Monday, July 12, 2010

கல்வித் தாஜ்மஹால்.......

இது கல்வித் தாஜ்மஹால்.......

முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மீதுகொண்ட அன்பின் காரணமாக கட்டிய உலக அதிசியமான தாஜ்மஹால்


பற்றித்தெரியும்!இது என்ன கல்வித்தாஜ்மஹால் ! எங்கே இருக்கிறது? என அறிய ஆவலாக உள்ளதா? திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மகால் என்ற அடைமொழிப்பெயரை,1998-ல் பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல சாகித்திய அகதாமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைக்கேள்விப்பட்டு, கல்வித்தாஜ்மஹால் என்று வர்ணித்தார். இந்தியாவிலேயே ஒரு அரசு/ நகராட்சிப்பள்ளிகளில் ஒரே வளாகத்தில் மிக அதிகமான 7300 மாணவிகள் கல்வி கற்கும் பெண்கள் பள்ளி இதுவாகத்தான் இருக்கும்!...ஜெய்வாபாய் பள்ளியின் வரலாறு உங்கள் முன்னே!..

                                                                     1951-ம் ஆண்டில்
கல்வித்தாஜ்மஹால்...என்கிற
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி- திருப்பூர்.

குஜராத் மாநிலம் ஜாம்  நகரைச்சேர் ந்த திரு.டி.ஒ.ஆஷர் தனது 13 வயதில் பம்பாயில் உள்ள ஒரு பஞ்சு வியாபாரியிடம் வேலைக்குச்சேர்கிறார். அங்கு ஓரளவு கணக்குகள் எழுதக்கற்றுக்கொண்டபின் தனது முதலாளியால் திருப்பூர் ஜின்னிங்பேக்டரிக்கு கணக்கெழுத அனுப்பபடுகிறார்.திருப்பூர் வந்த ஆஷர் நகராட்சிக்கு எதிரில் உள்ள ஜின்னிங்பேக்டரியில் தனது வேலையைத்தொடங்குகிறார். சில வருடங்கள் கழித்து தனியாக பஞ்சு வியாபாரம் செய்கிறார். ஓரளவு  சொந்தக்காலில் நிற்கும் துணிவு வந்தவுடன், தனது இல்வாழ்க்கைத்துணைவியாக ஆலப்புழாவைச்சேர்ந்த ஜெய்வாபாய் என்பவரைக்கைபிடிக்கிறார். முதலில் கோர்ட் வீதியில் (தற்போது கோல்டு பிளஸ் நகைக்கடை அருகில்) வாடகை வீட்டில் தனது திருமண வாழ்க்கையைத்தொடங்குகிறார். பின் தனது கடும் உழைப்பினால் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பன்சிலால் காலனியில் சொந்த வீடு கட்டி குடி போகிறார்.. வீட்டைச்சுற்றி இயற்கையான முறையில் மரம், செடி, கொடி என இயற்கைச்சூழலில் இந்த வீடு இருப்பதை இன்றும் காணலாம்.  

இவர்களுடைய இல்வாழ்க்கையில்   முதல் மகனாக பிரதாப், இரண்டாவதாக கிருஷ்ணகுமார், மூன்றாவதாக சாரதா என்ற மகளும் பிறக்கின்றனர். 1930-ம் ஆண்டுகளில்  மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந்திரப்போராட்டம் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சுதந்திரப்போராட்டத்தின் போது சில முறை திருப்பூருக்கும் வருகை புரிந்து, தனது அகிம்சைப்போராட்டத்திற்கு மக்கள் ஆதரவைத்திரட்டியுள்ளார்.  ஜெய்வாபாயும் காந்தியின் கொள்கையால்  குறிப்பாக பெண்கல்வி பெருக வேண்டும் என்று கூறி வந்த மகாத்மாவின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார்.   1936-ம் ஆண்டு  கடைசியில் நான்காவதாக புஷ்பா என்ற மகள் பிறந்த சமயம் ஜெய்வாபாய் காச நோய்க்கு ஆளாகிறார். அந்தக்காலத்தில் காச நோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும்... பெருந்துரையில் உள்ள  காச நோய் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளிக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள் தங்குவதற்கு வார்டுகள் போதுமான  அளவு இல்லாமல் இருப்பதைக்கண்டு, ஒரு வார்டு கூட கட்டித்தருகிறார்.. அந்தக்காலத்தில் காச நோய் பீடிக்கப்பட்டவர்கள் இருமிக்கொண்டே இருப்பார்கள்.. இது ஒரு தொற்று நோயாகும்.. குழந்தைகளுக்கு விரைவாக பற்றிக்கொள்ளும்.. கடைசி குழந்தை புஷ்பா கைக்குழந்தையாக இருக்கிறது.. நோய்ப்பாதிப்பிற்கு ஆளான மனைவி, 4 குழந்தைகள் என்ன செய்வது என ஆஷர் திகைக்கிறார்.  இந்த இக்கட்டான நேரத்தில்  ஜெய்வாபாய்  தனது ஒன்றுவிட்ட தங்கை சாந்திபாயை அழைத்து  உதவிக்கு வைத்துக்கொள்கிறார்..தான் ஒரு வேளை இறந்துவிட்டால்  தனது  குழந்தைகளைக்காக  தனது கணவரை   திருமணம் செய்து கொள்ள வேண்டும்  என வேண்டுகிறார்... தனது அக்காவின் வேண்டுகோளை  சாந்திபாய்  ஏற்றுக்கொள்கிறார்..

