Sunday, September 16, 2012

அக்கிரமம்!.மாநகராட்சிப்பள்ளி இடத்தை ஆக்கிரமித்த ரோட்டரி கிளப்பினர்...


கல்வித்தாஜ்மஹாலை ஆக்கிரமிப்பு செய்த திருப்பூர் ரோட்டரி கிளப்பினர்..

உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றி அனைவரும் அறிவோம். அதென்ன கல்வித்தாஜ்மஹால்.?.எனக்கேட்கிறீர்களா...திருப்பூரில் ஜெய்வாபாய்  நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குத்தான் கல்வித்தாஜ்மஹால் என்ற புனைப்பெயர் உண்டு...திரு.டி.ஓ. ஆஷர் என்பவர் 1948-ம் ஆண்டு தனது மனைவியின் கடைசி வேண்டுகோளுக்கிணங்க முதன் முதலில் திருப்பூரில் ஒரு பெண்கள் பள்ளியைத்தொடங்கி அதை நகராட்சிக்குத்தானமாக வழங்குகிறார். ஒரு முறை இப்பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல  சாகத்தியவிருது பெற்ற  நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைப்படித்துவிட்டு, 6000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கல்விகற்கும் இப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மஹால் எனப்பெயரிட்டழைத்தார்.


                                     

 ஜெய்வாபாய் பள்ளி 
வரலாறு..

            திருப்பூரில் பஞ்சு வியாபாரத்தில் சிறந்து விளங்கியவர் தேவ்ஜி ஆஷர். இவரது மனைவி ஜெய்வாபாய். தனது 33 வது வயதில் 4 வது பிரசவத்தின்போது ஏற்பட்ட உடல் நலக்கோளாறால், இறக்கும் தருவாயில் தனது கணவரிடம், திருப்பூரில் பெண்களுக்கென்று தனியாக பள்ளி கட்டுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார். தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில் 1942-ம் ஆண்டு ஷீமதி ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷர் உயர் நிலைப்பள்ளியை ஆரம்பித்து நகராட்சிக்கு வழங்குகிறார். இந்தியளவில் 7000-த்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவிகள் கல்விபயில்கின்ற  பெண்கல்வியில் முத்திரைபதிக்கும்..  ஒரு நகராட்சிப்பெண்கள் பள்ளி...இதன் மீது யார் வழக்குத்தொடுக்க முடியும் என்ற வினா ஏற்படுவது சகஜம் தான்.....அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்....அப்படியானால் இதற்குப்பின் வசதியும் அரசியல் செல்வாக்கும் பெற்றவர்களாலதான முடியும் என நீங்கள் நினைத்தால், அது சரிதான்...இந்த விசித்திர வழக்கை கீழே பாருங்கள்..

ரோட்டரி பள்ளி பெயர் பலகை
      

      இந்த தீர்ப்பு பற்றி 29-7-2005-ம் தேதி தீக்கதிர் நாளிதழில் அதன் நிருபர்.

திரு.வே.தூயவன் அவர்கள் முக்கியமானதை எழுதியுள்ளார். ( நன்றி: தீக்கதிர்.) அதிலிருந்து எடுத்து எழுதப்பட்டது..

         திருப்பூர் நகரின் இதயப்பகுதியில் 1942-ம் ஆண்டு முதல் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளிக்கூடம் சுமார் ஏழரை ஏக்கரில் செயல்பட்டு வந்தது. இப்பள்ளியின் தெற்குப்பகுதியில்  திருப்பூர் ரோட்டரி சங்கம் மழலைகள் பள்ளி நடத்துவதற்கு 1960-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆலோசனையை மீறி  நிபந்தனையுடன் வழங்கியது. ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி வளாகத்திற்குள் சிறுவர் பள்ளி(மாண்டிசோரி) மாதர் பூங்காவும் அமைத்து மீண்டும் நகராட்சிக்கே ஒப்படைத்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

