Sunday, August 28, 2011

ஒரிசாவில் ஐந்து நாட்கள் சுற்றுலா...

பூரி ஜெகநாதர் கோவில்

   தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டிற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரை புவனேசுவரத்திற்கு தமிழகத்தின் 30 குழந்தைகளை, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அழைத்துச்சென்ற நண்பர்கள் 11 பேருடன் நானும் சென்றிருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட பூரி ஜக நாதர் கோவில் மற்றும் கோனார்க் கோவில் புகைப்படங்களைப்பார்த்த எனது மனைவி என்னை எப்போது கூட்டிச்செல்வீர்கள் எனக்கேட்டிருந்தார். ஆறுவருடம் கழித்துத்தான் அவரின் விருப்பத்தை , அதுவும் பணி ஓய்வு பெற்ற பின்புதான் நிறைவேற்ற முடிந்தது. தனியாக மொழிதெரியாத ஊருக்கு செல்வது உசிதமல்ல(ஏற்கனவே ஜாலியன் வாலாபாக், வாகா எல்லை சென்ற அனுபவத்தால்) என்பதால் உறவினர்களை கூட்டமாகச்சேர்த்துக்கொண்டு செல்வதுதான் உத்தமம் என்பதால் 11 பேர் கொண்ட எங்கள் குழு சென்ற மாதம் 16-8-2011 அன்று சென்னையில் இருந்து இரவு 12 மணிக்கு ஹவுரா மெயிலில் புறப்பட்டு 17-8-2011 இரவு 9 மணியளவில் புவனேசுவரம் சென்றடைந்தோம்.. அடுத்த நாளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பையும் குறிப்பையும் பாருங்கள்..
புவனேசுவரம் ஓட்டல் ஸ்வஸ்திக்கில் வரவேற்பறையில்.அறை ஒதுக்கீட்டுக்காக காத்திருப்பு....

கி.மு. 261-ல் மகத சாம்ரஜ்ய அரசர் சாம்ராட் அசோகன், கலிங்க நாட்டின் மீது படையெடுத்து ,கலிங்கப்போரை நடத்தி வெற்றிபெறுகிறார். அவர்  போருக்குப்பின் புத்த மதத்துறவியால் போர்செய்வதைக்கைவிட்டு அமைதியின் தூதுவராக மாறுகிறார். போர் நடைபெற்ற இடத்தில் ஜப்பான் புத்தமதசங்கத்தால் 1972-ல் நிறுவப்பட்டுள்ள தவுலிமலையில் உள்ள புத்தமதக்கோவில்.


புத்த மதக்கோவிலின் முன் குழுவின் தலைவர் க..பாலசுப்ரமணியன்(கொங்கு முன்னேற்றக்கழக மாநில பொருளாளர்) மற்றும் ஆ.ஈசுவரன்.
இந்த தெளலகிரிக்கு நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதால், புத்தர் கோவிலுக்கு பின்புறம் இந்து மதக்கோவிலும் கட்டப்பட்டு, மக்களை இக்கோவிலுக்கு அழைக்கிறார்கள்..அங்கு சென்றால் அந்தச்சாமி, இந்தச்சாமிக்கு பூஜையென்று ரூ.100/- கேட்டு நமது பர்சை காலிசெய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
புத்தர் சிலை முன்பு எங்கள் குழுவின் ஒரு பகுதியினர்.


உலகப்புகழ் பெற்ற கோனார்க் சூரியக்கோவில். சுமார் 200 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் கி.பி. 1242-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1255-ல் முடிக்கப்பட்டது. இதைக்கட்டிய அரசன் நரசிங்கதேவா..முகமதியனாக மாறிய கலாபகதா என்ற இந்துமத பழங்குடியினத்தலைவனால் 1567-ல் கோனார்க் கோவில் சிதைக்கப்பட்டது. கைகளை இழந்த சூரியக்கடவுள்.கோனார்க்கோவிலின் நுழைவு வாயில்.  27 டன் எடை கொண்ட ஒரெ கல்லில் ஒரு மிகப்பெரிய யானை, ஒருமனிதனை தனது துதிக்கையால் சுற்றிக்கொண்டுள்ளது. யானை மீது சிங்கம் பாய்ந்து அமுக்கிக்கொண்டுள்ளது.

