Thursday, June 9, 2011

சரசுவதிக்கு கோவில் கட்டுவோம்...


             மலர்க்கொடிகளின் வேர்களுக்கு....           திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரு ஆக்கபூர்வமான அதிசயமான 32 புதிய வகுப்பறைகளுக்கான கிரஹப்பிரவேசம் 8-6-2011 அன்று நடைபெற்றது...அவர்களுடைய அழைப்பிதழில் யாருடைய பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை....யார் அழைக்கிறார்கள் என்ற இடத்தில்,
  மலர்க்கொடிகளின் வேர்களுக்கு
  நீர் ஊற்றும் சேவகர்களாகவும்,
  காத்து நிற்கும்     காவலர்களாகவும்...
             
 தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
 பள்ளி வளர்ச்சிக்குழு

என்று மட்டுமே போட்டிருந்தார்கள்.. எனக்கும் அழைப்பிதழ் வந்தது….
காலை 6 மணிக்கு பள்ளிக்குப்போனேன்...அங்கு நான் கண்டது...
கலையரசி படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு பாட்டுப்பாடுவார்..அது
அதிசியம் பார்த்தேன் மண்ணிலே...அது அப்படியே நிக்குது என் கண்ணிலே..
என்று வரும்..அது போலத்தான்...எனக்கும் பாடத்தோன்றியது... பள்ளியின் பிரம்மாண்டமான தோற்றத்தைப்பார்த்து...
 அட! இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?.தனியார் பள்ளிகளைப்பார்த்த கண்களுக்கு இது அதிசயமாகப்படாதுதான்!.ஆனால்  இந்த பள்ளியின் பழைய(2003) தோற்றத்தைப்பார்த்த எனக்கு அதிசயமாகத்தான் பட்டது! இப்பள்ளியின் பழைய தோற்றத்தின் சிறு பகுதியைப்பாருங்கள்!..அனுப்பர்பாளையம் பகுதியின்
சந்தைப்பேட்டைக்குள் சுற்றிலும் பன்றிகள் புடை சூழ நாற்றம் பிடித்த இடத்தில் செயல்பட்டதைக்கண்டவர்களுக்கு........இப்போது ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்..