ஜெய்வாபாய் பள்ளிக்குள் ரோட்டரி பள்ளி

          திருப்பூர் நகராட்சியின் நிபந்தனைப்படி, மாண்டிசோரி பள்ளியமைத்த ரோட்டரி கிளப்பினர் மாதர் பூங்கா அமைக்கவில்லை..மேலும் தாங்கள் ஒத்துக்கொண்டபடி மாண்டிசோரி பள்ளியை(  ரோட்டரி சங்கத்தின் கொள்கைகளை மீறி) நகராட்சிக்கு வழங்காமல் தாங்களே வைத்துக்கொண்டு, பள்ளியை நடத்தியதோடு, தங்கள் வாராந்திர கிளப் நடவடிக்கைகளையும் ( தண்ணியடிப்பது, மட்டன் சாப்பிடுவது , யாரவது ஏழைகளுக்கு சிறு உதவி செய்வது உட்பட) செய்து வந்தனர். இந்த நிலையில் 1987-ம் ஆண்டு ரோட்டரி கிளப்பினரின் வேண்டுகோளை ஏற்றும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தை 99 வருட குத்தகைக்கு வழங்க நகராட்சி நிர்வாகமும், மாநில அரசும் தாரை வார்க்க முடிவு செய்தன. நகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் வந்தது..அப்போதைய மார்க்சிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் திரு.என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டது. இதில் என்ன கொடுமையென்றால்...ஒரு நகராட்சிப்பெண்கள் பள்ளியின் இடத்தைத்தாரைவார்க்க, சி.பி.ஐ.(எம்) கட்சி தவிர பிற அனைத்து கட்சிகளும் , பணவசதியும் செல்வாக்குமிக்க ரோட்டரிகிளப்பினருக்கு ஆதரவாக இருந்தனர் என்பது தான் (அன்று பறம்பு மலையை முற்றுகையிட்டு, பாரி என்ற அரசனைக்கொல்ல ஒன்று சேர்ந்த சேர, சோழ ,பாண்டிய மன்னர்கள் போன்று) கொடுமை. இதையறிந்த பள்ளி தலைமையாசிரியை, பிற ஆசிரியைகள் அனைவரும்  நகர் மன்றம் சென்று ரோட்டரி பள்ளிக்கு இடம் கொடுப்பதற்கு ஆட்சேபனை செய்தனர்.
ஜெய்வாபாய் பள்ளி கலையரங்கம்.
                                                      
காலை வழிபாட்டு கூட்டம்..
        இப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் என்ன செய்தது என்ற கேள்வி வருகிறதா? ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் தான் ரோட்டரி பள்ளியின் தாளாளர். அது மட்டுமல்ல அன்றைய நகர்மன்றத்தலைவரின் உற்ற நண்பர்.. 1988-ம் ஆண்டு , நகர் மன்ற ஆணையாளரின் எதிர்ப்பை மீறி,  சி.பி.ஐ.(எம்) கட்சியினரை சூழ்ச்சி செய்து வெளியேற்றிவிட்டு,  நகர் மன்றத்தில், ரோட்டரி பள்ளிக்கு ஒரு ஏக்கர் இடத்தைத்தர தடையின்மைச்சான்று வழங்கிட  தீர்மானம் போட்டனர்.., நகராட்சி ஆணையாளரை மீறி இந்த தீர்மானம் வந்ததாலோ என்னவோ தெரியவில்லை, ஆணையாளர் தீர்மானத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பாமல், சென்னையில் உள்ள நகராட்சி மற்றும் குடி நீர் வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டார். இதற்கிடையே ரோட்டரி பள்ளியினர் தங்களது மாண்டிசோரி பள்ளியை 5-ம் வகுப்பு வரை நர்சரி & பிரைமரி ஆங்கில வழிப்பள்ளியாக மாற்றி விட்டனர். நர்சரி பள்ளி விதிமுறைகளுக்குப்புறம்பாக சங்க கூட்டங்கள் உட்பட இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன  இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது..          1990-ம் ஆண்டு ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் இணைந்த என். கோபாலாகிருஷ்ணன் மூலம் பள்ளியின் இடம் ரோட்டரி கிளப்பினர் ஆக்கிரமித்துள்ளனர் என்ற செய்தி தெரியவந்தது..அதிலிருந்து பள்ளியின் இடம் சம்பந்தமாக ஆறு ஆண்டுகள்  கடிதம், தீர்மானம் என பல்வேறு வகையிலும் தமிழகரசிற்கு பல முறை முறையிட்டும் எதுவுமே நடக்கவில்லை...ஏனென்றால்  நகர்மன்றத்தலைவர் அ.தி.மு.க.வாக இருந்தாலும் , தி.மு.க.வாக இருந்தாலும் அவர்கள் பணக்கார ரோட்டரி கிளப்பினரின் பாசப்பிணைப்பில் இருந்ததால் எங்களின் கோரிக்கையெல்லாம்...குப்பைக்கூடைக்கே போயின.. 1996-ம் ஆண்டு அன்றைய தமிழகரசு, ரோட்டரி பள்ளிக்கு ஜெய்வாபாய் பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தை  99 வருட கால குத்தகைக்கு தர இருப்பதாக கடிதம் மூலம் தாசில்தார் தெரிவித்தார். அப்போது ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 5000-த்தைத்தாண்டியது..விளையாட்டு இடம் போன்றவை குறைந்தால் பள்ளி அங்கீகாரம் போய்விடும், பள்ளிக்குத்தேவையான அனைத்து வசதிகளும் செய்வதற்கு இடம் இருக்காது.....என்ன செய்வது எனத்தெரியவில்லை.