கோனார்க் சிற்பங்கள் கட்டடக்கலைக்கு மட்டுமல்ல, பொறியியல் துறையிலும் முத்திரைபதித்த பிரம்மாண்டமான கோவில்....ஆமாம் அந்தக்காலத்தில் ஏது அண்ணா யுனிவர்சிட்டி போன்ற பொறியியல் கல்லூரிகள்.....?
சிதைவுக்குள்ளான நாட்டிய மண்டபம்.


இது தேரின் சக்கரமட்டுமல்ல.. நேரத்தைக்கணக்கிடும் கடிகாரமாகவும் விளங்குகிறது. சக்கரத்தின் ஒவ்வொரு ஆரமும் 3 மணி நேரத்தையும், இரண்டு ஆரங்களுக்கும் இடையில் உள்ள சிறு குண்டுகள் போன்ற கற்களுகிடையே உள்ளவை 5 நிமிடங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள அச்சானியில் நமது ஆள்காட்டி விரலைவைத்தால் நிழல் விழும் இடத்தைக்கொண்டு நேரம் கணிக்கப்படுகிறது. மாயா ஜால வித்தை போலத்தெரிகிறது.


சூரியனுடைய மனைவியின் சிலை உள்ளே இருக்கிறது. கோவில் நடைபாதை சிற்ப வேலைப்பாடுகளைப்பாருங்கள்.

கோனார்க் கோவிலின் சூரியக்கடவுள் 7 குதிரைகளில்( ரெயின்போ அல்லது சூரியனில் இருந்து வெளிவரும் கலர்கள்) பயணிப்பது போல செதுக்கப்பட்டுள்ளது..கோவிலைச்சுற்றிலும் 24 தேர்ச்சக்கரங்கள் மிக மிக அழகிய சிற்பவேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளது..ஒரு நாளின் 24 மணி நேரத்தைக்குறிக்கிறதே!

         
கோனார்க்கைக்கண்டு கவி. ரவீந்திரநாத்தாகூர் கீழ்கண்டவாறு கூறுகிறார்...”...இக்கோவிலின் கற்கள் பேசும் மொழியானது, மனிதனின் மொழியைத்தோற்கடித்துவிட்டது.” என்ற கூற்று  கோனார்க்கைக்கண்டபின்தான் நிஜம் என்பதை உணரமுடிந்தது....

ஆசியாவிலேயே மிகப்பெரிய 1100 ச.கி.மீ கொண்ட நன்னீர் ஏரியான சில்கா லேக். ஆயிரக்கணக்கான பறவைகளும், மீன்களும், டால்பின்கள் போன்ற பல்வேறு வகையான உயிரினங்களின் புகலிடம். இவ்வேரியை நம்பி 132 கிராமங்களைச்சேர்ந்த 2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். காற்றும் மழையும் சுழன்றடிக்க லைப்ஜாக்கட் இல்லாத படகுப்பயணம் ஆபத்தாக இருந்தாலும், ஒரு த்ரில் அனுபவம்தான். படகுக்காரர்கள் சில தீவுகளுகு நம்மை அழைத்துச்சென்று உயிருடன் சிப்பிக்குள் உள்ள பூச்சியில் இருந்து முத்து எடுப்பது போலக்காட்டி ஜோடி ரூ.100/- என்று கூறி விற்கிறார்கள்.  நாமும் வாங்கி விடுகிறோம்..பின்புதான் அது பிளாஸ்டிக் முத்து என்பது தெரியவருகிறது..அதோ பாருங்கள் டால்பின்.....
ஹிராபூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட யோகினி என்கிற 64 பெண் தெய்வங்களின் கோவில்.கோவிலின் சிலைகள் சிதைக்கப்பட்டுள்ளன.


