Sunday, February 19, 2012

நூறு சத தேர்ச்சியும்..மிதிபடும் மாணவர்களும்.....

                             யாரைக்குறை கூறுவது?

   தமிழக கல்விக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? மாணவர்களுக்கு என்னவாயிற்று?  சென்னையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியையே.. வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொள்கிறார்..உடுமலைப்பேட்டையிலோ ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரின் அடிதாங்காத 11-ம் வகுப்பு மாணவர் 3 கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்...அதே சென்னையில் ஒரு கல்லூரி மாணவர் தனது தோழியை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தியும் வருகிறது.. இச்செய்திகள் கல்வியாளர்களையும், சமூகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும், ,பெற்றோர்களையும் அதர்ச்சியடையச்செய்துள்ளது.
.
               பூவைப்போல தூவப்படவேண்டிய கல்வி-இங்கு
              ஆணியைப்போல அறையப்படுகிறது..

என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நிஜம் என்பதை பறைசாற்றுகின்றன..               1996-க்குப்பிறகு புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கல்வி வெகு விரைவாக தனியார் மயமாகியது..சாராய வியாபாரிகள் கையில் கல்விக்கடவுள் சரசுவதியும், அரசின் பாக்கெட்டில்..மதுஅரக்கனும் குடிபுகுந்தனர்..
விளைவு..தனியார் பள்ளிகள் செழித்தோங்கி வளர்ந்தன..முதன் முதலில் ராசிபுரத்தில் ஒரு புதிய கல்விமுறை தமிழகரசின் ஆசியுடன் அரங்கேறியது...11-12ம் வகுப்பிற்கு மட்டும் தனியாக விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளிகள்...அல்ல ..அல்ல...இவை தொழிற்சாலைகள்...இங்கு மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து,குளித்து 5 மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்து விட வேண்டும்..இரவு 11 மணி வரை படிப்பு படிப்பு தான்..11-ம் வகுப்பு பாடம் என்பது பெயருக்குத்தான்..12-ம் வகுப்பு பாடத்தையே இரண்டு ஆண்டுகள் படித்து, மனப்பாடம் செய்வது, எழுதுவது, திருத்துவது, படிப்பது...அவ்வப்போது கொஞ்சம் வயிற்றிற்கும் போடப்படும். குறிப்பாக நாமக்கல், ராசிபுரம்,திருச்செங்கோடு தனியார் பள்ளிகளின் விடுதித்திட்டத்தால் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்தனர். தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 11-ம் வகுப்பிற்கு இப்பகுதிப்பள்ளிகளை நாடிவர ஆரம்பித்தனர். இதனால் பிற மாவட்ட்ங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்தது..அவர்களும் தங்கள் பள்ளியிலேயே ராசிபுரம் போல விடுதிகளைத்துவங்கி, மாணவர்களை இரவு பகல் பாராது மனப்பாடம் செய்து வைத்து, முடியாவிட்டால் அடித்து பயமுறுத்தி நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியும்,, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பள்ளி மாணவர்களையும் சேர்க்கும் தகுதிகளைப்பெற்றனர்.


 
    மேற்கண்ட விடுதியுடன் கூடிய பள்ளிகள் மட்டுமல்ல, விடுதியமைக்க முடியாத பள்ளி நிர்வாகங்கள் கூட 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும் ,12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலேயும் நடத்த ஆரம்பித்ததால் மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு பெற்றோர்களும் காரணமாகும்..தனது பிள்ளை டாக்டர் அல்லது என்ஜினீயர் தான் ஆகவேண்டும், கை நிறைய காசு சம்பாதிக்கவேண்டும் ,அமெரிக்கா பறக்க வேண்டும் என்ற தீராத ஆசையும் காரணமாகும்.  இதைப்பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் மூலம் பெற்றோர்களையும், மாணவர்களையும் ஈர்த்துக்கொண்டுள்ளனர்.
          திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ஆர்.கே.ஆர். பள்ளியும் இத்தகைய விடுதிகளுடன் கூடிய பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது தான்..இப்பள்ளியின் தாளாளர் ஆர்.கே.ராமசாமி அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருக் கூட...!.  எனக்குத் தெரிந்து திருப்பூரில் இருந்து வீட்டிற்கு அடங்காத மாணவர்களை(குறும்பு செய்யும் பிள்ளைகள்) இப்பள்ளியில் கொண்டு போய் விடுகிறார்கள்..அடி பின்னியெடுத்து விடுவார்கள்..அடிப்பதெற்கென்றே மதுரையில் இருந்து ஆட்களைக்கொண்டுவந்து வைத்துள்ளார்களாம்..அடிக்குப்பயந்து விடுதியில் இருந்து தப்பி வரமுடியாது..ஏன்..யானை மின் வேலி போட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்... .ஆயிரம் பேருக்கு மேல் உள்ள விடுதியில் குளிப்பதற்கே அதிகாலை 3 மணிக்கு எழுந்தால் தான் இடம் கிடைக்கும்..காலைக்கடன்கள் போவதற்கு நேரம் இருக்குமா தெரியவில்லை..  நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாது..சாப்பாட்டு நேரம் அரை மணி தான்...மாணவர்கள் ஓடிப்போய்த்தான் சாப்பிட வேணும்....சாப்பிட்டு வர கால தாமதம் ஆனால் அடிதான்..எதற்கு அடிக்கிறார்கள் என்றே தெரியாதாம்...ஒரு மாணவன் அடிபடுவதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள் என பிற மாணவர்கள் கேட்டால் அவர்களுக்கும் கிடைப்பது தர்ம அடிதானாம்...மாணவர்கள் தாங்கள் வாங்கிய அடியை காட்டவாவது முடியும்..ஆனால் மாணவிகள்.. பாவம்..ஆர்.கே.ஆர்.பள்ளியென்றாலே எனக்கு அந்தமான் செல்லுலர் ஜெயில் தான் ஞாபகத்திற்கு வரும்...

