Friday, March 26, 2010

பாடு பட்டாத்தன்னாலே! பலனிருக்குது பின்னாலே!!

பாடு பட்டாத்தன்னாலே!  பலனிருக்குது பின்னாலே!!


      ஒரு செயலை நாம் செய்யத்தொடங்கினால் மட்டும் போதாது..அச்செயலை சமுதாயக்கடமையுடன்  உணர்வுப்பூர்வமாக ஒரு ஈடுபாட்டுடன் தொடர்ந்து செய்து வந்தால் நமக்கு வெற்றிகிட்டும் என்பது எனது அனுபவம்.

திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் 1989-ம் ஆண்டில் இருந்து சமூகப்பணியாற்றிவந்த எனக்கு 1991-ம் ஆண்டில் கோவை அறிவொளி இயக்கத்தில் பணியாற்ற தொலை தொடர்பு இலாகாவில் இருந்து மாற்றுப்பணியில் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது.. இதன் காரணமாக கோவையில் உள்ள சில பிரபல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.வி.சங்கர் இ.அ.ப. அவர்கள் தலைமையில் நடைபெறும் அறிவொளி இயக்க கூட்டங்களுக்கு செல்லும்போது அப்பள்ளிகளில் இருந்த கட்டமைப்புகள், கணிப்பொறிகள் சுற்றுப்புறச்சூழல் கண்டு வியந்து, ஜெய்வாபாய் நகராட்சிப்பள்ளியையும் இப்பள்ளிகள் போல மாற்ற வேண்டும்  என்ற கன்வும், இப்பள்ளி மாணவிகளுக்கும் கணிப்பொறிக்கல்வியைத்தர என்ன செய்யலாம் எனக்கனவு காண்பதுண்டு..

        1993-ம் ஆண்டில் நான்வசிக்கும் ஓடக்காடு பகுதியைல், விருது நகரில் இருந்து வேலை தேடி திருப்பூர் வந்த ஒரு குடும்பத்தினர் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தனர். அதில் செல்வி மீனாள் என்பவர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் கணக்கெழுதும் வேலை பார்த்து வந்தார். எதேச்சையாக ஒரு நாள் என்ன படித்துள்ளீர்கள் எனக்கேட்டேன்.. என்ஜினீயரிங் ( E E E) படித்துள்ளேன் எனக்கூறியதைக்கேட்டு ஆச்சரியமும், அதர்ச்சியும் அடந்தேன்...அப்பொழுதெல்லாம் மென்பொருள் வேலைகள் உருவாகவில்லை. கணிப்பொறியும் ஓரளவு தெரியும் என்றார். சரி... நமது கனவை இவர் மூலம் நிறைவேற்றலாம் என முடிவெடுத்தேன்.  ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் வேலைக்குச்சேர்த்து விடுகிறேன்..அங்கு நீங்கள் கணிப்பொறி பயிற்சிவகுப்புகள் எடுக்கக்கற்றுக்கொள்ளுங்கள்! பின் உங்களை ஜெய்வாபாய் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக கணிப்பொறி ஆசிரியராகச்சேர்த்துக்கொள்கிறோம் எனக்கூறியதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.


