்தெரிந்தும், ஏழையான கதா நாயகனை அடித்து, துவம்சம் செய்து, இனிமையாகப்பேசி, குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்கிறது.. வழக்கு 18/9 ஒத்திவைக்கப்படுகிறது. கதா நாயகன் சிறைக்குச்செல்கிறார்ன். கதா நயகனின் நண்பன் சின்னச்சாமியிடம் உண்மையைக்கூறுகிறான்..சின்னச்சாமி, கோரமான முகத்துடன் உள்ள் வேலைக்கார கதா நாயகியிடம், நடந்த உண்மையிக்கூறுகிறான்..வழக்கின் தீர்ப்பைக்கான கதா நாயகி வருகிறாள். கதா நாயகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, வேனில் புழல் சிறைக்கு அனுப்பப்படுகிறான். பணக்காரப்பையன் மூலம் கிடைத்த 10 லட்சத்தில் வீடுகட்டுவதை முடித்துவிட்ட இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் இருந்து வெளியே வருகிறார்.. கதா நாயகி, தனது மூடிய முகத்துடன் ஒரு கடிதம் தருகிறாள்..இன்ஸ்பெக்டர் கடிதத்தைப்படிக்கிறார்..அடுத்த கணம் தியேட்டரில் கைதட்டல் பலமாக ஒலிக்கிறது...ஆக்ரோசமான கிளைமாக்ஸ்... கோர்ட்டில் மீண்டும் கேஸ் மறுபரீசீலனை ..உண்மையான குற்றவாளி சிறைக்குச்செல்ல, கதா நாயகன் விடுதலை..ஆனால் கதா நாயகிக்கு 7 ஆண்டு சிறை...அவலட்சனமான கதா நாயகிக்காக கதா நாயகன்  காத்திருக்கிறான்.. 

   எனக்கு மிகவும் பிடித்த விசயம்.
           (1) மத்தியதர வர்க்கத்தில் பிறந்த மாணவி, வேலைக்காரப்பெண் மீது, ஆஸிட் வீசியவன், தன்னை ஏமாற்றிய பணக்கார மாணவனாக இருக்கும் என்று தனது சந்தேகத்தை துணிச்சலாக  காவல் நிலையத்தில் கூறி, அதற்கான மெம்மரி கார்டை தருவது.      
          (2) ஆஸிட் வீச்சால பாதிக்கப்பட்டும், உண்மையான குற்றவாளியிடம் பணம் பெற்றுக்கொண்டு, அப்பாவி இளைஞனை பலிகாடா ஆக்கிய இன்ஸ்பெக்டர் மீது துணிந்து அந்த வேலைக்காரப்பெண்(கதா நாயகி) ஆஸிட் வீசி, உண்மையான குற்றவாளிக்குத்தண்டனையும், தவறாக தண்டனை தரப்பட்ட கதா நாயகனுக்கு விடுதலையையும் வாங்கித்தருவது..
         (3) பொதுவாக போலீசும் பாம்பும் ஒன்று என்பார்கள்..அவர்களின் நட்பு கூடாது..அவர்களின் பசப்பு வார்த்தை எப்படியிருக்கும் என்பதை, இதில் வரும் இன்ஸ்பெக்டர் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்..
          (4) ஆஸிட் வீசிய பெண்மீது, போலீஸ்காரர்கள் அடித்து துவைக்கும்போது, பெண் வக்கீல்கள் ஓடி வந்து (வழக்கமான சினிமாவில் வில்லன் நடுவீதியில் பெண்ணைப்பலாத்காரம் செய்யும்போது 1000-ம் பேர் இருந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள்)
  அந்தப்பெண்ணைக்காப்பாற்றுவது. என படம் முழுவதும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
  படம் முடிந்த பின் தான் வழக்கமான சினிமாக்களில் வரும் அட...ஒரு சண்டையில்லை...வெளி நாட்டு வீதிகளில் அரைகுறை ஆடையணிந்து பாட்டுப்பாடும் காதல் காட்சிகள் இல்லை...மொக்கை போடும் நகைச்சுவை காட்சிகள் இல்லை.. என உணர முடிகிறது..
                       53 வருடங்களாக சினிமா பார்க்கிறேன்...இப்படி ஒரு படத்தைப்பார்த்ததில்லை...பாலாஜி சக்திவேல் அவர்களே...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

Sunday, February 19, 2012

நூறு சத தேர்ச்சியும்..மிதிபடும் மாணவர்களும்.....

                             யாரைக்குறை கூறுவது?

   தமிழக கல்விக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? மாணவர்களுக்கு என்னவாயிற்று?  சென்னையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியையே.. வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொள்கிறார்..உடுமலைப்பேட்டையிலோ ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரின் அடிதாங்காத 11-ம் வகுப்பு மாணவர் 3 கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்...அதே சென்னையில் ஒரு கல்லூரி மாணவர் தனது தோழியை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தியும் வருகிறது.. இச்செய்திகள் கல்வியாளர்களையும், சமூகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும், ,பெற்றோர்களையும் அதர்ச்சியடையச்செய்துள்ளது.
.
               பூவைப்போல தூவப்படவேண்டிய கல்வி-இங்கு
              ஆணியைப்போல அறையப்படுகிறது..