        .அந்த சமயத்தில் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் திரு. கே.சந்துரு அவர்களின் வாதத்திறமையும்,, ஏழை பாழைகளின் பக்கம் நின்று நியாயத்திற்கு போராடுபவர் என பத்திரிக்கை வாயிலாக கேள்விப்பட்டு, அவரிடம் பாரத குடியரசு தலைவருக்கு வரவேற்பு..
சென்றோம்..அவரும் எங்களின் நியாயம் அறிந்து சென்னை உயர் நீதி மன்றத்தில், தமிழகரசு, பள்ளி இடத்தை ரோட்டரி பள்ளிக்குத்தருவதற்கு தடையானை பெற்றுத்தந்தார். தற்காலிகமாக பள்ளி இடம் பறிபோவது தடுக்கப்பட்டது..ஆனால் பள்ளிக்குள் ரோட்டரி பள்ளியினர் தங்களது பள்ளி உட்பட அனைத்துவித நடவடிக்கைகளயும்  தமிழகரசு மற்றும் நகர்மன்றத்தின் ஆதரவுடன் தொடர்ந்தனர். கூடவே ஜெய்வாபாய் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகளை விலைக்கு வாங்கப்பார்த்தனர்...மசியவில்லை என்றபோது அரசியல் ரீதியாக மிரட்டலும் வந்தது...பெற்றோர்-ஆசிரியர் கழகத்திற்கு ஆதரவாக சி.பி.ஐ.(எம்) இருந்த காரணத்தால் அடக்கியே வாசித்தனர்.

         ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை சார்பாக திரு.என்.கோபாலாகிருஷ்ணன் தாக்கல் செய்த இந்த வழக்கு(W.P.19362 of 1996) , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரணியம் முன்னிலையில் விசாரனை நடைபெற்றது. ரோட்டரி கிளப்பினருக்கு ஆதரவாக தமிழகரசும், நகராட்சியும் ஆஜராகி வாதிட்டனர் ஜூன் 24-ம் தேதி 2005-ம் ஆண்டு நீதியரசர் சிவசுப்பிரணியம் அவர்கள் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை, ஜெய்வாபாய் பள்ளிக்கு ஆதரவாகத்தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் மாநில அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கடுமையாக விம்ர்சித்துள்ளார். மேலும் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியைப்பாராட்டியுள்ளார்.

         இந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக திருப்பூர் நகராட்சி ஆஜராகியிருப்பது மிகவும் முறையற்ற செயல். பிரச்சனைக்குரிய இடத்தை தனியாருக்கு நகராட்சி வழங்கியது சட்ட விரோதமானது. அந்த இடத்தில் ரோட்டரி சங்கம் தொடர்ந்து இருந்தது எந்த வகையிலும் முறையில்லாதது. திரும்ப ஒப்படைப்பதாக கூறிய இடத்தி ஏதோ ஒரு வகையில் கைப்பற்ற ரோட்டரி சங்கம் முயன்றதி எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

          தனியார் சங்கத்தின் குறுகிய நலனுக்காக நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறி அவர்களுக்கு.வளைந்து கொடுத்திருப்பது எதிர்பாராதது. விதி முறைகளை மீறியது மட்டுமின்றி ரோட்டர் சங்கத்திற்கு குத்தகைக்குவழங்க வேண்டும் என்று மாநில அரசு அனுமதித்திருப்பது வருந்தத்தக்கது. நகராட்சி பள்ளிக்கு உரிய சொத்தின் ஒரு பகுதியில் ரோட்டரி கிளப் கட்டடம் கட்டிக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததன் மூலம் , சட்ட விரோத நடவடிக்கை நியாயமானது ஆகிவிடாது.                       