 இப்பள்ளியில் ஜனவர் மாதம் 19-ம் தேதி 10-ம்வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார். விடுதியில் சாப்பிட ஓடும்போது கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.. மாணவனின் பெற்றோர்கள் வரும்முன்பே போஸ்ட்மார்டம் செய்ய கோவைக்கு கொண்டுசென்றுவிட்டனர்..இதனால் பெற்றோர்கள் கொதித்தெழுந்து போராடினார்கள்...இது விபத்தா? அல்லது...தோனி நாட் அவுட் படத்தில் பிரகாஷ் ராஜ் செய்தது போல அடிபட்டதா என்ற சந்தேகம் இப்பகுதி பெற்றோர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது....
.. 

             
   காவல் துறை மற்றும் கல்வித்துறை சார்பாக கூறப்பட்ட ஆலோசனைகளை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை..ஊதாசினப்படுத்தினார்கள்...எல்லாம்..பணத்திமிர்....இந்நிலையில் கடந்த 15-ம்தேதி அனூஜ் என்ற மாணவர் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்... பெற்றோர்களின் போராட்டத்தால் பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளது.. 
.

     
 மேற்கண்ட நிகழ்வுகளின் காரணமாக மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம்,  திருப்பூர் மாவட்டக்காவல்துறை 19-2-2012 அன்று தனியார் பள்ளி தாளாளர்களின் கூட்டத்திற்கு அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது..இக்கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் தனியார் பள்ளித்தாளார்கள் , பள்ளியை எவ்வாறு பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.(பார்க்க.....வீடியோ)
..
    ஒரு சில பள்ளிகளின் தாளாளர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை வைத்தனர்..அதாவது..போட்டிகள் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம்..ஆயிரக்கணக்கில் பெற்றோர்களிடம் பணம் வாங்குகிறேம்...அதற்கேற்றாற்போல மாணவர்களை படிக்கவைத்து பெரியாளாக்கும் க்டமையும் எங்களுக்குள்ளது....இன்றைய மாணவர்கள் யூனிபார்ம் அணிந்துகொண்டு டாஸ்மார்க்கில் குடிக்கிறார்கள்..வகுப்பிற்கு வராமல் சினிமா தியேட்டரில் சுற்றுகிறார்கள், ஒயிட்னர் போதைக்கு ஆளாகிவருகிறார்கள், ஆசிரியைகளை மிரட்டும் போக்கும் உள்ளது...இவற்றையெல்லாம் தண்டனை தராமல் எப்படி பள்ளிகளில் ஒழுக்கத்தை வரவழைப்பது? என்ற கேள்விகளை எழுப்பினார்கள்..மேலும் போட்டிகள் நிறைந்த உலகத்தில் நூற்றுக்கு நூறு என்ற இலக்கை வேறு எட்டவேண்டியுள்ளது..எப்படித்தான் குழந்தைகளிடம் ஒழுக்கத்தைக்கொண்டுவருவது எனக்கேட்டனர்.....

      இறுதியாக கல்வித்துறை சார்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் திருமதி. நூர்மாலிக் அவர்கள் தனியார் பள்ளிகள் என்ன செய்ய வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக 6 நிமிடம் பேசினார்..(பார்க்க ..வீடியோ)..

No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...