திரு.ஆஷர், பிரதாப்,கிருஷ்ணகுமார்&திருமதி.ஜெய்வாபாய்.
               1937-ம் ஆண்டு   குழந்தை புஸ்பாவிற்கு ஆறு மாதம்தான் ஆகிறது.  ஜெய்வாபாய்க்கு காச நோய் கடுமையாகி விட்டது.  தான் இனி  நீண்ட நாட்கள் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்கிறார்.. தனது கணவரை வரச்சொல்கிறார்.  ஆஷர் வீட்டினுள் சென்று தனது அன்பு மனைவியிடம் உனக்கு ஒன்றும் ஆகாது,கவலைப்படாதே!! என்று கூறி அருகில் அமர்ந்து மனைவியின் கைகளைப்பற்றி ஆறுதல் கூறுகிறார். ஜெய்வாபாய் தனது கணவரின் கண்களைப்பார்த்து எனக்கொரு நீண்ட நாளாக ஒரு ஆசை இருக்கிறது! அதை நீங்கள் நிறைவேற்றுவீர்களா? எனக்கேட்கிறார். உனது ஆசை என்ன சொல்! என்கிறார். திருப்பூரில் பெண்குழ ந்தைகள் ஐந்தாம்(5)ஆம் வகுப்பிற்குமேல் படிப்பதற்கு உயர் நிலைப்பள்ளி இல்லை! நீங்கள் பெண்களுக்கென்று ஒருஉயர் நிலைப்பள்ளி கட்டவேண்டும். இது எனது கடைசி ஆசை எனக்கூறி, ஆஷரின் கைகளை இருகப்பற்றுகிறார்... பற்றிய கை சிறிது நேரத்தில் துவண்டு கீழே விழுகிறது! 1904-ல் ஆலப்புலாவில் பிறந்த ஜெய்வாபாய் ,1937-ல் திருப்பூரில் திருமதி ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷராக  நான்கு குழந்தைகளை தனது கணவரிடம் ஒப்படைத்துவிட்டு முப்பத்தி மூன்று வயதில் மறைகிறார். நான்கு குழந்தைகளுடன் ஆஷர் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்குகிறார்..


காலம் முழுவதும் தன் ஆருயிர் மனைவி ஜெய்வாபாய் தன்னுடன் இருப்பார் என்றிருந்த ஆஷருக்கு இப்படி பாதியிலேயே தன்னையும்  நான்கு குழ ந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு,வானுலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. தனது ஆருயிர் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்...அதே சமயம்  நான்கு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். பாவம் ஆஷர்...என்ன செய்வது என துயரத்தில் இருக்கும் போது போது , தனது அக்காவிற்கு வாக்களித்தபடி உற்ற துணையாக வருகிறார் செல்வி.சாந்திபாய்!  ..தனது அக்காவின் கணவரைக்கைபிடிக்கிறார்..! அப்போது  திருமதி புஷ்பாஆஷர் ஒரு முடிவினை தனது கணவிரிடம் தெரிவிக்கிறார். நமக்
கொரு குழ ந்தை பிற ந்தால்  ஒரு வேளை  அக்காவின் குழ ந்தைகளைக் கவனிக்கமுடியாமல் போய்விடலாம்.. எனவே  எனக்கு குழ ந்தையே வேண்டாம் என்று ஆஷரிடம் கூறி, அதன் படியே வாழ்கிறார்.