தினமணி செய்தி...
           உள்ளூர் வருவாய்த்துறையும், கல்வித்துறையும்,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகமும், பொதுமக்களும் இடத்தை மாற்றிக்கொடுக்க கடும் எதிர்ப்பைத்தெரிவித்துள்ளனர்.  எனினும் ரோட்டரி சங்கம் விதிமுறைகளுக்கு புறம்பாக மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துவதற்கு ஆதரவாக மா நிலஅரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. ஒரு பள்ளிக்கு அருகில் மற்றொரு பள்ளி நடத்துவதற்கு எவ்வளவு தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதியையும் அரசு புறக்கணித்துள்ளது.

           இந்தப்பிரச்சனைகளோடு நேரடி தொடர்பு கொண்ட அனைத்துத்தரப்பினரின் நியாயமான ஆட்சேபணைகளையும் மாநில அரசும், நகராட்சியும் புறக்கணித்திருப்பது துரதிருஷ்டவசமானது. இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நம் நாட்டின் மிகப்பெரிய பெண்கள் பள்ளிக்கூடங்களில் ஒன்றின் சொந்த இடத்தை தனியார் சங்கத்துக்கு வழங்க அரசும் நகராட்சியும் உறுதியுடன் செயல்பட்டுள்ளனர். இதற்காக சட்ட விரோதமாக செயல்படவும் நகராட்சி தயாராகியுள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் திருமதி ஆர்.ஜரீன் பானு பேகம்..

            இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர்(திருமதி.ஜரீன் பானு) விருது பெற்றுள்ளார்.  நம் நாட்டின் குடியரசுத்தலைவரும்(மேன்மை மிகு டாக்டர் அப்துல்கலாம்) மாநில முதலமைச்சரும்(மாண்புமிகு ஜெ.அம்மா அவர்கள்) பாராட்டியுள்ளனர். பல்வேறு சமூக நல நடவடிக்கைகளில் இந்த பள்ளி மாணவிகள் விருதுகள் பெற்றுள்ளனர். பல்வேறு கல்வியாளர்கள் இப்பள்ளி வளர்ச்சியைப் பாராட்டியுள்ளனர்.

            இந்த வகையில் இந்த பள்ளிக்கூடம் ஒரு புதுமையான மிகவும் அரிதான கல்வி நிறுவனம் ஆகும். அதுவும் நகராட்சியால் நடத்தப்படும் இந்த பள்ளி எந்த ஒரு தனியார் பள்ளியோடும் ஒப்பிட்டாலும் சிறப்பானதாக திகழ்கிறது. இப்படிப்பட்ட நகராட்சிப்பள்ளிக்கு, சிலரது நிர்பந்தத்திற்கும், குறுகிய நலன்களுக்காகவும் அதே நகராட்சியால் பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது.அதுவும் பள்ளியின் இடம் குறைந்தால் ஏற்படும் மோசமான பாதிப்பை பற்றியும் நகராட்சி புத்தியில்லாமல் இடத்தை ஒதுக்க முயன்றுள்ளது. எனவே நகராட்சியின் ஒட்டு மொத்த செயல்பாடும் சட்ட விரோதமானது.

 v    ஜெய்வாபாய் பள்ளி பருந்துப்பார்வை.ய்ஜெ
                                                                        எல்லோரையும் ஒதுக்கிவிட்டு.     அரசும் நகராட்சியும் , ஆசிரியர்கள், பொதுமக்களின் ஏகோபித்த கோரிக்கையையும் நிராகரித்தது துரதிருஷ்டவசமானது..மேலும் இப்பிரச்சனையை நேரடியாக கையாளக்கூடிய சம்பந்தப்பட்ட கல்வித்துறை, உள்ளூர் வருவாய்த்துறையினரின் நியாயமான ஆட்சேபனைகளையும் இவர்கள் புறக்கணித்துள்ளனர். இத்துடன் நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தனியார் கிளப் ஒன்று கான்வெண்ட் அமைப்பதற்கு சாதகமாக உறுதியாக செயல்பட்டுள்ளனர். இந்த விசயத்தில் அரசே ஒப்புக்கொண்டுள்ள படி நகராட்சி சட்ட விரோதமாக செயல்படவும் துணிந்துள்ளனர் என்பதை ஒட்டு மொத்த நிலவரங்களும் வெளிப்படுத்துகின்றன.

