கட்டாயஇலவசக்கல்விச்சட்டமும், பள்ளிமேலாண்மைக்குழுவும்..


கட்டாய இலவச கல்வி சட்டம்..2009
   

                  இந்திய அரசியல் சட்டம் 1950-ல் உருவாக்கப்பட்ட போது வழிகாட்டும் கொள்கையில், 1960 க்குள்  6 வய்து முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் கல்வியை கட்டாய இலவச சட்டமாக இயற்றியிருந்தன..ஆனால் நாம் மட்டுமே  கல்வியை அடிப்படை  உரிமையாக்காமல் , வழிகாட்டும் கொள்கையில் எழுதி வைத்தோம்.., வழி காட்டும் கொள்கை என்பது கை காட்டி மரம் போல...போகும் வழியைக்காட்டுமே தவிர ..போகாது.



                கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இந்திய மாணவர் சங்கமும் ,ஆசிரிய இயக்கங்களும் கல்வியை  கட்டாயமாகவும், இலவசமாகவும்  தர வேண்டி  பல்வேறு இயக்கங்களை நடத்தினர்.   உச்ச நீதி மன்றமும்  கல்வியை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று  அளித்த தீர்ப்புகூட செவிடன் காதில் ஊதிய சங்காகப்போய்க்கொண்டிருந்தது..இந்த நிலையில் தான் தற்போது ஆண்டு கொண்டிருக்கும்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசு இடது சாரிகளின் ஆதரவுடன்  2002-ம் ஆண்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த போது, இடது சாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக கல்வியை அடிப்படை உரிமையாக்க  அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் வெளியிட்டு, அதற்கான ஏற்பாடுகளை மெதுவாகவே செய்ய ஆரம்பித்தது.
மேண்மைமிகு பாரத்த்குடியரசுத்தலைவருடன்  115 மாணவிகள்  உரையாடல்
                     2009-ம் ஆண்டு மத்தியரசு, 6 வயது முதல் 14 வயது வரையுள்ள  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 என்று இயற்றப்பட்டு, 01-04-2010  முதல்  இந்தியா முழுதும் நடை முறைக்குக்கொண்டு(இந்தச்சட்டத்தில் சில குறைபாடுகளும், சந்தேகங்களும் இருந்தாலும்) வந்தது.. அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தி.மு.க. அரசு  இச்சட்டத்தில் சில விதிகளை இயற்றி  அமுல் படுத்துவதில் காலதாமதம் செய்தது. பின் வந்த அ.தி.மு.க அரசு 18-01-2011 முதல் தமிழகத்தில் இச்சட்டத்தை  அமுல் படுத்த ஆணையிட்டுள்ளது. மத்தியரசு வெளியிட்டுள்ள இந்தக்கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தில் 38 பிரிவுகள் உள்ளன. இந்த சட்டத்தின் 21 வது பிரிவின்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு  அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த 22 வது பிரிவு, இந்தப்பள்ளி  மேலாண்மைக்குழுவானது, ஒவ்வொரு பள்ளியிலும்,  அடுத்த  ஆண்டுக்கான பள்ளி வளர்ச்சித் திட்டத்தைப் போட்டு, உள்ளாட்சி நிர்வாகத்துடன்  கலந்து நிதி பெற்றும்,  நன்கொடை மூலமாகவும்  , பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள்,  பிற கல்வி சார்ந்த செயல்பாடுகளைச்செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

                     தமிழகரசின் பள்ளிக்கல்வித்துறையும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, நகராட்சிப்பள்ளிகளில் உள்ள கிராமக்கல்விக்குழுக்களுக்கு, இந்தக்கட்டாய இலவசக்கல்வி உரிமைச்சட்டத்தின் கூறுகளை அமுல் படுத்துவது சம்பந்தமாக பயிற்சியளித்து வருகின்றன.. இந்தப் பயிற்சியளிக்கும் மாநில கருத்தாளர்களில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக  நானும் ஒருவன். 
மங்கையர் மலரில் பள்ளி பற்றிய கட்டுரை.
                                           தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் நகராட்சிப்பள்ளிகளில் கடந்த 40 ஆண்டுகளாக பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெற்றோர்-ஆசிரியர் கழகங்களில் பள்ளி அமைந்துள்ள பகுதியின் வசதி படைத்தவர்களோ, அரசியல் வாதிகளோ நிர்வாகிகளாக இருப்பார்கள். பள்ளியில் நடைபெறும் விழாக்களில் மேடையை அலங்கரித்துவிட்டு, தங்களால் இயன்ற பீரோ, இருக்கை, தொலைக்காட்சிபெட்டி போன்றவற்தை நன்கொடையாக வழங்கிவிட்டு போவார்கள். திட்டமிட்டு பள்ளியின் வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபடமாட்டார்கள். தமிழகத்தில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பள்ளிகளில் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் திட்டமிட்டு பள்ளி வளர்ச்சியில் தொடர் அக்கறை காட்டுவார்கள். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு இந்தியளவில் ஒரு முன்மாதிரி பெற்றோர்-ஆசிரியர் கழகமாக திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் விளங்குகிறது.