என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நிஜம் என்பதை பறைசாற்றுகின்றன..               1996-க்குப்பிறகு புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கல்வி வெகு விரைவாக தனியார் மயமாகியது..சாராய வியாபாரிகள் கையில் கல்விக்கடவுள் சரசுவதியும், அரசின் பாக்கெட்டில்..மதுஅரக்கனும் குடிபுகுந்தனர்..
விளைவு..தனியார் பள்ளிகள் செழித்தோங்கி வளர்ந்தன..முதன் முதலில் ராசிபுரத்தில் ஒரு புதிய கல்விமுறை தமிழகரசின் ஆசியுடன் அரங்கேறியது...11-12ம் வகுப்பிற்கு மட்டும் தனியாக விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளிகள்...அல்ல ..அல்ல...இவை தொழிற்சாலைகள்...இங்கு மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து,குளித்து 5 மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்து விட வேண்டும்..இரவு 11 மணி வரை படிப்பு படிப்பு தான்..11-ம் வகுப்பு பாடம் என்பது பெயருக்குத்தான்..12-ம் வகுப்பு பாடத்தையே இரண்டு ஆண்டுகள் படித்து, மனப்பாடம் செய்வது, எழுதுவது, திருத்துவது, படிப்பது...அவ்வப்போது கொஞ்சம் வயிற்றிற்கும் போடப்படும். குறிப்பாக நாமக்கல், ராசிபுரம்,திருச்செங்கோடு தனியார் பள்ளிகளின் விடுதித்திட்டத்தால் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்தனர். தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 11-ம் வகுப்பிற்கு இப்பகுதிப்பள்ளிகளை நாடிவர ஆரம்பித்தனர். இதனால் பிற மாவட்ட்ங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்தது..அவர்களும் தங்கள் பள்ளியிலேயே ராசிபுரம் போல விடுதிகளைத்துவங்கி, மாணவர்களை இரவு பகல் பாராது மனப்பாடம் செய்து வைத்து, முடியாவிட்டால் அடித்து பயமுறுத்தி நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியும்,, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பள்ளி மாணவர்களையும் சேர்க்கும் தகுதிகளைப்பெற்றனர்.


 
    மேற்கண்ட விடுதியுடன் கூடிய பள்ளிகள் மட்டுமல்ல, விடுதியமைக்க முடியாத பள்ளி நிர்வாகங்கள் கூட 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும் ,12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலேயும் நடத்த ஆரம்பித்ததால் மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு பெற்றோர்களும் காரணமாகும்..தனது பிள்ளை டாக்டர் அல்லது என்ஜினீயர் தான் ஆகவேண்டும், கை நிறைய காசு சம்பாதிக்கவேண்டும் ,அமெரிக்கா பறக்க வேண்டும் என்ற தீராத ஆசையும் காரணமாகும்.  இதைப்பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் மூலம் பெற்றோர்களையும், மாணவர்களையும் ஈர்த்துக்கொண்டுள்ளனர்.
          திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ஆர்.கே.ஆர். பள்ளியும் இத்தகைய விடுதிகளுடன் கூடிய பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது தான்..இப்பள்ளியின் தாளாளர் ஆர்.கே.ராமசாமி அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருக் கூட...!.  எனக்குத் தெரிந்து திருப்பூரில் இருந்து வீட்டிற்கு அடங்காத மாணவர்களை(குறும்பு செய்யும் பிள்ளைகள்) இப்பள்ளியில் கொண்டு போய் விடுகிறார்கள்..அடி பின்னியெடுத்து விடுவார்கள்..அடிப்பதெற்கென்றே மதுரையில் இருந்து ஆட்களைக்கொண்டுவந்து வைத்துள்ளார்களாம்..அடிக்குப்பயந்து விடுதியில் இருந்து தப்பி வரமுடியாது..ஏன்..யானை மின் வேலி போட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்... .ஆயிரம் பேருக்கு மேல் உள்ள விடுதியில் குளிப்பதற்கே அதிகாலை 3 மணிக்கு எழுந்தால் தான் இடம் கிடைக்கும்..காலைக்கடன்கள் போவதற்கு நேரம் இருக்குமா தெரியவில்லை..  நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாது..சாப்பாட்டு நேரம் அரை மணி தான்...மாணவர்கள் ஓடிப்போய்த்தான் சாப்பிட வேணும்....சாப்பிட்டு வர கால தாமதம் ஆனால் அடிதான்..எதற்கு அடிக்கிறார்கள் என்றே தெரியாதாம்...ஒரு மாணவன் அடிபடுவதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள் என பிற மாணவர்கள் கேட்டால் அவர்களுக்கும் கிடைப்பது தர்ம அடிதானாம்...மாணவர்கள் தாங்கள் வாங்கிய அடியை காட்டவாவது முடியும்..ஆனால் மாணவிகள்.. பாவம்..ஆர்.கே.ஆர்.பள்ளியென்றாலே எனக்கு அந்தமான் செல்லுலர் ஜெயில் தான் ஞாபகத்திற்கு வரும்...

 இப்பள்ளியில் ஜனவர் மாதம் 19-ம் தேதி 10-ம்வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார். விடுதியில் சாப்பிட ஓடும்போது கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.. மாணவனின் பெற்றோர்கள் வரும்முன்பே போஸ்ட்மார்டம் செய்ய கோவைக்கு கொண்டுசென்றுவிட்டனர்..இதனால் பெற்றோர்கள் கொதித்தெழுந்து போராடினார்கள்...இது விபத்தா? அல்லது...தோனி நாட் அவுட் படத்தில் பிரகாஷ் ராஜ் செய்தது போல அடிபட்டதா என்ற சந்தேகம் இப்பகுதி பெற்றோர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது....
.. 