       2004-ம் ஆண்டு அனுப்பர்பாளையம்பகுதியில்   பொருளாதார வசதியும், கல்வியின்பால் அக்கறையும்கொண்ட பலர் இப்பள்ளியை மாற்றியமைக்க உறுதிபூண்டனர். அச்சமயம் பெற்றோர்-ஆசிரியர் கழகச்செயல்பாட்டிற்கு தமிழகளவில் முன் உதாரணமாக விளங்கிய ஜெய்வாபாய் நகராட்சிப்பள்ளியின் வளர்ச்சியினால் உந்தப்பட்டு, அதன் தலைவராக இருந்த என் அனுபவத்தை எடுத்துச்சொல்ல அழைக்கப்பட்டேன்.அந்தக்கூட்டத்தில் அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளியில் திரு.பரணி பெட்ரோல் பங்க் நடராஜ் அவர்கள் தலைமையில், உதவித்தலைவராக திரு. ஆறுமுகம், பொருளாளராக திரு.தேவராஜ் ஜெயின் ஆகியோரைக்கொண்ட   பெற்றோர்-ஆசிரியர் கழகம் புனரமைக்கப்பட்டது... நல்லோர் பலரும் கை கொடுக்க ஊர் கூடிக்கல்வித்தேரை இழுத்தனர்.
       2005-ம் ஆண்டில் அனுப்பர்பாளையம் பகுதியில் இருந்த இந்து அறநிலையத்துறைக்குச்சொந்தமான  10 ஏக்கர் கோவில் இடத்தை அரசியல் எதிர்ப்பு, கோர்ட் தடை என பல்வேறு சோதனைகளைத்தாண்டி, அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சிவசாமி அவர்களின் துணையோடு ரூ.25 லட்சத்திற்கு  அரசிற்குச்சொந்தமான கோவில் இடத்தை, அரசுப்பள்ளிக்கு விலை கொடுத்து வாங்கினார்கள்...தற்காலிகமாக ரூ.20 லட்சம் மதிப்பில் 20 வகுப்பறைகள் கட்டப்பட்டு, பள்ளியை பன்றித்தொழுவமாக இருந்த சந்தைப்பேட்டைக்குள் இருந்து மாற்றினார்கள்.முதல் கட்டமாக தற்காலிகமாக 20 வகுப்பறைகள் கட்டப்பட்டு, அரசு மேல் நிலைப்பள்ளியாகவும் தகுதி உயர்த்தப்பட்டது. தங்களுக்கிருந்த செல்வாக்கின் காரணமாக , அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு கடும் முயற்சி செய்து, நபார்டு வங்கியின் உதவியுடன் நிரந்தரமாக 14 வகுப்பறைகள் கட்டப்பட்டன..
        இருபாலரும் படிக்கும் மேல் நிலைப்பள்ளியாக இருந்ததால் மேலும் பல வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை தேவைப்பட்டது..அரசின் உதவியை நாடினார்கள்..தமிழகரசு மற்றும் தனியார் பங்களிப்பு 49%+51% என்ற கணக்கில் அரசு ரூ.49 லட்சம் தந்தது..பொதுமக்களிடம்  ரூ.51 லட்சம் திரட்டவேண்டும்..கடுமையான பணி..ஊர்கூடித்தேர் இழுக்கும் பணி..32 வகுப்பறைகள் கட்ட வேண்டும்..எடுத்த பணியை எப்படி முடிப்பது என சிந்தித்தார்கள்..ரூ.2 லட்சத்திற்குமேல் நிதியளிப்பவர்கள்,  பெயர் வகுப்பறையில் கல்வெட்டில் பொறிக்கப்படும் எனக்கூறினார்கள். பலரின் ஏச்சிற்கும், பேச்சிற்கும் இடையில் 32 கொடை வள்ளல்களைக்கண்டுபிடித்தார்கள். இதற்கிடையில் அரசுப்பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவராக பெற்றோர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக,பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கல்வித்துறையால் பதவி விலகினார்கள். புதிய தலைவராக வந்த பெற்றோர்(அரசுப்பள்ளி மாணவனின் தந்தை)தினக்கூலித்தொழிலாளி..அவரால் பாவம் என்ன செய்யமுடியும்? ஒரு சாக்பீஸ் பெட்டிகூட நன்கொடையாக வாங்கித்தரமுடியாதவர். கட்டடப்பணிகள் பாதியிலே நின்றது.
புதிய தலைமையாசிரியையாக திருமதி.ராணித்தங்கம் வந்தார்..ஏற்கனவே இருந்த நிர்வாகிகளை அனுகினார். பள்ளிவளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் பள்ளி வளர்ச்சிக்குழிவிலே சேர்ந்து பணியாற்றத்துவங்கினார்கள். நன்கொடையாளர்களீடம் இருந்து ஆரம்பத்தில் ரூ.51 லட்சம் திரட்டப்பட்டது..கட்டுமானப்பொருள்களின் விலையேற்றத்தால் கட்டப்பட்ட கட்டங்கள் முக்கால்வாசியில் நின்றன.  என்ன செய்வது? ஏற்கனவே பணம்கொடுத்தவர்களை மீண்டும் தயக்கத்துடனேயே அனுகினார்கள்..திருப்பூரின் கடுமையான தொழில்மந்தத்திற்கிடையேயும் ஏற்கனவே நிதிகொடுத்தவர்கள் மனம்கோணாது மேலும் ரூ.24 லட்சத்தை வழங்கி, மகாகவி பாரதி,

      ஏழைக்கு எழுத்தறிவிக்க,

               நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்
                    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
               அதுவமற்றவர் வாய்ச்சொல்லருளீர்
                    ஆண்மை யாளருழைப்பினை நல்கீர்..