1991-ல் பள்ளியின் தோற்றம். செல்வி சாவித்திரி தலைமையாசிரியை

1998-ல் பள்ளியின் தோற்றம்.
              ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1989 முதல் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளியின் வளர்ச்சியில் சிறுகச்சிறுக முன்னேற்றம் கண்டு, 1995க்குப் பிறகு அசுர வளர்ச்சி கண்டுள்ளது...தற்போது RTE ACT 2009-ல் கூறப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைக்
என்னால் வடிவமைக்கப்பட்ட ஜெய்வாபாய் பள்ளியின் முன்புற வாயில் தோற்றம்.

 கூறலாம். பள்ளி மேலாண்மைக்குழுக்கள் எப்படி செயல்படவேண்டும், ஒரு பள்ளியில் என்னென்ன வளர்ச்சித்திட்டங்களை அமுல் படுத்தலாம் என்று, ஜெய்வாபாய் பள்ளியில் 1989 முதல் 2008-ம் ஆண்டுவரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் எப்படி இந்தப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது என்று பவர் பாயிண்ட் மூலம் பயிற்சியளித்து வருகிறேன்.  இந்தப்பயிற்சியில் நான் பெற்றோர்-ஆசிரியர் கழகப்பொறுப்பில் இருந்த 1990 முதல் 2008 வரையிலான வளர்ச்சித் திட்டங்கயும், அதனால் பள்ளியில் ஏற்பட்ட வளர்ச்சியையும் கூறினேன்.




           கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட  ஒரு ஆசிரியர், ஆர்வம் மிகுதியால் ஜெய்வாபாய் பள்ளியை நேரில் பார்த்து விட்டு, போன் மூலம் என்ன சார் நீங்கள் சொன்ன வளர்ச்சிப்பணிகள் எல்லாம் இருக்கிறது..ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் அழிந்து விட்டது.....ஏன் இப்படி  என்றார்.....என்ன செய்வது.?  பொதுச்சொத்தான அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணம்(இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு இந்தியனின் அடிப்படைக் கடமையென்று கீழ்கண்டவாறு Article 51A-வில் TO SAFE GUARD PUBLIC PROPERTY )   என்று எழுதப்பட்டுள்ளது.மேற்கண்ட கருத்து ஒவ்வொரு இந்தியனுக்கும், குறிப்பாக அரசு/ நகராட்சிப் பள்ளி நிர்வாகத்திற்கும், கல்வித்துறைக்கும் வர வேண்டும் என்றேன்.
               
 ஜெய்வாபாய் பள்ளியின் பெருமைகள்.... 


                                 ...
காலை வழிபாட்டு கூட்டம்.
                    ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியானது இந்தியளவில் 7300 மாணவிகள் கல்வி கற்கும் மாபெரும் பெண்கள் பள்ளியாகும். திருப்பூரில் முதன் முதலாக பெண்களுக்கென உருவாக்கப்பட்ட இப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் 1989 முதல் 2008 வரை , எனது குடும்பத்தையும், குழந்தைகளையும் கூடக்கவனிக்காமல், இரவு பகல் பாராது, ஒரு தோட்டக்காரனாக, காவலாளியாக இருந்து, தனியார் பள்ளிகளில்கூட இல்லாத பல செயல்பாடுகள், வசதிகள்  ஜெய்வாபாய் பள்ளியில் உண்டாக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தொடர்ந்து பத்துமுறை தேசியளவிலும்,மூன்று முறை இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் கலந்து கொண்டு இந்தியளவில் சிறப்பிடம் பெற்ற ஆய்வுக்கட்டுரைகள் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஆய்வுக்கட்டுரைகள் என்றால் மிகையாகாது.  இதனால், மேண்மைமிகு பாரதக் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்,  மாண்புமிகு தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்கள்,முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றோர்களாலும், கல்வித்துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்ட பள்ளியாக ஜெய்வாபாய் பள்ளி விளங்குகிறது.. இத்தனை புகழுக்கும் பெயருக்கும்,திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம், தலைமையாசிரியை ,ஆசிரிய-ஆசிரியைகளின் ஒத்துழைப்புடன், திருப்பூர் நகராட்சியின் ஒத்துழைப்பு, எனது உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு காரணமாகும்.. 