திரு.டி.ஓ. ஆஷர் & திருமதி.சாந்திபாயுடன்  மகன்கள் பிரதாப், கிருஷ்ணகுமார், சாரதா, புஷ்பா..
திருமதி சாந்திபாய் ஆஷர் தந்த ஒத்துழைப்பின் காரணமாக வியாபாரத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்ட தேவ்ஜி ஆஷர் 1942-ல் திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் பெண்களுக்கென்று தனியாக நகராட்சியின் ஆதரவுடன் 6-ம் வகுப்பை துவக்குகிறார். உயர் நிலைப்பள்ளிக்கான இடத்தைத்தேடுகிறார். திருப்பூரில் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா ஆண்கள் உயர் நிலைப்பள்ளி 1932-ல் இருந்து செயல்பட்டுவருகிறது. இந்தபள்ளியை ஒட்டி ராயபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பள்ளிக்காக ஒதுக்கினால் அந்த இடத்தில் பெண்கள்பள்ளி கட்டி நகராட்சிக்கு ஒப்படைப்பதாக அன்றைய ஆங்கில அரசிடம் கோரிக்கைவைக்கிறார். இதற்காக ஆங்கிலேய மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சென்று பார்க்கிறார். ஆங்கிலேய கலெக்டருக்கு ஒரே வியப்பு! குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரைச்சேர்ந்த இந்த வட நாட்டு சேட்டு, தனது மா நிலத்தில் பள்ளியைக்கட்டாமல் பிழைக்க வந்த இடத்தில் சொந்தக்காசில் பள்ளியைக்கட்டி நகராட்சிக்குத் தானமாகத்தருகிறேன் என்கிறாரே என வியக்கிறார்! தனது வியப்பை கேட்டும் விடுகிறார்.அதற்கு ஆஷர் கீழ்கண்டவாறு கூறினாராம்!

”துரை அவர்களே! நான் இந்த திருப்பூருக்கு எனது பம்பாய் முதலாளிக்கு பஞ்சு வாங்கி அனுப்ப வும் கணக்கெழுதவும் வந்தேன். என்னுடைய உழைப்பினால் இன்று திருப்பூரில் ஓரளவு செல்வம் சேர்த்துள்ளேன். இந்தச்செல்வம் திருப்பூர் மக்களுக்குத்தான் பயன்படவேண்டுமேயொழிய எனது மா நிலமான குஜராத்திற்கல்ல ”எனக்கூறி, தனது மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற உதவிடக்கூறுகிறார். ஆஷரின் உறுதியைக்கண்ட கோவை கலெக்டர் சென்னை மாகாண அரசிற்கு பரிந்துரை செய்து ,தற்போது பள்ளியமை ந்துள்ள 7.1/2 ஏக்கர் இடத்தை 1948-ல் அரசு ஆணை எண்: 1425 நாள் - 17-6- 1948 ல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்.


30-11-1948-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண கல்வியமைச்சராக இரு ந்த மாண்புமிகு T.S.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால்( கோவையில்அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்)பள்ளிக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. 14-10-1951 அன்று அன்றைய சென்னை மாகாண கல்வி மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு கே.மாதவமேனன் அவர்களால், திருப்பூரின் நகரத்த ந்தை என்று அழைக்கப்படுகிற திரு.கே.என்.பழனிச்சாமிக்கவுண்டர்,நகர்மன்றத்தலைவர் தலைமையில், ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் முதல் மாடியுடன் கூடிய 18வகுப்பறைகளும் திரு.டி.ஓ.ஆஷர்,அவருடைய மகன்கள் திரு.பிரதாப் ஆஷர், திரு.கிருஷ்ணகுமார் ஆஷர் மற்றும் மகள் கள் சாரதா, புஷ்பா அவர்கள் முன்னிலையில்,திருப்பூர் மக்களின் பெண்கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டு, திருப்பூர் நகராட்சிக்குத் தானமாக வழங்கப்படுகிறது