             
   காவல் துறை மற்றும் கல்வித்துறை சார்பாக கூறப்பட்ட ஆலோசனைகளை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை..ஊதாசினப்படுத்தினார்கள்...எல்லாம்..பணத்திமிர்....இந்நிலையில் கடந்த 15-ம்தேதி அனூஜ் என்ற மாணவர் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்... பெற்றோர்களின் போராட்டத்தால் பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளது.. 
.

     
 மேற்கண்ட நிகழ்வுகளின் காரணமாக மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம்,  திருப்பூர் மாவட்டக்காவல்துறை 19-2-2012 அன்று தனியார் பள்ளி தாளாளர்களின் கூட்டத்திற்கு அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது..இக்கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் தனியார் பள்ளித்தாளார்கள் , பள்ளியை எவ்வாறு பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.(பார்க்க.....வீடியோ)
..
    ஒரு சில பள்ளிகளின் தாளாளர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை வைத்தனர்..அதாவது..போட்டிகள் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம்..ஆயிரக்கணக்கில் பெற்றோர்களிடம் பணம் வாங்குகிறேம்...அதற்கேற்றாற்போல மாணவர்களை படிக்கவைத்து பெரியாளாக்கும் க்டமையும் எங்களுக்குள்ளது....இன்றைய மாணவர்கள் யூனிபார்ம் அணிந்துகொண்டு டாஸ்மார்க்கில் குடிக்கிறார்கள்..வகுப்பிற்கு வராமல் சினிமா தியேட்டரில் சுற்றுகிறார்கள், ஒயிட்னர் போதைக்கு ஆளாகிவருகிறார்கள், ஆசிரியைகளை மிரட்டும் போக்கும் உள்ளது...இவற்றையெல்லாம் தண்டனை தராமல் எப்படி பள்ளிகளில் ஒழுக்கத்தை வரவழைப்பது? என்ற கேள்விகளை எழுப்பினார்கள்..மேலும் போட்டிகள் நிறைந்த உலகத்தில் நூற்றுக்கு நூறு என்ற இலக்கை வேறு எட்டவேண்டியுள்ளது..எப்படித்தான் குழந்தைகளிடம் ஒழுக்கத்தைக்கொண்டுவருவது எனக்கேட்டனர்.....

      இறுதியாக கல்வித்துறை சார்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் திருமதி. நூர்மாலிக் அவர்கள் தனியார் பள்ளிகள் என்ன செய்ய வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக 6 நிமிடம் பேசினார்..(பார்க்க ..வீடியோ)..

Saturday, February 18, 2012

கட்டாயஇலவசக்கல்விச்சட்டமும், பள்ளிமேலாண்மைக்குழுவும்..


கட்டாய இலவச கல்வி சட்டம்..2009
   

                  இந்திய அரசியல் சட்டம் 1950-ல் உருவாக்கப்பட்ட போது வழிகாட்டும் கொள்கையில், 1960 க்குள்  6 வய்து முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் கல்வியை கட்டாய இலவச சட்டமாக இயற்றியிருந்தன..ஆனால் நாம் மட்டுமே  கல்வியை அடிப்படை  உரிமையாக்காமல் , வழிகாட்டும் கொள்கையில் எழுதி வைத்தோம்.., வழி காட்டும் கொள்கை என்பது கை காட்டி மரம் போல...போகும் வழியைக்காட்டுமே தவிர ..போகாது.                கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இந்திய மாணவர் சங்கமும் ,ஆசிரிய இயக்கங்களும் கல்வியை  கட்டாயமாகவும், இலவசமாகவும்  தர வேண்டி  பல்வேறு இயக்கங்களை நடத்தினர்.   உச்ச நீதி மன்றமும்  கல்வியை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று  அளித்த தீர்ப்புகூட செவிடன் காதில் ஊதிய சங்காகப்போய்க்கொண்டிருந்தது..இந்த நிலையில் தான் தற்போது ஆண்டு கொண்டிருக்கும்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசு இடது சாரிகளின் ஆதரவுடன்  2002-ம் ஆண்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த போது, இடது சாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக கல்வியை அடிப்படை உரிமையாக்க  அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் வெளியிட்டு, அதற்கான ஏற்பாடுகளை மெதுவாகவே செய்ய ஆரம்பித்தது.
மேண்மைமிகு பாரத்த்குடியரசுத்தலைவருடன்  115 மாணவிகள்  உரையாடல்
                     2009-ம் ஆண்டு மத்தியரசு, 6 வயது முதல் 14 வயது வரையுள்ள  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 என்று இயற்றப்பட்டு, 01-04-2010  முதல்  இந்தியா முழுதும் நடை முறைக்குக்கொண்டு(இந்தச்சட்டத்தில் சில குறைபாடுகளும், சந்தேகங்களும் இருந்தாலும்) வந்தது.. அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தி.மு.க. அரசு  இச்சட்டத்தில் சில விதிகளை இயற்றி  அமுல் படுத்துவதில் காலதாமதம் செய்தது. பின் வந்த அ.தி.மு.க அரசு 18-01-2011 முதல் தமிழகத்தில் இச்சட்டத்தை  அமுல் படுத்த ஆணையிட்டுள்ளது. மத்தியரசு வெளியிட்டுள்ள இந்தக்கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தில் 38 பிரிவுகள் உள்ளன. இந்த சட்டத்தின் 21 வது பிரிவின்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு  அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த 22 வது பிரிவு, இந்தப்பள்ளி  மேலாண்மைக்குழுவானது, ஒவ்வொரு பள்ளியிலும்,  அடுத்த  ஆண்டுக்கான பள்ளி வளர்ச்சித் திட்டத்தைப் போட்டு, உள்ளாட்சி நிர்வாகத்துடன்  கலந்து நிதி பெற்றும்,  நன்கொடை மூலமாகவும்  , பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள்,  பிற கல்வி சார்ந்த செயல்பாடுகளைச்செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