         ல்லதோர் வீணை செய்தே...அதை நலங்கெட...

எங்கெங்கும் தீ வைக்கப்படும் குப்பைகள்..
      நான் ஆற்றிவந்த தன்னார்வப் பணிகள் இனி தேவையில்ல என்று  புதிய பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகம் எனது பணிகளுக்கு தடை போட்டதால், எனது உழைப்பை 01-10-2009 முதல் நிறுத்திக்கொண்டேன். இதனால்  போதுமான தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளிக்குள் சிறுகச்சிறுக  உருவாக்கப்பட்ட பல சிறப்பம்சங்கள்   பொலிவை இழந்து வருகின்றன. இதனால் வருத்தமுற்ற நான், பள்ளி தலைமையாசிரியை அவர்களிடம், 31-03-2011 முதல் தொலை பேசி இலாகாவில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன்..எனவே 01-04-2011 முதல் பள்ளிக்கு முழு நேரமாக எனது உடல் உழைப்பை மரம் செடிகளுக்கு தண்ணீர் விடுவது, மாணவிகளின் டாய்லெட், கணணி ஆய்வகம்,  பள்ளியை சுத்தமாக வைத்திருப்பது, அறிவியல் பூங்காவில் உள்ளதை மாணவிகளுக்கு விளக்குவது, போன்றவற்றைச் செய்திட அனுமதி கேட்டேன்.. சார் நீங்கள் பள்ளிக்குள் சேவை புரிவதை ஒரு சில ஆசிரியர்கள் விரும்ப வில்லை...என்றார்.. காலம் வரும்..என்று கனத்த மனதுடன், தேசியளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மீண்டும் பழைய மெருகிற்கும், பெருமைக்கும் வர, எனது சேவையை  தொடரவும்,  காத்திருக்கிறேன்.. கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இப்பள்ளியில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டால் அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதை எனது அனுபவத்தின் வாயிலாக கூற விரும்புகிறேன்..
        இப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழுவினர் என்ன செய்ய வேண்டும்?.

1)     பள்ளியின் தாளாளர் திரு.டி.ஒ.ஆஷர் மற்றும் திருமதி ஜெய்வாபாய் உயிருடன் இருந்தபோது கையினால் வரையப்பட்ட  படங்கள் 1990-ம் ஆண்டு பெ.ஆ.கழகத்தால் புனரமைக்கப்பட்டு பள்ளியினுள் உள்ளே வந்தவுடன் தெரியும்படி மாட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில் அப்படங்கள் இல்லை. இந்தப்படங்களை தேடிக்கண்டுபிடித்து புதிதாக பிரேம் போட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் அதே இடத்தில் மாட்ட வேண்டும்(பள்ளியின் ஆண்டுவிழாவினையொட்டி (02-03-2012) ஜெய்வாபாய் குடும்பத்தினர் பள்ளிக்கு வருவதையொட்டி, பள்ளி இரவு காவலர் அவர்களின் படத்தை தேடி எடுத்து பழைய கண்ணாடி,பிரேமுடன் மாட்டி வைத்துள்ளார். அவருக்கு நன்றி..) இப்படத்தை நன்றாக பிரேம் செய்து மாட்டவேண்டும்..