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த சமூகத்தில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது..தேசப்பிதாவின் கூற்றான,ஒரு ஆணுக்குத்தரப்படும் கல்வி அவனுக்கு மட்டுமே பயன்படும்.ஆனால ஒரு பெண்ணிற்குத்தரப்படும் கல்வி ஒரு குடும்பத்திற்கே பயன்படும் என்பது திருப்பூரில் நடைமுறைக்கு வ ந்தது. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! எட்டும் அறிவினில் ஆணிற்கிங்கே இளைப்பில்லை காண் ! என்ற மாககவி பாரதியின் கனவை நிறைவேற்றும் வகையில் பெண்கள் கல்வி கற்க ,ஜெய்வாபாய் பள்ளியை நாடிவரத்துவங்கினர். பெண்கல்வியில் புதிய சகாப்தம் ஏற்பட்டது.ஜெய்வாபாயின்  பெண்கல்விக்கனவை அவருடைய கணவர் திரு.தேவ்ஜி ஆஷர் நிறைவேற்றினார்.
 இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக திருமதி விசுவாசம் அவர்கள் (1.07.1942 முதல் 31-5-1967)பொறுப்பேற்று 25 ஆண்டுகள் இப்பள்ளியை திறம்பட நடத்தியுள்ளார். அவருக்குப்பின்  திருமதி ஜே.எஃப் பரமானந்தம் 01-06-1967 முதல் 31-05-1977 வரை, மூன்றாவதாக திருமதி,எல்.எஸ். நாமகிரி 01-06-1977 முதல் 30-9-1978 வரை, நான்காவதாக திருமதி.லில்லி லாசரஸ் 01-10-1978 முதல் 31-5-1983 வரை, ஐந்தாவதாக செல்வி.ஜி.சாவித்திரி 01-06-1983 முதல்31-5-1991 வரை, ஆறாவதாக திருமதி.பிரேமா டேனியல் 01-06-1991 முதல் 31-5-1995 வரை, ஏழாவதாக திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம் 01-06-1995 முதல் 31-05-2006 வரை(தேசிய நல்லாசிரியர் விருது),எட்டாவதாக  திருமதி.அ.விஜயா ஆனந்தம் 01-07-2006 முதல் 31-01-2013 வரை(தேசிய நல்லாசிரியர் விருது)யிலும் தலைமையாசிரியர்களாக பணியாற்றியுள்ளனர். தற்போது ஒன்பதாவது தலைமையாசிரியராக திரு.அ.போஜன் அவர்கள் 03-06-2013 முதல் பணியாற்றி வருகிறார்.1989-90 ம் ஆண்டு இப்பள்ளியின்  பெற்றோர்-ஆசிரியர் கழகம் புனரமைக்கப்பட்டது.. 1989-ல் மாணவியர் எண்ணிக்கை 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 3000-ம் ஆகும். 2009-2010-ம் ஆண்டில் இது 7285...என்ன 7285 ஆஆஆ... என வியக்குகிறீர்களா.. இந்தியாவிலேயே மாபெரும்  நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியாக , பெண்கல்விக்கு மகுடம் சூட்டிய பள்ளியாக விளங்குகிறது.. இது மட்டுமே  சாதனையா... இல்லை.. நிறைய இருக்கிறது...

 தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டில் 1995 முதல் 2005 வரை தொடர்ந்து 10 முறை, தேசியளவில் விருது பெற்ற பள்ளி, மூன்று முறை இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில்,(2001 , 2003, 2006) ஆய்வுக்கட்டுரைகளை இப்பள்ளி மாணவிகள் சமர்ப்பித்து பங்கேற்றுள்ளனர்.. இப்பள்ளி மாணவிகளை மேன்மைமிகு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்  அவர்கள் முதல் தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதா(அம்மா) அவர்கள் வரையிலும் பாராட்டைப்பெற்ற பள்ளியாகும்.. அடுத்தடுத்து இரண்டு தலைமையாசிரியைகள் தேசிய விருது பெற்றதும் இப்பள்ளியின் சாதனைக்குச்சான்றாகும்... இது மட்டுமா பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக மிகச்சிறப்பான கணணிக்கல்வியை இப்பள்ளியில் அமுல்படுத்தியதற்காக 2004-ம் ஆண்டில் கம்யூட்டர் எக்ஸ்லென்சி அவார்டு( விருது மற்றும் ரூ. ஒன்றரை லட்சம்) விருதை மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து  தமிழகத்தில் இருந்து தேசிய அளவில் பெற்ற பள்ளியாகும்.. இப்படி அடுக்கிக்கொண்டே.. போகலாம்..  ஒரு சாதாரண  நகராட்சிப்பள்ளி இந்தியளவில் சாதனைப்பள்ளியாக மாறிய து எப்படி...?வரலாறு தொடரும்...  ஜெய்வாபாயின்  குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக சாந்திபாய் தனக்கென குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.ஜெய்வாபாயின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல வளர்த்துவந்தார். ஜெய்வாபாய் இறக்கும் போது மூத்த  புதல்வி சாரதாவிற்கு 4 வயது.  சாரதா ஜெய்வாபாய் பள்ளியில்  படிக்கும்போதே, பம்பாயில் உள்ள நரேந்திர சம்பத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஜெவலாந்த் என்ற மகன் பிறந்தான்,.. குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போது, சாராதாவின் கணவர் எதிர்பாரத விதமாக இறந்துவிடுகிறார். சாரதா தனது குழந்தையுடன் திருப்பூருக்கே வந்துவிடுகிறார்... பெண்குழந்தைகள் படிக்கவேண்டும் என்ற  தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற சாரதா மீண்டும் ஜெய்வாபாய் பள்ளியில் சேர்ந்து அன்றைய 11-ம் வகுப்பை முடிக்கிறார். பின் சென்னை சென்று கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெறுகிறார். அன்று சென்னையில் அறிமுகமாகியிருந்த குழந்தைகளுக்கான மாண்டிசோரி கல்வியைக்கற்று திருப்பூருக்கு வருகிறார். மாண்டிசோரி கல்வியைக்கற்றதன் காரணமாக ஜெய்வாபாய் பள்ளி வளாகத்திலேயே ஒரு இடத்தில் ஆசிரியைகள் உட்பட ராயபுரம் பகுதியில் இருந்த 3 வயதான  குழந்தைகளுக்கு  மாண்டிசோரி கல்வியை  கற்றுத்தருகிறார்..ஆஷருடைய தேவ்ஜி காலனி வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட், பால், பழம் உட்பட தினமும் வழங்கப்பட்டது... ஜெய்வாபாயின் குழந்தைகளுக்காகவே வாழ்ந்த  சாந்திபாய் ஆஷர்  09-11-2004-ல் மறைந்தார்..  ஜெய்வாபாயின் இரண்டு மகன்களும் காலமாகிவிட்டனர். பெரிய மகள் சாரதா.. தனது ஒரு மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.. இளைய மகள் புஷ்பா  தனது இரண்டு மகன்களுடன் செகந்திராபாத்தில் வசிக்கிறார்..மூத்த மகன் பிரதாபிற்கு 4 மகன்கள், ஒரு மகள்..இளையமகன் கிருஷ்ணகுமாருக்குஒரு மகன், இரண்டு மகள்கள். இவர்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள்..

                    ஜெய்வாபாய் பள்ளியின் பொன்விழா 1992-ம் ஆண்டு வந்தபோது அன்றைய தலைமையாசிரியை பிரேமா டேனியலும், நானும் இப்பள்ளியை உருவாக்கிய ஆஷர் குடும்பத்தை அழைப்பது என முடிவெடுத்து வாரிசுகளின் விபரங்களை தேட ஆரம்பித்தோம்..அப்போதுதான் மூத்தமகன் பிரதாப் ஆஷரின் மகன் மோகன் ஆஷர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தேவ்ஜி காலனியில் சாந்திபாயுடன் வசிப்பதையறிந்து அங்கு சென்றபிந்தான், இளையமகன் கிருஷ்ணகுமார் ஆஷர் பெங்களூரில் இருப்பதை அறிந்தோம்.. தலைமையாசிரியை பிரேமா டேனியல் அவர்கள் பெங்களூர் சென்று பள்ளியின் பொன்விழாவிற்கு தலைமை தாங்க அழைத்துவந்தார்.. அது முதல்  பள்ளியின் ஆண்டு விழாவிற்கு  ஆஷர் குடும்பத்தினர்  அழைக்கப்படுகின்றனர்.


1 comment:

  1. Mahaathmaakal vaazhndhu kondu dhaan irukiraargal ungalai pola

    ReplyDelete

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...