       அப்பொழுது திருப்பூரில் பெஸ்ட் வணிக வளாகத்தில் திரு. நா.மாதவன் என்பவர் கணிப்பொறி பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். எனக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மூலமாக ஓரளவு பரிச்சையமான திரு. நா.மாதவன் அவர்களின் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டேன். ஆறு மாதம் கழித்து தனியாக ஒரு கம்ப்யூட்டர் நிறுவ்னம் வைக்கும் அளவிற்கு பயிற்சி எடுத்துக்கொண்டவுடன் எங்களது திட்டப்படி அங்கிருந்து அவரை பள்ளிக்கு அழைத்து வந்துவிட்டோம்..ஆசிரியை ரெடி? ஆனால் கம்ப்யூட்டர் தான் இல்லை..அப்போதிருந்த தலைமையாசிரியை திருமதி. பிரேமா டேனியல் அவர்கள் பல ஆண்டுகளாக சேமித்திருந்த பள்ளியின் அமினிட்டி நிதியில் இருந்து செலவு செய்ய லாம் எனக்கூறியதின் பேரில் 1994-ம் ஆண்டு ஒரு 256 கருப்பு வெள்ளை கம்ப்யூட்டர், ஒரு டி.வி.எஸ்.பிரிண்டர் என ரூபாய் 60,000/-க்கு ஒன்றே ஒன்று வாங்கி, ஒரு வகுப்பறையிலே பி.டி.ஏ. கம்ப்யூட்டர் அகதாமியைத்துவக்கினோம்.. ஒரு கணிப்பொறியை வைத்து 11-ம் வகுப்பு முதல் குரூப் மாணவிகளுக்கு பகலிலும், மாலை 4 மணிக்குமேல் பள்ளிக்கு அருகில் இருக்கும் முன்னாள் மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் லோட்டஸ்,  பாக்ஸ் ப்ரோ போன்ற கணிப்பொறி கல்வியைக்கற்றுத்தர ஆரம்பித்து சான்றிதழும் கொடுத்தோம்...இப்படி வெளியில் இருந்து வரும் முன்னாள் மாணவிகளுக்கு மூன்று மாத கோர்ஸ்,,ஆறு மாத கோர்ஸ் கற்றபின் அவர்களுக்கு வேலையும் கிடைத்ததால் ஓரளவு முன்னாள் மாணவிகள் வர ஆரம்பித்தனர். இதன் மூலம் கிடைத்த வருவாயில் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் சில கம்யூட்டர்களை 356 மற்றும் 456 மாடல்களை வாங்கி கோவை மாவட்டத்திலேயே ஒரு நகராட்சி மற்றும் அரசுப்பள்ளியில் கூட கம்ப்யூட்டர்கள் இருக்கின்ற அதிசியத்தை நிகழ்த்தினோம். கம்ப்யூட்டர் கல்விக்கென பயிற்சி புத்தகம் கூட பள்ளியின் சார்பாக வெளியிட்டோம். .
வகுப்பறையில் கணணி ஆய்வகம்.
            திருமதி.பிரேமா டேனியல் அவர்கள் 1995-ல் ஓய்வு பெற்றவுடன், அதுவரை உதவி தலைமையாசிரியையாக இருந்த திருமதி ஆர்.ஜரீன்பானு பேகம் அவர்கள் தலைமையாசிரியையாகப்பொறுப்பேற்றுக்கொண்டார் இவரும் கணிப்பொறிக்கல்வியை மேம்படுத்த பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் முயற்சிக்கு முழுமையான ஆதரவைக்கொடுத்தார்.   1997-ம் ஆண்டு இண்டெர் நெட் தொழில் நுட்பம் வந்தசமயம்... நவீன தொழில் நுட்பத்தை நகராட்சிப்பள்ளி மாணவிகளும் அனுபவிக்கவேண்டும் என்று இண்டெர் நெட்டை யும், பள்ளிக்கான இணைய தளத்தையும் நிறுவினோம். மாண்புமிகு கல்வி அமைச்சர் பேராசிரியர். க.அன்பழகன் அவர்கள் இணைய தளத்தினை 1998-ம் ஆண்டில் ஆரம்பித்துவைத்தார். இதன் மூலம், முதன்முதலாக தமிழகளவில் ஒரு நகராட்சிப்பள்ளியில் 
1998-ல் கணணி ஆய்வகத்தில் மாணவிகள்.
இணையதளத்தை நிறுவிய பெருமையைப்பள்ளி பெற்றது. கணிப்பொறிக்கல்வியை 11- 12-ம் வகுப்புகளில் மூன்று பாடப் பிரிவுகளில் கொண்டுவந்ததன் மூலம் கலைப்பிரிவு மாணவிகளும் கம்ப்யூட்டர் கல்வியைப்பெற்றனர். இது வரை ஒரு வகுப்பறையைத்தான் கணிப்பொறி ஆய்வகமாகப்பயன்படுத்தினோம். தனியாக விசாலமான முறையில் கணிப்பொறி ஆய்வகத்தை உருவாக்க முயற்சித்தோம். புதியதாக 1800சதுர அடியில் 2000-ம் ஆண்டில் நவீன் முறையில் குளிர்சாதன வசதியுடன் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமும், அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் (ரூ.