பராமரிக்கப்படாத நீர் வீழ்ச்சி..
2)    பள்ளியின் முன்புறம் 1999-ம் ஆண்டு  நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.  நீர் வீழ்ச்சி என்பது அழகிற்காக மட்டுமல்ல அதில், மாணவிகளின் பாடத்தோடு சம்பந்தப்பட்டுள்ள நீரின் சுழற்சி தத்துவமும், மழை நீர் சேகரிப்பு செயல் விளக்கமும், விழிப்புணர்வும் வருமாறு ஏற்படுத்தப்பட்டதாகும்..  இது கடந்த 2 வருடமாக இயக்கப்படாமல் கைவிடப்பட்டு, சுத்தமும் செய்யப்படாமல் இருக்கிறது. இதை சரி செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
.
அன்று..வண்ணப்பறவைகளுடன் 
பாழடந்த வண்ணப்பறவை கூண்டு..
3)     1999-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வண்ணப்பறவைகள் கூண்டு என்பது உணவு சுழற்சியையும், பறவைகளின் வகைகளையும் கூறும் விதமாகவும், மாணவிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாகவும்  இருந்தது. இந்த கூண்டை சரி செய்து  மீண்டும், லவ்பேர்ட்ஸ் மற்றும் தேன்சிட்டு மற்றும் முனியா  பறவைகள்  விடப்பட்டு, அதில் உள்ள ஒரு பெண்ணின் கையில் உள்ள குடத்தில் இருந்து தண்ணீர் வரும்போது, குருவிகள் அதைக்குடிக்கும் அழகை மாணவிகள் கண்டு ரசிக்கத்தக்கவாறு மீண்டும் அந்த நீர்வீழ்ச்சியை இயக்கவேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட அறிவியல் பூங்கா..
4)     2004-ம் ஆண்டு இந்தியரசின் அறிவியல் விழிப்புணர்வு ஆண்டையொட்டி, சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூங்கா என்பது தமிழகத்திலேயே முதன் முறையாக ஒரு நகராட்சிப் பள்ளியில் தனியாரும்(சூர்யபிரபா நிறுவனம்) பெ.ஆ.கழகம் இணைந்து ஏற்படுத்தியதாகும். இதில் 10-ம் வகுப்பு மாணவிகளின் அறிவியல் பாடத்தில் உள்ளவை செய்முறை விளக்கமாக வருகின்றது. இதில் உள்ள சில கருவிகள் பழுதடைந்து, கவனிப்பாரற்று கிடந்தது..சென்ற ஆண்டு சமச்சீர் கல்வி இழுபறியாக புத்தகம் இல்லாமல் இருந்த போது, அப்போதைய முதன்மைக்கல்வி அலுவலர் திரு.தி.ராஜேந்திரன் அவர்களின் அறிவுறத்தலால், இவற்றைச்சரிசெய்ய தலைமையாசிரியை அவர்கள் என்னை அழைத்து, சரி செய்யக்கேட்டதால், அறிவியல் பூங்கா மீண்டும் பயன் பாட்டிற்குக்கொண்டு வரப்பட்டது..தற்போது இது மீண்டும் கவனிப்பாரின்றி பழுதாகி பூட்டப்பட்டுள்ளது.. இவற்றை மீண்டும்  சரி செய்து, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்..

5)    2005-ம் ஆண்டு மாணவிகள்  தண்ணீர் அருந்தும்போது சிந்தும் நீர் மற்றும் கைகழுவும்  நீரை கல்வாழை, கரி, கூழாங்கற்கள் கொண்டு இயற்கை முறையில் மீண்டும் சுத்திகரித்து அதை சாலையோரப்பூங்காவில் உள்ள மரங்களுக்கு விடப்பட்டு வந்தது.  இந்த செய்முறை ஆய்வு தமிழகரசின் சைன்ஸ் சிட்டியின் விருது பெற்று, பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டதாகும். இக்கழிவு நீர் மறுசுழற்சியமைப்பு சுத்தம் செய்யப்பட்டு, கல்வாழைகள் வைத்து சுத்திகரித்து அத்தண்ணீரை மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

6)     பள்ளியின் தென்புறச்சுவற்றின் மாடியில் தென்புறம் உள்ள ஆல மரத்தை வேருடன் எடுத்து, மீண்டும் வராதவாறு ஆசிட் ஊற்றி பூச வேண்டும்.
7)     பள்ளியின் பிரதான மின்சார மீட்டர் உள்ள பெட்டியில் பராமரிப்பு செய்து, பாதுகாப்புடன் மூடவேண்டும்..

8)     இரண்டு புதிய மின் ஸ்விட்ச் பாக்ஸ் பெட்டிகள் 3 வருடமாக சும்மா சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. இதை ஸ்டோர் ரூம் மற்றும் ஆசிரியர் அறையில் பயன் படுத்தலாம்..