அட...என்னங்க...இப்படியா அரப்பு போட்டு குளிப்பாங்கா...புவனேசுவரத்தில் உள்ள நந்தன் கானன் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்பெங்கால் புலிகள்.கர்ப்பகிரகத்தில் சாமி சிலைகள் இல்லாத அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட ராஜா ராணி கோவில். இது என்ன சிரிப்பு..ஒரு வேளை கோல்கேட் விளம்பரத்திற்கு சிரிக்கிறாரோ.......புவனேசுவரத்தில் உள்ள காணக்கண்கோடி வேண்டும் என நினைக்கவைக்கிற அழகியசுத்தமான முகுடேஷ்வரர் கோவில்........... எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறதா?
அடடா...ஞாபகம் வந்து விட்டது....வந்தான் வென்றான் படத்தில் ஒரு டூயட்பாட்டில் இந்தக்கோவிலும் வருகிறதே!....பதினொன்றாம் நூற்றாண்டில் லாலாடெண்டு கேசர் என்ற அரசரால் கட்டப்பட்ட புவனேசுவரம் லிங்கராஜ் கோவில்..இவ்வளாகத்தில் சிறிதும், பெரிதுமாக நூறு கோவில்கள் உள்ளன.சில இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டவை....சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயரெடுத்த கோவிலின் சிற்பக்கலையும், பொறியியல் நுட்பமும் சங்கமிக்கும் வரலாற்றுப்பதிவாகும்.... இக்கோவிலும் சரி, பூரி ஜெகநாதர் கோவிலும் சரி... சுத்தம் என்றால் வீசை என்ன விலை ? என்று கேட்பது போல பண்டாரங்கள் சட்டி, சட்டியாக கோவில் பிரகாரத்திலேயே பிரசாதம் செய்து அதைக்கூடையில் வைத்து தூக்கி வருவதும், சாப்பிட்டவைகளை அங்கேயே போடுவதும்...பார்க்க சகிக்கவில்லை...ஒரிசா அசோகர் காலத்தில் புத்த மதமாக இருந்தது. பின் காரவேளர் என்ற அரசர் காலத்தில் சமண மதமாக மாறியதால், புவனேசுவரத்தில் உள்ள ரத்தினகிரி மலையில் சமண முனிவர்கள் செதுக்கி வாழ்ந்த  குகைக்கோவில்கள்...தற்போது நிறைய இளஞ்ஜோடிகளின் புகலிடமாக ...
 நன்றாகப்பாருங்கள்...ஜைனமதத்துறவிகள் பாறாங்கல்லைக்குடைந்து மாடி வீடு கட்டியுள்ளனர்.
ஆஹா...கோனார்க்கையும், பூரி ஜெகநாதரையும், சில்கா லேக்கையும், நந்தன் கானர் ஜூவையும் பார்த்தாச்சு.. நாளைக்காலைலே ஓட்டலை விட்டு கிளம்பவேண்டியதுதான் பாக்கி.....எனக்கூறுகிறார்களோ!. புவனேசுவரத்தின் ஸ்வஸ்திக் ஓட்டல் இரவு நேர மின்னொளியில் தங்கம் போல ஜொலிக்கிறது..


அப்பாடா... சில வருட கனவான ஒரிசாவைப்பார்த்தாச்சு...ஊர் போய்சேரலாம்.ஊர் போனவுடனே சுடச்சுட அரிசிம்பருப்பு சோறாக்கி...சாப்பிடவேண்டும் எனபேசிக்கொண்டு, சென்னை ரயிலுக்காக காத்திருக்கிறார்கள்....
1 comment:

  1. நன்றி..
    படம் மற்றும் விளக்கம் அருமை

    Suresh

    ReplyDelete

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...