இரண்டுலட்சம்)மூலமும் நிறுவினோம் .கருப்பு வெள்ளை கணிப்பொறிகளுடன்,  வண்ணக்கம்ப்யூட்டர்களையும் வாங்கினேம். கலர் கணிப்பொறிகள் வந்த அன்று மாணவிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.கோடை கால விடுமுறையில் குழந்தைகளுக்கும் கற்றுத்தர ஆரம்பித்தோம்.இப்படி படிப்படியாக பி.டி.ஏ மூலமாக நிறுவப்பட்ட கணணி ஆய்வகத்தில் 30 கணிப்பொறிகள் வரை சேர்த்து கணிப்பொறிக்கல்வியை மாணவிகளுக்கு கற்றுத்தந்தோம்.தமிழகரசின் கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் இப்பள்ளியிலேயே நடைபெற்று வருகின்றன..
பி.டி.ஏவின் புதிய கணணி ஆய்வகம்.
       இதே கால கட்டத்தில் தமிழகரசும் தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 600 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு பத்து கம்ப்யூட்டர்கள் வீதம் ரூ.17 லட்சம் குத்தகையில் கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தியது. அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி ஒரு நிறுவனத்திற்கு ரூ. 8 லட்சம் மட்டுமே ஆகும்..இவர்களுக்கு ரூ. 9 லட்சம் லாபம். ஜெய்வாபாய் பள்ளியில் இந்த ஒப்பந்தத்தை பெற்றோர்-ஆசிரியர் கழகம் நடத்தும் கம்ப்யூட்டர் அகதாமிக்குக்கொடுத்தால் நாங்கள் 20 கம்ப்யூட்டர்களுடன் நடத்தமுடியும் என்ற விபரமான திட்டத்துடன் மாண்புமிகு தமிழக முதல்வரிடம் நேரில் விண்ணப்பம் கொடுத்தோம். தமிழக முதல்வர் கலைஞரும் ஒத்துக்கொண்டார்..ஆனால் அதிகாரிகள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனர் பள்ளிக்கு நேரில் வந்து என்னை அழைத்து திட்டிவிட்டுச்சென்றார்.
புதிய கணணி ஆய்வகத்தின் வ்குப்பறை
                  2003-ம் ஆண்டில் “ தி இந்து “ ஆங்கில வார இதழில் ஒரு விளம்பரம் வந்தது..அதுவென்னவென்றால் மத்தியரசின் தகவல் தொழில் நுட்பத்துறை பள்ளிகளில் கணிப்பொறிக்கல்வியை ஊக்குவிக்க ”,கம்ப்யூட்டர் எக்ஸ்லென்சி அவர்ர்டு பார் ஸ்கூல்ஸ் “ என அறிவித்து, இதில் தனியார்பள்ளிகள், அரசு உதவிபெறும்பள்ளிகள் மற்றும் அரசு/ நகராட்சிப்பள்ளிகள் என மூன்று பிரிவாக ரூ.1,50,000/-பரிசு என்று அறிவித்திருந்தது. விண்ணப்பங்களை இண்டெர் நெட்மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றிருந்தது. விண்ணப்படிவத்தைப்பதிவிறக்கம் செய்த போதுதான் தெரிந்தது விண்னப்பங்கள் அந்தந்த மாநில தகவல் தொழில் நுட்ப செயலர் மூலம் தான் வரவேண்டும் என்றிருந்தது.. இப்படி ஒரு பதவி இருப்பதே அன்றுதான் எங்களுக்குத்தெரியும்..என்ன செய்வது.!.எனத்திகைத்த நேரத்தில்..ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது..அறிவொளி இயக்கத்தில் நான் பணிபுரிந்த போது இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.வி. சங்கர் இ.அ.ப. அவர்கள் தான் கல்வித்துறைச்செயலராக இருந்தார்..அவருக்கு போன் மூலம் தி இந்து பத்திரிக்கையில் வந்துள்ள விளம்பரம் பற்றிக்கூறினேன்..அதை உடனே பேக்ஸ் அனுப்பச்சொன்னார். பேக்ஸ் அனுப்பிய கையோடு அடுத்த நாள் அவரைச்சென்னையில் சென்று சந்தித்து விபரம் சொன்னேன். அவர் உடனே தகவல் தொழில் நுட்ப செயலரைத்தொடர்புகொண்டு, பள்ளிகளுக்கு கணிப்பொறிக்கல்விக்கான விருது மத்தியரசால் வழங்கப்படும் செய்தியைச்சொன்னார். தமிழகரசின் தகவல் தொழில் நுட்ப இலாகாவிற்கு இப்படியொரு விருது வழங்கப்படுவது அன்றுதான் தெரிந்ததுஎன நினைக்கிறேன்.. உடனே,தமிழகம் முழுவதும் கணிப்பொறிகள் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