9)      அலுவலகம் முன்பு உள்ள கை கழுவும் பேசின் சுத்தம் செய்யப்பட்டு, குழாய் பொருத்தி மீண்டும் இதை உபயோகப்படுத்திட வேண்டும்.

10)     தீ தடுப்புச்சாதனங்கள் ஆங்காங்கே கீழே கிடக்கின்றன. இவைகளை ரீ சார்ஜ் செய்து, பழையபடி சுவரில் பொருத்துவது, தீ தடுப்பு பக்கெட்டுகளை உரிய ஸ்டேண்டில் மாட்ட வேண்டும்..
11)     குடி நீர் தொட்டிகள் அனித்தும் மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

12)     காலை வழிபாட்டு பள்ளி மைதான மேடைக்கு, அங்கேயே 3 வருடமாக கீழே கிடக்கும் ஆங்கிள், தகரம் பயன்படுத்தி மேடைக்கு மேல் கூரை அமைக்கவேண்டும்..

13)    கணிப்பொறி ஆய்வகக்கூடத்தில் பயன்படுத்தாமல் கீழே போட்டு வைத்துள்ள கணணிகளை பழுது பார்த்து மாணவிகளின் உபயோகத்திற்கு மீண்டும்  பயன்படுத்த வேண்டும்..

14)   ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இருக்கைகள் கடந்த மூன்று வருடங்களாக வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து துருப்பிடித்துக் கிடக்கின்றன. பெஞ்ச், டெஸ்க் (தேக்குமரம் & மற்றும் இரும்பினால் ஆன) போன்றவற்றை பழுது பார்த்து மீண்டும் மாணவிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

15.    பள்ளியின் பெருமைகளை விளக்கும் முகமாக முன்பு சிகரத்தை நோக்கி என்ற பள்ளியின் சாதனைப்படங்களை (இரண்டு தலைமையாசிரியைகளின் தேசியவிருது, குடியரசுத்தலைவரின் கணிப்பொறி விருது, தமிழகமுதல்வருடன் நமது மாணவிகளின் படங்கள் உட்பட) சுற்றுச்சூழல்விருது, போன்ற புகைப்படங்களை பெரிய அளவில் மீண்டும் பிளக்ஸ் போட்டு பொருத்த வேண்டும்..

16)    சாலையோரப்பூங்காவின் நுழைவு வாயிலில் உள்ள பள்ளியின் பெயர்பலகை நகராட்சிப்பள்ளியாகவே இருக்கிறது.. இதை மாநகராட்சிப்பள்ளியென்று மாற்ற வேண்டும்.
17)  பள்ளியின் புதிய வகுப்பறைகளுக்கு வரும் கிழக்குப்பகுதியில் உள்ள கேட்டிற்கு உள்ளேயுள்ள மாணவிகள் ரோட்டில் போகிறவர்களுக்கு தெரியாமல் இருக்க இரும்பு தகடு, மற்றும் கேட்டின் பில்லர் சுவர் உயர்த்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

18)  தற்போது சத்துணவு கூடம் உள்ள கட்டடத்திற்கு வரும் மின் ஒயரின் இரும்புகம்பி அறுந்து கிடக்கிறது..இதை சரிசெய்யாவிட்டால் மின்சாரத்துடன் உள்ள ஒயர் அறுந்து மாணவிகளுக்கு பாதிப்பு உண்டாகிவிடும்.

19)  ஈஸ்ட்மேன் நிறுவனத்தார் ரூ.75 லட்சத்தில் கட்டித்தந்த என்.ஜி.எம். கட்டடத்தில் வகுப்பறை கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதனால் மாணவிகளின் கைகள் உடைந்த கண்ணாடிகளால் கிழித்துக்கொள்வார்கள். எனவே மாணவிகளின் பாதுகாப்பை முன்னிட்டு , கண்ணாடிகளை மாற்ற வேண்டும்.

20) அல்லிக்குளத்தில் பல அலங்கார ஓடுகள் இல்லை. மீண்டும் அமைக்க வேண்டும். இப்படி சின்னச்சின்ன பராமரிப்பு வேலைகள் நிறைய இருக்கிறது.
     அதே சமயம் சில பெரிய வேலைகளும் இருக்கின்றன..

21) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பெற்றோர்-ஆசிரியர் கழகப்பங்களிப்புடன் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக மெதுவாக கட்டப்பட்டு வரும் கழிப்பறைகள் விரைந்து  கட்டப்பட்டு, மாணவிகளின் பயன் பாட்டிற்குக்கொண்டு வர வேண்டும்.ஜூன் 15 முதல் திறக்கப்பட்டாலும் டாய்லெட்டில் தண்ணீர் வருவதில்லை. உடனடியாக பைப் சரி செய்யப்பட வேண்டும். மாணவிகள் டாய்லெட் போக முடியாத நிலையில் இப்புதிய அழகான டாய்லெட்டுகள் துர் நாற்றம் வீசுகிறது.

22) மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் தரை தளம், மற்றும் இரண்டு மாடிகளில் உள்ள 18 டாய்லெட்டுகள் உபயோகப்படுத்தப்படவில்லை..மேல் மாடியில் உள்ள 50000 லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததும் மற்றும் தண்ணீர் கசிவு காரணமாக வகுப்பறைகள் திறக்கப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் இன்னும் உபயோகப்படுத்தாமல் இருக்கிறது..இதை உடனடியாக பயண்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.(தற்போது ஜூன் 15-ல் இருந்து பயன்படுகிறது. ஆனால் தண்ணீர் கசிந்து கட்டடம் வீனாகுவதற்குள் சரி செய்ய வேண்டும்)

அன்று.. மாணவிகளுக்கான இன்சினரேட்டர்
 23) தமிழகத்திலேயே முதன் முதலாக 1997-ல் பள்ளியில் சானிட்டரி நாப்கின் பாய்லறை நானே வடிவமைத்து பயன்பாட்டிற்குக்கொண்டு வந்தேன். இதை மீண்டும் வேறு வடிவமைப்பில் 2005-ல் இரண்டு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது தற்பொது பராமரிப்பில்லாமல் புகை போக்கும் குழாய் உடைந்தும்,  பாத்ரூம் சுகாதாரமாகவும் இல்லை. இதை சரி செய்ய வேண்டும். 2008-ல் வாங்கப்பட்ட மின்சாரத்தால் ஆன சானிட்டரி
இன்சினரேட்டர் இன்றுள்ள நிலைமை.

 பாய்லரை பயன்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது..இதை பயன் பாட்டிற்குக் கொண்டுவந்து, மாணவிகளின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
                 
கலையரங்கத்தின் வி.ஐ.பி. டாய்லெட்
கலையரங்கத்தின் மேடைச்சுவர்.
24) வாராது வந்த மாமணிபோல நமது பள்ளிக்கு சென்ற திமுக.ஆட்சியில் திருப்பூர் மாநகராட்சியின் சார்பாக(மாநகராட்சியின் முதல் .மேயர் திரு.கே.செல்வராஜ் அவர்களின் பேராதரவால்) மிகப்பிரம்மாணடமான.முறையில் முப்பதாயிரம் சதுர அடியில்(மேடை மட்டும் அய்யாயிரம் சதுர அடியில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இக்கலையரங்கம் கட்டப்பட்டதில் இருந்து அரசின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதனுடைய கண்ணாடிகள், கதவுகள் மின்சார பெட்டி போன்றவை உடைக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள நவீன டாய்லெட்டுகள் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. மேலும் சுவர்களில் வேண்டாத வாசகங்கள் எழுதப்பட்டும்,கிறுக்கப்பட்டும் இருக்கிறது. எனவே இக்கலையரங்கத்தின் மேடையில் ஃபால் சீலிங் அமைக்கப்பட்டு, மின் விசிறிகள் மாட்டப்பட வேண்டும். கலையரங்கத்தின் பிளாஸ்டிக்கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதால், இரும்பு கதவுகளாக மாற்றியமைக்க வேண்டும்..கலையரங்கத்தின் மேடையில் உள்ள போகஸ் லைட்டுகளை, வேறு இடத்தில் பொருத்தி மேடைக்கு முழுமையாக வெளிச்சம் வருவது போலச்செய்ய வேண்டும். கலையரங்கத்தின் உச்சியில் அன்றைய முதல்வரின் படமும், துணை முதல்வரின் படமும் வரையப்பட்டுள்ளது..ஆட்சி மாற்றம் காரணமாக அவைகள் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை காந்தி மற்றும் அண்ணா படமோ அல்லது ஆஷர், ஜெய்வாபாய் படமோ வரைந்தும், ம என்ற எழுத்து கீழே விழுந்தும் விட்டது. இதை சரி செய்ய வேண்டும்..