                     தமிழகரசின் பள்ளிக்கல்வித்துறையும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, நகராட்சிப்பள்ளிகளில் உள்ள கிராமக்கல்விக்குழுக்களுக்கு, இந்தக்கட்டாய இலவசக்கல்வி உரிமைச்சட்டத்தின் கூறுகளை அமுல் படுத்துவது சம்பந்தமாக பயிற்சியளித்து வருகின்றன.. இந்தப் பயிற்சியளிக்கும் மாநில கருத்தாளர்களில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக  நானும் ஒருவன். 
மங்கையர் மலரில் பள்ளி பற்றிய கட்டுரை.
                                           தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் நகராட்சிப்பள்ளிகளில் கடந்த 40 ஆண்டுகளாக பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெற்றோர்-ஆசிரியர் கழகங்களில் பள்ளி அமைந்துள்ள பகுதியின் வசதி படைத்தவர்களோ, அரசியல் வாதிகளோ நிர்வாகிகளாக இருப்பார்கள். பள்ளியில் நடைபெறும் விழாக்களில் மேடையை அலங்கரித்துவிட்டு, தங்களால் இயன்ற பீரோ, இருக்கை, தொலைக்காட்சிபெட்டி போன்றவற்தை நன்கொடையாக வழங்கிவிட்டு போவார்கள். திட்டமிட்டு பள்ளியின் வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபடமாட்டார்கள். தமிழகத்தில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பள்ளிகளில் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் திட்டமிட்டு பள்ளி வளர்ச்சியில் தொடர் அக்கறை காட்டுவார்கள். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு இந்தியளவில் ஒரு முன்மாதிரி பெற்றோர்-ஆசிரியர் கழகமாக திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் விளங்குகிறது.

1991-ல் பள்ளியின் தோற்றம். செல்வி சாவித்திரி தலைமையாசிரியை

1998-ல் பள்ளியின் தோற்றம்.
              ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1989 முதல் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளியின் வளர்ச்சியில் சிறுகச்சிறுக முன்னேற்றம் கண்டு, 1995க்குப் பிறகு அசுர வளர்ச்சி கண்டுள்ளது...தற்போது RTE ACT 2009-ல் கூறப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைக்
என்னால் வடிவமைக்கப்பட்ட ஜெய்வாபாய் பள்ளியின் முன்புற வாயில் தோற்றம்.

 கூறலாம். பள்ளி மேலாண்மைக்குழுக்கள் எப்படி செயல்படவேண்டும், ஒரு பள்ளியில் என்னென்ன வளர்ச்சித்திட்டங்களை அமுல் படுத்தலாம் என்று, ஜெய்வாபாய் பள்ளியில் 1989 முதல் 2008-ம் ஆண்டுவரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் எப்படி இந்தப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது என்று பவர் பாயிண்ட் மூலம் பயிற்சியளித்து வருகிறேன்.  இந்தப்பயிற்சியில் நான் பெற்றோர்-ஆசிரியர் கழகப்பொறுப்பில் இருந்த 1990 முதல் 2008 வரையிலான வளர்ச்சித் திட்டங்கயும், அதனால் பள்ளியில் ஏற்பட்ட வளர்ச்சியையும் கூறினேன்.
           கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட  ஒரு ஆசிரியர், ஆர்வம் மிகுதியால் ஜெய்வாபாய் பள்ளியை நேரில் பார்த்து விட்டு, போன் மூலம் என்ன சார் நீங்கள் சொன்ன வளர்ச்சிப்பணிகள் எல்லாம் இருக்கிறது..ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் அழிந்து விட்டது.....ஏன் இப்படி  என்றார்.....என்ன செய்வது.?  பொதுச்சொத்தான அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணம்(இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு இந்தியனின் அடிப்படைக் கடமையென்று கீழ்கண்டவாறு Article 51A-வில் TO SAFE GUARD PUBLIC PROPERTY )   என்று எழுதப்பட்டுள்ளது.மேற்கண்ட கருத்து ஒவ்வொரு இந்தியனுக்கும், குறிப்பாக அரசு/ நகராட்சிப் பள்ளி நிர்வாகத்திற்கும், கல்வித்துறைக்கும் வர வேண்டும் என்றேன்.
               
 ஜெய்வாபாய் பள்ளியின் பெருமைகள்.... 