                                        - நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம்..            எனவே ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் பள்ளிக்கு ஒட்டுமொத்த நிலத்தின் மீதும் முழு உரிமை உள்ளது. இந்த நிலத்தில் பிரச்சனைக்குரிய பகுதியை 2006-ம் ஆண்டு ஜீன் 1-ம் தேதிக்கு முன்பாக ஜெய்வாபாய் பள்ளிக்கு வழங்கிட வேண்டும் என்று நீதிபதி சிவசுப்பிரமணியம் அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளார்.


        மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து ரோட்டரி பள்ளி நிர்வாகத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு (W.A.No. 2211 of 2005 ) செய்தனர்.( அதே சமயத்தில்  தங்களுக்கிருந்த அரசியல் செல்வாக்கைப்பயன்படுத்தி பெ.ஆ.கழகத்தலைவர் ஆ.ஈசுவரனை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்கக்கூறினார்கள். அவர் மறுக்கவே,  ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தையே கல்வித்துறையின் மூலம் 9-1-2006 அன்று கலைத்துவிட்டனர். மீண்டும் நடந்த தேர்தலில் 9 முனைப்போட்டியில் ஆ.ஈசுவரன் 99% சதமான வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.) இதன் மீதான தீர்ப்பை நீதியரசர்கள் எலிபி தர்மாராவ் மற்றும் எஸ்.ஆர்.சிங்காரவேலு இருவரும் 28-2-2008-ல் வழங்கினார்கள். அதில் ஏற்கனவே 24-6-2005-ல் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் எனக்கூறி ரோட்டரி கிளப்பினர் தாக்கல் செய்த ரிட் மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.

            இந்த தீர்ப்பின் மீதும் சமாதானம் ஆகாத ரோட்டரி கிளப்பினர் மீண்டும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனுவை (Review Application No, 61 of 2008 )  தாக்கல் செய்தனர்..இதே சமயம் ரோட்டரி பள்ளிக்கான அங்கீகாரத்தை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் (.ஏனென்றால் அரசு விதி 10(1)ஏபி-ன் படி, ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற அந்தப்பள்ளியின் பெயரில் இடப்பத்திரம் இருக்க வேண்டும், அல்லது 30 வருட வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விதிகளையும் தனியார்பள்ளிகளுக்கு கறாராக அமுல்படுத்தும் மெட்ரிகுலேசன் கல்வித்துறை 40 ஆண்டுகளாக ரோட்டரி பள்ளிக்கு மட்டும் அமுல்படுத்தவில்லை.) கோர்ட் தீர்ப்பையொட்டி ,புதுப்பிக்க மறுத்துவிட்டார். எனவே அவர்கள் மீதும் Writ Petition Nos 14670 and 14671 of 2008  வழக்குப்போட்டனர்.           மேற்கண்ட வழக்கின் மீதான தீர்ப்பு 22-10-2010-ல் வந்தது. அதிலும் ரோட்டரி கிளப்பினர் தாக்கல் செய்த அனைத்து பெட்டிசன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதற்குப்பிறகாவது உலகாளவிய ரோட்டரி கிளப்பின் ஒரு அங்கமான திருப்பூர் ரோட்டரி கிளப்பினர், ரோட்டரி கிளப்பின் கொள்கை, 

கோட்பாடுகளுக்கு எதிராகவும், கோர்ட்டில் தாக்கல் செய்த உறுதிமொழிக்கு மாறாகவும் , தங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு ரோட்டரி பள்ளியை மாற்றவில்லை.  மாறாக மேற்கண்ட தீர்ப்பையும் எதிர்த்து ,ஈகோவின் காரணமாக  சுப்ரீம் கோர்ட்டிற்கு (எண்: 4053/2011) சென்றுள்ளனர்.  ஈகோவா..ஆம் ஈகோதான்..ஒரு சாதாரண நகராட்சிப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், சமூகத்தில் செல்வமும், செல்வாக்கும் பெற்ற மல்டி மில்லியனர்களான ரோட்டரி நிர்வாகத்தினருக்கு எதிராக, நகராட்சி மற்றும் தமிழக அரசையும் எதிர்த்து 1996 முதல் சளைக்காமல் போராடி வருபவர்கள் டெல்லி வரை வர  நேரமும், பணமும் இருக்காது..மேலும் அதற்குள் தங்களுக்கு ஆதரவான நபரை  பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவராக்கிவிட்டால் வழக்கை வாபஸ் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தின் காரணமாகவே சுப்ரீம் கோர்ட்டிற்கு வழக்கை எடுத்துச்சென்றுள்ளனர்.. வெல்லுமா...பெண்கல்வி..? 

        

1 comment:

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...