                 விண்ணப்பத்தில் 50 விதமான கேள்விகள். ஒவ்வொன்றிற்கும் இரண்டு மதிப்பெண்கள். இக்கேள்விகள் பல்வேறு விதமான தொழில் நுட்பம் சம்பந்தமாகவும், கற்றுத்தரப்படும் பாடங்கள்,  மாணவிகளின் எண்ணிக்கை, அவர்கள் செய்த பிராஜக்ட்கள் என இருந்தது. நாங்கள் அவ்வப்பொழுது கம்ப்யூட்டர்களை நவீனப்படுத்தியது(இதற்கு எனது தொலைபேசி இலாகாவில் நான் பெற்ற அனுபவங்கள்)கோடைகால பயிற்சிகளில் படித்த குழந்தைகளின் எண்ணிக்கை போன்றவைகள் சாதகமாக இருந்தாலும் அதில் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படியாக எங்கள் கணிப்பொறி ஆய்வகத்தில் பவர் பாயிண்ட் புரொஜக்டர் போன்றவைகள் இல்லை.


              2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்தியரசின் தகவல் தொழில் நுட்பத்துறையிடம் இருந்து தலைமையாசிரியைக்குத் தகவல் வந்தது..தமிழ் நாட்டில் இருந்து அரசு/ நகராட்சிப்பள்ளிகள் பிரிவில் ஜெய்வாபாய் பள்ளிக்கு சிறந்த கணிப்பொறிக்கல்விக்கான விருதுடன், ரூ. ஒன்றரை லட்சம் வழங்கும் விழா 09-03-2004 அன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும்..விருது வழங்குபவர் மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர்.ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் என்றிருந்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

             ஜெய்வாபாய் பள்ளிக்கான விருதை யார் வாங்க வேண்டும்? இதிலென்ன சந்தேகம் பள்ளியின் தலைமையாசிரியைதான்..1995-ம் ஆண்டில் இருந்து பள்ளியின் தலைமையாசிரியையாக இருப்பவர் திருமதி.ஆர்.ஜரீன் பானு பேகம் அவர்கள்..தலைமையாசிரியை அவர்கள் தான் பள்ளிக்கான விருதை வாங்கவேண்டும்..அழைப்பும் அவருக்குத்தான் வந்துள்ளது..அவர் என்னைக்கூப்பிட்டார். ஈசுவரன் சார். இந்த மகத்தான தேசியளவிலான விருது பள்ளிக்கு கிடைத்திருக்கிறதென்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்..பத்து வருடகாலமாக இப்பள்ளியில் கம்ப்யூட்டர் கல்விக்காக நீங்கள் உழைத்த உழைப்பைப்பார்த்துவருகிறேன். இதற்கு நீங்கள் தான் தகுதியானவர்..எனவே நீங்கள் தான் டெல்லிசென்று நமது பள்ளிக்கான விருதை பாரதக்குடியரசுத்தலைவர் கையால் வாங்கிவரவேண்டும் என்று வற்புறுத்தி தலைமையாசிரியைக்குப்பதிலாக பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் திரு.ஆ.ஈசுவரன் வாங்குவார் எனக்கடிதம் எழுதிவிட்டார். எப்படி அவருக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..அவரிடத்தில் வேறு எந்த தலைமையாசிரியை இருந்தாலும் அவர்கள் தான் விருதைப்பெறவிரும்புவார்களே தவிர கண்டிப்பாக என்னை அனுப்ப மாட்டார்கள். திருமதி.ஜரீன்பானு பேகம் அவர்களின் பெருந்தன்மைக்கு ஈடு இணையில்லை..
தலைமையாசிரிய திருமதி.ஆர்.ஜரீன் பானு பேகம்.
         பாரதக்குடியரசுத்தலைவர் கையால் நான் விருது வாங்கும் நாள் 09-03-2004.இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் அன்றுதான் எனது 25 வது திருமண நாள்.. நானும் எனது துணைவியும் டெல்லி செல்ல ரயில் டிக்கட் எடுத்தாயிற்று...ஆனால் பிப்ரவரி மாதக்கடைசியில் நாடாளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கணிப்பொறிக்கல்விக்கான விருது வழங்கும் விழாவை பாரதக்குடியரசுத்தலைவர் கடைசி நேரத்தில் ஒத்திவைத்துவிட்டார்..கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அதை அன்றுதான் தெரிந்துகொண்டோம்..


         பொதுத்தேர்தல் முடிந்தவுடன் புதிய ஆட்சி அமைந்தது. தமிழகத்தின் சார்பாக மாண்புமிகு தயாநிதி மாறன் அவர்கள் தொலை தொடர்பு அமைச்சராகப்பதிவியேற்றுக்கொண்டார். பள்ளியின் சார்பாக அவருக்கு கணணிக்கல்விக்கான விருதை வழங்கிட ஆவண செய்திடுமாறு  கேட்டுக்கொட்டோம். இதே போல மேண்மை மிகு பாரதக்குடியரசுத்தலைவருக்கும் , பொதுத்தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட விழாவை மீண்டும் நடத்திட உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், பரிசுப்பணம் ரூ.ஒன்றரை லட்சம் மூலம் மேலும் கணணிக்கல்வியை விரிவு படுத்திடும் திட்டத்தையும் கூறி, விருது வழங்கும் விழாவை மீண்டும் நடத்திட வேண்டுகோள்விடுத்தோம்.


      பாடு பட்டாத்தன்னாலே...பலனிருக்குது பின்னாலே...என்ற சினிமாப்பாட்டுக்கு ஏறப, விடாமுயற்சி வெற்றிபெறும் என்பதைப்போல ரத்து செய்யப்பட்ட விழா 04-08-2004 அன்று மீண்டும் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது..பள்ளியின் சார்பாக பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவராக இருந்த நான் மேண்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவரால் பரிசு பெறும் பாக்கியம் பெற்றதை எனது வாழ்வின் உன்னதமான தருணமாகக்கருதுகிறேன்.

No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...