                                 ...
காலை வழிபாட்டு கூட்டம்.
                    ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியானது இந்தியளவில் 7300 மாணவிகள் கல்வி கற்கும் மாபெரும் பெண்கள் பள்ளியாகும். திருப்பூரில் முதன் முதலாக பெண்களுக்கென உருவாக்கப்பட்ட இப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் 1989 முதல் 2008 வரை , எனது குடும்பத்தையும், குழந்தைகளையும் கூடக்கவனிக்காமல், இரவு பகல் பாராது, ஒரு தோட்டக்காரனாக, காவலாளியாக இருந்து, தனியார் பள்ளிகளில்கூட இல்லாத பல செயல்பாடுகள், வசதிகள்  ஜெய்வாபாய் பள்ளியில் உண்டாக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தொடர்ந்து பத்துமுறை தேசியளவிலும்,மூன்று முறை இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் கலந்து கொண்டு இந்தியளவில் சிறப்பிடம் பெற்ற ஆய்வுக்கட்டுரைகள் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஆய்வுக்கட்டுரைகள் என்றால் மிகையாகாது.  இதனால், மேண்மைமிகு பாரதக் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்,  மாண்புமிகு தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்கள்,முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றோர்களாலும், கல்வித்துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்ட பள்ளியாக ஜெய்வாபாய் பள்ளி விளங்குகிறது.. இத்தனை புகழுக்கும் பெயருக்கும்,திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம், தலைமையாசிரியை ,ஆசிரிய-ஆசிரியைகளின் ஒத்துழைப்புடன், திருப்பூர் நகராட்சியின் ஒத்துழைப்பு, எனது உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு காரணமாகும்.. 

         ல்லதோர் வீணை செய்தே...அதை நலங்கெட...

எங்கெங்கும் தீ வைக்கப்படும் குப்பைகள்..
      நான் ஆற்றிவந்த தன்னார்வப் பணிகள் இனி தேவையில்ல என்று  புதிய பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகம் எனது பணிகளுக்கு தடை போட்டதால், எனது உழைப்பை 01-10-2009 முதல் நிறுத்திக்கொண்டேன். இதனால்  போதுமான தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளிக்குள் சிறுகச்சிறுக  உருவாக்கப்பட்ட பல சிறப்பம்சங்கள்   பொலிவை இழந்து வருகின்றன. இதனால் வருத்தமுற்ற நான், பள்ளி தலைமையாசிரியை அவர்களிடம், 31-03-2011 முதல் தொலை பேசி இலாகாவில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன்..எனவே 01-04-2011 முதல் பள்ளிக்கு முழு நேரமாக எனது உடல் உழைப்பை மரம் செடிகளுக்கு தண்ணீர் விடுவது, மாணவிகளின் டாய்லெட், கணணி ஆய்வகம்,  பள்ளியை சுத்தமாக வைத்திருப்பது, அறிவியல் பூங்காவில் உள்ளதை மாணவிகளுக்கு விளக்குவது, போன்றவற்றைச் செய்திட அனுமதி கேட்டேன்.. சார் நீங்கள் பள்ளிக்குள் சேவை புரிவதை ஒரு சில ஆசிரியர்கள் விரும்ப வில்லை...என்றார்.. காலம் வரும்..என்று கனத்த மனதுடன், தேசியளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மீண்டும் பழைய மெருகிற்கும், பெருமைக்கும் வர, எனது சேவையை  தொடரவும்,  காத்திருக்கிறேன்.. கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இப்பள்ளியில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டால் அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதை எனது அனுபவத்தின் வாயிலாக கூற விரும்புகிறேன்..
        இப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழுவினர் என்ன செய்ய வேண்டும்?.

1)     பள்ளியின் தாளாளர் திரு.டி.ஒ.ஆஷர் மற்றும் திருமதி ஜெய்வாபாய் உயிருடன் இருந்தபோது கையினால் வரையப்பட்ட  படங்கள் 1990-ம் ஆண்டு பெ.ஆ.கழகத்தால் புனரமைக்கப்பட்டு பள்ளியினுள் உள்ளே வந்தவுடன் தெரியும்படி மாட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில் அப்படங்கள் இல்லை. இந்தப்படங்களை தேடிக்கண்டுபிடித்து புதிதாக பிரேம் போட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் அதே இடத்தில் மாட்ட வேண்டும்(பள்ளியின் ஆண்டுவிழாவினையொட்டி (02-03-2012) ஜெய்வாபாய் குடும்பத்தினர் பள்ளிக்கு வருவதையொட்டி, பள்ளி இரவு காவலர் அவர்களின் படத்தை தேடி எடுத்து பழைய கண்ணாடி,பிரேமுடன் மாட்டி வைத்துள்ளார். அவருக்கு நன்றி..) இப்படத்தை நன்றாக பிரேம் செய்து மாட்டவேண்டும்..