  கலையரங்கத்தின் உள்ளே செம்மண் மற்றும் மணல் கொட்டப்பட்டோ அல்லது சிமெண்ட் தளம் போடப்பட்டு, காலை வழி பாட்டுக் கூட்டங்கள் நடத்தவும், கோ கோ, வாலிபால், பேட்மிட்டன்  போன்ற உள் விளையாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தலாம்.

25) மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் தரை தளம், மற்றும் இரண்டு மாடிகளில் உள்ள 18 டாய்லெட்டுகள் உபயோகப்படுத்தப்படவில்லை..மேல் மாடியில் உள்ள 50000 லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததும் மற்றும் தண்ணீர் கசிவு காரணமாக வகுப்பறைகள் திறக்கப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் உபயோகப்படுத்தாமல் இருக்கிறது..இதை உடனடியாக பயண்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதே கட்டடத்தில் புதிய 5 ஜன்னல் கதவுகள் உடைந்து கீழே கிடக்கிறது. இதை வெல்டு வைக்க வேண்டும். தென்புற படிக்கட்டுகள் பகுதியில் மண்கொட்டி, படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும்...

26) புதிய வகுப்பறை கட்டும்போது, பழைய வகுப்பறைகளின் இரும்பு ஆங்கில்கள், சிமெண்ட்சீட்கள் கழற்றி வைக்கப்பட்டுள்ளது. இவைகளைக்கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டி கூரை அமைக்கவேண்டும்.


27) கூடைப்பந்தாட்ட மைதானத்தைச்சரிபடுத்தி, கான்கிரீட் தளம் அமைத்து மாணவிகளின் பயன்பாட்டிற்குக்கொண்டு வர வேண்டும்.  இதற்குப்பக்கத்தில் உள்ள மண்மேடுகள் அகற்றப்பட்டும், நீளம் தாண்டும் பிட் அமைக்கலாம்.

28)  குமரன் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு, இடையில் இரும்பிலான சட்டர் போடப்பட்டது..ஏனென்றால், சட்டரைத்தூக்கி விட்டு, இந்த இரண்டு வகுப்பறைகளையும் ஒன்றாக்கி(டாக்டர்.அப்துல்கலாம் வகுப்பறையில் செய்திருப்பது போல) கணிப்பொறியுடன் கூடிய ஆடியோ விசுவல் அரங்கமாக மாற்றுவதற்காக திட்டமிட்டு கட்டப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும். 

          1990-ம் ஆண்டு ,மாதம் ஒரு பெற்றோர் ஒரு ரூபாய் தரவேண்டும் என்று திட்டம் தீட்டியதில் ஒரு வருட வருமானம் ரூ.32000/-ம் மட்டுமே..இதை பல்வேறு திட்டங்கள் மூலம் படிப்படியாக வளரச்செய்து , இன்று பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளைக்கு சுமார் ரூ.35 லட்சம் வருகிறது..பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் 60 ஆசிரியைகளும், 8 பிற பணியாளர்களும் உள்ளனர். முன்பு போல இனி வகுப்பறைகள் கட்ட அவசியமில்லை. வருடத்திற்கு ரூபாய் பத்துலட்சமாவது ஆசிரியைகள் சம்பளம் போக மீதியாகும்..எனவே இருக்கும் பணத்தில் மாணவிகளுக்கு மேலும்,  பல்வேறு வசதிகளையும், ஸ்மார்ட் கிளாஸ், போன்ற நவீன கணிப்பொறிக்கல்வியைக்கூட  வழங்கமுடியும். 




       1989 முதல்2008 வரை, கனவுப்பள்ளியாக இரவு பகல் பாராது   உழைத்து, சிறுகச்சிறுக மாணவிகளின் நலனுக்காக  உருவாக்கப்பட்ட அமைப்புகள்,அறிவியல் பூங்கா, டாய்லெட்டுகள் மற்றும் பள்ளிச்சுகாதாரம் போன்றவை சீரழிந்து வருவதைப்பார்த்து ரத்தக்கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.


2005-ல் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் விருது

தற்போது இப்பள்ளியைக்காணும்போது 
       நல்லதோர் வீணை செய்தோம்..
  அதை நலங்கெடப்புழுதியில் எறிந்து விட்டனரே....என்று மனம் வெம்பி அழத்தோன்றுகிறது..

   

 




Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!