என்பார்.பாரதியின் இக்கவிதைக்கு உயிர்கொடுத்த இந்த 32 பேருக்கு முதல் மரியாதை செய்யும் விழாதான் 8-6-2011 அன்று நடைபெற்றது.
              இரண்டடுக்குடன் கம்பீரமாக 32 வகுப்பறைகள் கட்டியாயிற்று!. வகுப்பறைகளை எப்படி ஒதுக்குவது? குடவோலை முறையக்கையாண்டனர். ஒரு சில்வர் குடத்தினுள் 32 எண்களை எழுதிப்போட்டனர்.  நிதி கொடுத்தவர் ஒரு டோக்கனை எடுக்கவேண்டும்..டோக்கனில் வந்த எண் அவர் கட்டிக்கொடுத்தது..அவர் விரும்பும் பெயரை அந்த வகுப்பறையில் வைத்துக்கொள்ளலாம்..
ooநன்கொடையளித்தவர்களின் குடும்பத்தார் முன்னிலையில் நான்கு அய்யர்கள் கணபதி ஹோமம் செய்தனர். பூஜை முடிந்தபின் ஒவ்வொருவருக்கும் பூஜையில் வைக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன.பின் ஒவ்வொருவரின் புகைப்படத்துடன் பள்ளி படத்துடன் கூடிய ஷீல்டும், பாராட்டு பத்திரமும் தரப்பட்டது..அதில்...
              நிதி தந்தவர்கள் தங்களுக்குரிய வகுப்பறைக்கு மீண்டும் சென்று மாணவ-மாணவிகளின் நலனுக்காக மீண்டும் பூஜைசெய்து வழிபட்டனர். எனக்கும் கூட ஒரு பாராட்டுப்பத்திரம் தந்தார்கள்..எனக்கெதற்கு எனக்கேட்டேன்...எங்களுக்கு”வழிகாட்டியே” நீங்கள் தான் என்றார்கள்..எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! கண்கள் கலங்கித்தான் போய்விட்டது...
       பல வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி பள்ளி என்பதற்கே பொருத்தமற்று இருந்த ஒரு அரசுப்பள்ளிக்கு, 32 வகுப்பறைகள் கட்டித்தந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு பள்ளிவளர்ச்சிக்குழு 08-06-2011-ல் ஏற்பாடு செய்தனர். இதில் கூட ஈகோவின் காரணமாக மன வேதனைப்படக்கூடியளவில் 7-6-2011 இரவு பூஜையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை பள்ளி வளர்ச்சிக்குழுவினர் முறியடித்து பூஜையை சிறப்பாக நடத்தி, நன்கொடையாளர்களைக் கெளரவித்தார்கள். இக்கண்கொள்ளாக்காட்சியைக்காண பள்ளி நிர்வாகத்திற்கும், மாணவ-மாணவிகளுக்கும்தான் கொடுத்துவைக்கவில்லை..
    
     திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சி.சிவசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்..இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் கே.தங்கவேல் அவர்கள் சட்டமன்றக்கூட்டத்தின் காரணமாக கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் கூட தங்களது  நல்லாசியைத்தெரிவித்திருப்பார்கள்....

              பல காலம் அரசியலால் அவதிப்பட்டுவந்த பள்ளிக்கு விடிவு காலம் வந்த பின்பும் மழை விட்டும் துவானம் விடவில்லை என்பதைப்போல, சரசுவதிக்கு கோவில் கட்ட உதவியவர்களுக்கு நன்றி செலுத்திய நிகழ்வைக்கூட அரசியலாக்கிவிட்டனர். இனி நடந்ததைப்பேசிப்பயனில்லை.. நடக்க வேண்டியதைப்பார்ப்போம்..தமிழகரசின் கல்வித்துறை சார்பாக, இந்த 32 வகுப்பறைகளை மிகச்சிறப்பான முறையில் கட்டித்தந்த பள்ளிவளர்ச்சிக்குழுவினரையும், நன்கொடையாளர்களையும் உரிய வகையில் கெளரவிக்க வேண்டும். அப்போதுதான் மேலும் பல அரசுப்பள்ளிகளுக்கு நன்கொடையளிக்க மக்கள் முன்வருவார்கள்.

       பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்.!.
       எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்.!.

   
  
.. 

2 comments:

  1. மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம் ஈஸ்வரன் சார்...

    தினமலரில் இருந்த போது கும்பகோணம் பள்ளி விபத்தைத் தொடர்ந்து அனுப்பர்பாளையம் பள்ளியில் அவலநிலையைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். இப்போது உண்மையிலேயே பிரமிப்பாகத்தான் இருக்கிறது- இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் எதிர்கால உலகின் மீது நம்பிக்கையை ஏற்படுததுகின்றன. இதுகுறித்து புதிய தலைமுறையில் சொன்னால் யுவா கிருஷ்ணா போன்றவர்கள் கட்டுரை எழுதுவார்கள். முயற்றி செய்யுங்களேன்.

    ReplyDelete

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...