பராமரிக்கப்படாத நீர் வீழ்ச்சி..
2)    பள்ளியின் முன்புறம் 1999-ம் ஆண்டு  நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.  நீர் வீழ்ச்சி என்பது அழகிற்காக மட்டுமல்ல அதில், மாணவிகளின் பாடத்தோடு சம்பந்தப்பட்டுள்ள நீரின் சுழற்சி தத்துவமும், மழை நீர் சேகரிப்பு செயல் விளக்கமும், விழிப்புணர்வும் வருமாறு ஏற்படுத்தப்பட்டதாகும்..  இது கடந்த 2 வருடமாக இயக்கப்படாமல் கைவிடப்பட்டு, சுத்தமும் செய்யப்படாமல் இருக்கிறது. இதை சரி செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
.
அன்று..வண்ணப்பறவைகளுடன் 
பாழடந்த வண்ணப்பறவை கூண்டு..
3)     1999-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வண்ணப்பறவைகள் கூண்டு என்பது உணவு சுழற்சியையும், பறவைகளின் வகைகளையும் கூறும் விதமாகவும், மாணவிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாகவும்  இருந்தது. இந்த கூண்டை சரி செய்து  மீண்டும், லவ்பேர்ட்ஸ் மற்றும் தேன்சிட்டு மற்றும் முனியா  பறவைகள்  விடப்பட்டு, அதில் உள்ள ஒரு பெண்ணின் கையில் உள்ள குடத்தில் இருந்து தண்ணீர் வரும்போது, குருவிகள் அதைக்குடிக்கும் அழகை மாணவிகள் கண்டு ரசிக்கத்தக்கவாறு மீண்டும் அந்த நீர்வீழ்ச்சியை இயக்கவேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட அறிவியல் பூங்கா..
4)     2004-ம் ஆண்டு இந்தியரசின் அறிவியல் விழிப்புணர்வு ஆண்டையொட்டி, சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூங்கா என்பது தமிழகத்திலேயே முதன் முறையாக ஒரு நகராட்சிப் பள்ளியில் தனியாரும்(சூர்யபிரபா நிறுவனம்) பெ.ஆ.கழகம் இணைந்து ஏற்படுத்தியதாகும். இதில் 10-ம் வகுப்பு மாணவிகளின் அறிவியல் பாடத்தில் உள்ளவை செய்முறை விளக்கமாக வருகின்றது. இதில் உள்ள சில கருவிகள் பழுதடைந்து, கவனிப்பாரற்று கிடந்தது..சென்ற ஆண்டு சமச்சீர் கல்வி இழுபறியாக புத்தகம் இல்லாமல் இருந்த போது, அப்போதைய முதன்மைக்கல்வி அலுவலர் திரு.தி.ராஜேந்திரன் அவர்களின் அறிவுறத்தலால், இவற்றைச்சரிசெய்ய தலைமையாசிரியை அவர்கள் என்னை அழைத்து, சரி செய்யக்கேட்டதால், அறிவியல் பூங்கா மீண்டும் பயன் பாட்டிற்குக்கொண்டு வரப்பட்டது..தற்போது இது மீண்டும் கவனிப்பாரின்றி பழுதாகி பூட்டப்பட்டுள்ளது.. இவற்றை மீண்டும்  சரி செய்து, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்..

5)    2005-ம் ஆண்டு மாணவிகள்  தண்ணீர் அருந்தும்போது சிந்தும் நீர் மற்றும் கைகழுவும்  நீரை கல்வாழை, கரி, கூழாங்கற்கள் கொண்டு இயற்கை முறையில் மீண்டும் சுத்திகரித்து அதை சாலையோரப்பூங்காவில் உள்ள மரங்களுக்கு விடப்பட்டு வந்தது.  இந்த செய்முறை ஆய்வு தமிழகரசின் சைன்ஸ் சிட்டியின் விருது பெற்று, பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டதாகும். இக்கழிவு நீர் மறுசுழற்சியமைப்பு சுத்தம் செய்யப்பட்டு, கல்வாழைகள் வைத்து சுத்திகரித்து அத்தண்ணீரை மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

6)     பள்ளியின் தென்புறச்சுவற்றின் மாடியில் தென்புறம் உள்ள ஆல மரத்தை வேருடன் எடுத்து, மீண்டும் வராதவாறு ஆசிட் ஊற்றி பூச வேண்டும்.
7)     பள்ளியின் பிரதான மின்சார மீட்டர் உள்ள பெட்டியில் பராமரிப்பு செய்து, பாதுகாப்புடன் மூடவேண்டும்..

8)     இரண்டு புதிய மின் ஸ்விட்ச் பாக்ஸ் பெட்டிகள் 3 வருடமாக சும்மா சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. இதை ஸ்டோர் ரூம் மற்றும் ஆசிரியர் அறையில் பயன் படுத்தலாம்..

9)      அலுவலகம் முன்பு உள்ள கை கழுவும் பேசின் சுத்தம் செய்யப்பட்டு, குழாய் பொருத்தி மீண்டும் இதை உபயோகப்படுத்திட வேண்டும்.

10)     தீ தடுப்புச்சாதனங்கள் ஆங்காங்கே கீழே கிடக்கின்றன. இவைகளை ரீ சார்ஜ் செய்து, பழையபடி சுவரில் பொருத்துவது, தீ தடுப்பு பக்கெட்டுகளை உரிய ஸ்டேண்டில் மாட்ட வேண்டும்..
11)     குடி நீர் தொட்டிகள் அனித்தும் மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

12)     காலை வழிபாட்டு பள்ளி மைதான மேடைக்கு, அங்கேயே 3 வருடமாக கீழே கிடக்கும் ஆங்கிள், தகரம் பயன்படுத்தி மேடைக்கு மேல் கூரை அமைக்கவேண்டும்..

13)    கணிப்பொறி ஆய்வகக்கூடத்தில் பயன்படுத்தாமல் கீழே போட்டு வைத்துள்ள கணணிகளை பழுது பார்த்து மாணவிகளின் உபயோகத்திற்கு மீண்டும்  பயன்படுத்த வேண்டும்..

14)   ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இருக்கைகள் கடந்த மூன்று வருடங்களாக வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து துருப்பிடித்துக் கிடக்கின்றன. பெஞ்ச், டெஸ்க் (தேக்குமரம் & மற்றும் இரும்பினால் ஆன) போன்றவற்றை பழுது பார்த்து மீண்டும் மாணவிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

15.    பள்ளியின் பெருமைகளை விளக்கும் முகமாக முன்பு சிகரத்தை நோக்கி என்ற பள்ளியின் சாதனைப்படங்களை (இரண்டு தலைமையாசிரியைகளின் தேசியவிருது, குடியரசுத்தலைவரின் கணிப்பொறி விருது, தமிழகமுதல்வருடன் நமது மாணவிகளின் படங்கள் உட்பட) சுற்றுச்சூழல்விருது, போன்ற புகைப்படங்களை பெரிய அளவில் மீண்டும் பிளக்ஸ் போட்டு பொருத்த வேண்டும்..

16)    சாலையோரப்பூங்காவின் நுழைவு வாயிலில் உள்ள பள்ளியின் பெயர்பலகை நகராட்சிப்பள்ளியாகவே இருக்கிறது.. இதை மாநகராட்சிப்பள்ளியென்று மாற்ற வேண்டும்.
17)  பள்ளியின் புதிய வகுப்பறைகளுக்கு வரும் கிழக்குப்பகுதியில் உள்ள கேட்டிற்கு உள்ளேயுள்ள மாணவிகள் ரோட்டில் போகிறவர்களுக்கு தெரியாமல் இருக்க இரும்பு தகடு, மற்றும் கேட்டின் பில்லர் சுவர் உயர்த்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

18)  தற்போது சத்துணவு கூடம் உள்ள கட்டடத்திற்கு வரும் மின் ஒயரின் இரும்புகம்பி அறுந்து கிடக்கிறது..இதை சரிசெய்யாவிட்டால் மின்சாரத்துடன் உள்ள ஒயர் அறுந்து மாணவிகளுக்கு பாதிப்பு உண்டாகிவிடும்.

19)  ஈஸ்ட்மேன் நிறுவனத்தார் ரூ.75 லட்சத்தில் கட்டித்தந்த என்.ஜி.எம். கட்டடத்தில் வகுப்பறை கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதனால் மாணவிகளின் கைகள் உடைந்த கண்ணாடிகளால் கிழித்துக்கொள்வார்கள். எனவே மாணவிகளின் பாதுகாப்பை முன்னிட்டு , கண்ணாடிகளை மாற்ற வேண்டும்.

20) அல்லிக்குளத்தில் பல அலங்கார ஓடுகள் இல்லை. மீண்டும் அமைக்க வேண்டும். இப்படி சின்னச்சின்ன பராமரிப்பு வேலைகள் நிறைய இருக்கிறது.
     அதே சமயம் சில பெரிய வேலைகளும் இருக்கின்றன..

21) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பெற்றோர்-ஆசிரியர் கழகப்பங்களிப்புடன் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக மெதுவாக கட்டப்பட்டு வரும் கழிப்பறைகள் விரைந்து  கட்டப்பட்டு, மாணவிகளின் பயன் பாட்டிற்குக்கொண்டு வர வேண்டும்.ஜூன் 15 முதல் திறக்கப்பட்டாலும் டாய்லெட்டில் தண்ணீர் வருவதில்லை. உடனடியாக பைப் சரி செய்யப்பட வேண்டும். மாணவிகள் டாய்லெட் போக முடியாத நிலையில் இப்புதிய அழகான டாய்லெட்டுகள் துர் நாற்றம் வீசுகிறது.

22) மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் தரை தளம், மற்றும் இரண்டு மாடிகளில் உள்ள 18 டாய்லெட்டுகள் உபயோகப்படுத்தப்படவில்லை..மேல் மாடியில் உள்ள 50000 லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததும் மற்றும் தண்ணீர் கசிவு காரணமாக வகுப்பறைகள் திறக்கப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் இன்னும் உபயோகப்படுத்தாமல் இருக்கிறது..இதை உடனடியாக பயண்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.(தற்போது ஜூன் 15-ல் இருந்து பயன்படுகிறது. ஆனால் தண்ணீர் கசிந்து கட்டடம் வீனாகுவதற்குள் சரி செய்ய வேண்டும்)

அன்று.. மாணவிகளுக்கான இன்சினரேட்டர்
 23) தமிழகத்திலேயே முதன் முதலாக 1997-ல் பள்ளியில் சானிட்டரி நாப்கின் பாய்லறை நானே வடிவமைத்து பயன்பாட்டிற்குக்கொண்டு வந்தேன். இதை மீண்டும் வேறு வடிவமைப்பில் 2005-ல் இரண்டு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது தற்பொது பராமரிப்பில்லாமல் புகை போக்கும் குழாய் உடைந்தும்,  பாத்ரூம் சுகாதாரமாகவும் இல்லை. இதை சரி செய்ய வேண்டும். 2008-ல் வாங்கப்பட்ட மின்சாரத்தால் ஆன சானிட்டரி
இன்சினரேட்டர் இன்றுள்ள நிலைமை.

 பாய்லரை பயன்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது..இதை பயன் பாட்டிற்குக் கொண்டுவந்து, மாணவிகளின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
                 
கலையரங்கத்தின் வி.ஐ.பி. டாய்லெட்
கலையரங்கத்தின் மேடைச்சுவர்.
24) வாராது வந்த மாமணிபோல நமது பள்ளிக்கு சென்ற திமுக.ஆட்சியில் திருப்பூர் மாநகராட்சியின் சார்பாக(மாநகராட்சியின் முதல் .மேயர் திரு.கே.செல்வராஜ் அவர்களின் பேராதரவால்) மிகப்பிரம்மாணடமான.முறையில் முப்பதாயிரம் சதுர அடியில்(மேடை மட்டும் அய்யாயிரம் சதுர அடியில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இக்கலையரங்கம் கட்டப்பட்டதில் இருந்து அரசின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதனுடைய கண்ணாடிகள், கதவுகள் மின்சார பெட்டி போன்றவை உடைக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள நவீன டாய்லெட்டுகள் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. மேலும் சுவர்களில் வேண்டாத வாசகங்கள் எழுதப்பட்டும்,கிறுக்கப்பட்டும் இருக்கிறது. எனவே இக்கலையரங்கத்தின் மேடையில் ஃபால் சீலிங் அமைக்கப்பட்டு, மின் விசிறிகள் மாட்டப்பட வேண்டும். கலையரங்கத்தின் பிளாஸ்டிக்கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதால், இரும்பு கதவுகளாக மாற்றியமைக்க வேண்டும்..கலையரங்கத்தின் மேடையில் உள்ள போகஸ் லைட்டுகளை, வேறு இடத்தில் பொருத்தி மேடைக்கு முழுமையாக வெளிச்சம் வருவது போலச்செய்ய வேண்டும். கலையரங்கத்தின் உச்சியில் அன்றைய முதல்வரின் படமும், துணை முதல்வரின் படமும் வரையப்பட்டுள்ளது..ஆட்சி மாற்றம் காரணமாக அவைகள் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை காந்தி மற்றும் அண்ணா படமோ அல்லது ஆஷர், ஜெய்வாபாய் படமோ வரைந்தும், ம என்ற எழுத்து கீழே விழுந்தும் விட்டது. இதை சரி செய்ய வேண்டும்..


  கலையரங்கத்தின் உள்ளே செம்மண் மற்றும் மணல் கொட்டப்பட்டோ அல்லது சிமெண்ட் தளம் போடப்பட்டு, காலை வழி பாட்டுக் கூட்டங்கள் நடத்தவும், கோ கோ, வாலிபால், பேட்மிட்டன்  போன்ற உள் விளையாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தலாம்.

25) மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் தரை தளம், மற்றும் இரண்டு மாடிகளில் உள்ள 18 டாய்லெட்டுகள் உபயோகப்படுத்தப்படவில்லை..மேல் மாடியில் உள்ள 50000 லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததும் மற்றும் தண்ணீர் கசிவு காரணமாக வகுப்பறைகள் திறக்கப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் உபயோகப்படுத்தாமல் இருக்கிறது..இதை உடனடியாக பயண்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதே கட்டடத்தில் புதிய 5 ஜன்னல் கதவுகள் உடைந்து கீழே கிடக்கிறது. இதை வெல்டு வைக்க வேண்டும். தென்புற படிக்கட்டுகள் பகுதியில் மண்கொட்டி, படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும்...

26) புதிய வகுப்பறை கட்டும்போது, பழைய வகுப்பறைகளின் இரும்பு ஆங்கில்கள், சிமெண்ட்சீட்கள் கழற்றி வைக்கப்பட்டுள்ளது. இவைகளைக்கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டி கூரை அமைக்கவேண்டும்.


27) கூடைப்பந்தாட்ட மைதானத்தைச்சரிபடுத்தி, கான்கிரீட் தளம் அமைத்து மாணவிகளின் பயன்பாட்டிற்குக்கொண்டு வர வேண்டும்.  இதற்குப்பக்கத்தில் உள்ள மண்மேடுகள் அகற்றப்பட்டும், நீளம் தாண்டும் பிட் அமைக்கலாம்.

28)  குமரன் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு, இடையில் இரும்பிலான சட்டர் போடப்பட்டது..ஏனென்றால், சட்டரைத்தூக்கி விட்டு, இந்த இரண்டு வகுப்பறைகளையும் ஒன்றாக்கி(டாக்டர்.அப்துல்கலாம் வகுப்பறையில் செய்திருப்பது போல) கணிப்பொறியுடன் கூடிய ஆடியோ விசுவல் அரங்கமாக மாற்றுவதற்காக திட்டமிட்டு கட்டப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும். 

          1990-ம் ஆண்டு ,மாதம் ஒரு பெற்றோர் ஒரு ரூபாய் தரவேண்டும் என்று திட்டம் தீட்டியதில் ஒரு வருட வருமானம் ரூ.32000/-ம் மட்டுமே..இதை பல்வேறு திட்டங்கள் மூலம் படிப்படியாக வளரச்செய்து , இன்று பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளைக்கு சுமார் ரூ.35 லட்சம் வருகிறது..பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் 60 ஆசிரியைகளும், 8 பிற பணியாளர்களும் உள்ளனர். முன்பு போல இனி வகுப்பறைகள் கட்ட அவசியமில்லை. வருடத்திற்கு ரூபாய் பத்துலட்சமாவது ஆசிரியைகள் சம்பளம் போக மீதியாகும்..எனவே இருக்கும் பணத்தில் மாணவிகளுக்கு மேலும்,  பல்வேறு வசதிகளையும், ஸ்மார்ட் கிளாஸ், போன்ற நவீன கணிப்பொறிக்கல்வியைக்கூட  வழங்கமுடியும். 
       1989 முதல்2008 வரை, கனவுப்பள்ளியாக இரவு பகல் பாராது   உழைத்து, சிறுகச்சிறுக மாணவிகளின் நலனுக்காக  உருவாக்கப்பட்ட அமைப்புகள்,அறிவியல் பூங்கா, டாய்லெட்டுகள் மற்றும் பள்ளிச்சுகாதாரம் போன்றவை சீரழிந்து வருவதைப்பார்த்து ரத்தக்கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.


2005-ல் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் விருது

தற்போது இப்பள்ளியைக்காணும்போது 
       நல்லதோர் வீணை செய்தோம்..
  அதை நலங்கெடப்புழுதியில் எறிந்து விட்டனரே....என்று மனம் வெம்பி அழத்தோன்றுகிறது..

   

 
ராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH.                ராணி ரூபா  தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெய...