Friday, October 11, 2013

   


   ஜெய்வாபாய் பள்ளியின் நீடித்த வளர்ச்சிக்கு..

   பெறுநர்:
   திருமதி.அ.விஜயா ஆனந்தம் எம்.ஏ.எம்.எட்.எம்.பில்அவர்கள்.
   தலைமையாசிரியை,
   ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி,
   திருப்பூர்-641601.
                                   
   மதிப்பிற்குரிய தலைமையாசிரியை அவர்களுக்கு வணக்கம்.
         பொருள்: ஜெய்வாபாய் பள்ளியின்  நீடித்த   புகழுக்கும்  
                  வளர்ச்சிக்கும் சில ஆலோசனைகள்.  
                                                               
.               சிறு வயதில்  மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, வறுமையின் காரணமாக பள்ளி செல்லாமால் குழந்தைத் தொழிலாளியாக இருந்தேன். எனது அம்மா சுதந்திர போராட்ட தியாகி திரு.எஸ்.ஏ.காதர் அவர்களின் வீட்டில் சமையல்காரியாக இருந்தார். திரு எஸ்.ஏ.காதர்  மனைவி திருமதி சலீமா அவர்கள் என்னை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார். பின்பு ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. இது தான் சாக்கு என்று எனது பெற்றோர்  மீண்டும் வேலைக்கு அனுப்பிவிட்டனர். பள்ளிகள் திறந்த போதும் என்னை பள்ளிக்கு அனுப்பாததால், விசம் குடிப்பேன் என மிரட்டி மீண்டும் பள்ளியில் சேர்ந்து காலை, மாலைகளில் முதலாளி வீட்டில் எடுபிடி வேலைகள் செய்து ஒரு வழியாக பள்ளிப்படிப்பை(11-ம் வகுப்பு) முடித்து, கடுமையான உழைப்பின் காரணமாக 1974-ல் தபால் தந்தி இலாகாவில்  பணியில் சேர்ந்தேன்.

        1987-ம் ஆண்டு தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து பெற்ற பயிற்சிகளின் காரணமாக தொலைபேசித்துறையில் பணி புரிந்த எனக்கு, அறிவியல் மற்றும் கல்வியின்பால் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. குறிப்பாக பழைய இந்திய சமூகம் பெண்களுக்கு கல்வியை மறுத்த வரலாறும், பாரதியின் பெண் விடுதலை பற்றிய கவிதைகள், பெண்கல்வி முன்னேற்றத்தில் என்னை ஈடுபடுத்தியது.    1991-ம் ஆண்டு, கோவை அறிவொளி  இயக்கத்தில் மாற்றுப்பணியில் திருப்பூர் கோட்ட அறிவொளி ஒருங்கிணைப்பாளராகச்சேர்ந்து கல்லாமை ஒழிப்பு என்கிற மத்திய, மாநில அரசின் தேசிய இயக்கத்தில் என்னையும் ஈடுபடுத்திக்கொண்டு, கிராமம், கிராமமாக அறிவொளி இயக்கப்பணிகளில் ஈடுபட்ட போதுதான், தனியார் பள்ளிகளின்    கட்டமைப்புகள்,சுகாதாரமான வளாகம் போன்றவற்றையும், அரசுப்பள்ளிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பறை போன்ற கட்டமைப்புகள் இல்லாத சுற்றுச்சூழல் மாசுபட்டு கிடந்த அவல நிலையையும் காணமுடிந்தது.. நமது ஜெய்வாபாய் பள்ளியிலும் இதே நிலைமைதான் இருந்தது.

      அறிவொளி இயக்கத்தின் போது நாங்கள் பாரதியார் பல்கலைகழக  பேரா.ராமகிருஷ்ணன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் படி 30% சதமான அரசுப்பள்ளி குழந்தைகள், பள்ளி இடைவிலகலுக்குக் காரணம் (அரசுப்பள்ளிகளின் மோசமான சுகாதாரம்) பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனுடைய தாக்கம்  காரணமாகவே ஒரு அரசுப்பள்ளியை தனியார் பள்ளிகளுக்கும் மேலாக மாற்றும் முயற்சியாக எனது மகள் படித்த ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியை , பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் இணைந்து வேலை(சேவை) செய்வதன் மூலமாக மாற்றுவது என்ற முயற்சியில்  ஈடுபட்டேன். இதற்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தில் பெற்ற ஓரிகாமி, எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் புத்தகங்கள், துளிர் மாத இதழ் போன்றவைகள் உதவியது.

       அன்றைய தலைமையாசிரியைகள் செல்வி.ஜி..சாவித்திரி அவர்கள் 1989-1991)வரையும், திருமதி. பிரேமா டேனியல் அவர்கள் 1991-1995 வரையும் திருமதி.ஆர்.ஜரீன் பானு பேகம், அவர்கள் 1995-2006 வரையும், தாங்கள்( திருமதி.அ.விஜயா ஆனந்தம்) 1-7-2006 முதல் 2008 வரையும் தந்த ஆதரவும், கல்வித்துறையில் பள்ளிக்கல்விசெயலர் திரு.சி.வி.சங்கர், இயக்குநர் டாக்டர் சி.பழனிவேலு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் திருமதி.சரசுவதி பழனியப்பன், திருமதி.சுலோசனா, திரு.பக்தவச்சலம்(பொன்னீலன்) திரு. நரேஷ், திரு.கார்மேகம், திருமதி. நா.ஆனந்தி, திரு.த.ராஜேந்திரன் போன்றோரின் ஒத்துழைப்பு, திருப்பூர் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ராதாகிருஷ்ணன், திரு.கே.சுப்பராயன், திரு.வே.பழனிச்சாமி, திரு.சி.சிவசாமி, திரு.சி.கோவிந்தசாமி, திருப்பூர் மா நகராட்சி மேயர் திரு.க.செல்வராஜ், ஆணையாளர்கள் திரு.கணேசன், திரு.பாலுசாமி, திரு.பாலசந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் திரு.மாரப்பன், திரு. ந.துளசிராம், திரு.கே.அப்புசாமி, திரு, டி.பிரபாகரன் மற்றும் பெற்றோர்கள், மற்றும் நான் பணிபுரிந்த தொலைதொடர்பு இலாகா அதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழைப்பு, திருப்பூர் தொழில் அதிபர்கள் திரு.மேகலா மணி, செல்வி பர்னிச்சர் திரு.சந்தான கிருஷ்ணன், திருமதி.பத்மினிவிசுவாசம், கோபால்டுமில் ராஜேந்திரன், பாரடைஸ் தியாகராஜன்,எம்ப்ரர் பொன்னுசாமி  போன்ற எண்ணற்றவர்களின் ஒத்துழைப்பால், 1989-ல் சுற்றுச்சூழல் மாசடைந்து, அடிப்படை வசதிகள் இல்லாத ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி 2009-ம் ஆண்டிற்குள், சுமார் ரூ. மூன்று கோடிக்கு மேல்  பல தனியார் பள்ளிகளில் இல்லாத கட்டமைப்பு வசதிகள், மாபெரும் சாதனைகளைப்படைத்து, பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம், தமிழக முதல்வர் உட்பட அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்று, 7300 மாணவிகளுடன்  இந்தியளவில் மிக அதிகமான மாணவிகள் படிக்கும் ஒரு முன் மாதிரி அரசு/நகராட்சிப்
பள்ளியாக உருவெடுத்தது.

        1989-ல் எனது பெரிய மகளை 6-ம் வகுப்பில் சேர்த்த போது பள்ளியின்  நிலைமையென்னவென்றால், 3000-ம் மாணவிகள் படித்த இப்பள்ளியில் குடி நீர் கிடையாது..சத்துணவு சமைக்க தண்ணீர் ஊற்ற ஒரு 1000-ம் லிட்டர் இரும்பு டேங் மட்டுமே உண்டு. இதில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி லாரி மூலம் தண்ணீர் விடுவார்கள்.. உலர் கழிப்பறை மட்டுமே உண்டு..அதையும் எடுக்க மாட்டார்கள். இதனால் பள்ளி முழுவதும் ஆங்காங்கே பன்றிகள் உலாவரும்.. மாணவிகளின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.. இது போக இரவு நேரங்களில் வேலியில்லா வெள்ளாமை வீண் என்பார்கள். நமது பள்ளியும் குட்டையான சுற்றுச்சுவர்,காவல் இல்லாத பள்ளி வளாகம்.. இரவு முழுவதும் சமூக விரோதிகளின் கூடாரம்.. கள்ளச்சாராயம், சீட்டாட்டம், வகுப்பறைகளில் விபச்சாரம் என அத்தனையும் நடக்கும் இடமாக இருந்தது..மாணவிகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் அற்ற நிலைமையில் பள்ளி வளாகம் இருந்தது. காலை மற்றும் மாலை   நேரங்களில் பள்ளியைச்சுற்றியுள்ள பொதுமக்களுக்கு திறந்த வெளி இயற்கை உபாதையை போக்கும் இடம், ரயில்களில் வந்திறங்கும் நாடோடி நரிக்குறவர்களுக்கு பள்ளியை ஒட்டியுள்ள ரோடு பகுதிதான்  தற்காலிக குடியிருப்பு... இவர்களுக்கும் இப்பள்ளி வளாகம் தான் திறந்த வெளி டாய்லெட்...

        ஆசிரியைகளுக்கு மட்டுமே  தண்ணீர் இல்லாத டாய்லெட் வசதி. உண்டு.. ஒரு சில ஆண் ஆசிரியர்கள் நான் பணிபுரிந்த பள்ளிக்கு எதிரில் உள்ள தொலைபேசி நிலையத்திற்குத்தான் இயற்கை உபாதையை கழிக்க வருவார்கள். இது தான் செல்வி.ஜி.சாவித்திரி அவர்கள் தலைமையாசிரியையாக இருந்த போது 1990--ல்  பள்ளியின்  நிலைமை.
     
1990-ல் பள்ளி நிலைமை. செல்வி.ஜி.சாவித்திரி.
 இந்த நிலையை மாற்ற என்னுடன் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த .கே.தனகோபால் ,திரு.கே.பிரபாகரன், திருமதி.பாரதி ராமமூர்த்தி போன்றவர்களுடன் இணைந்து வீடு வீடாகச்சென்று பெற்றோர்களைச் சந்தித்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்தை புனரமைத்தோம்..ஒவ்வொரு பெற்றோரும் மாதம் ரூபாய் ஒன்று வீதம் தரும்
நமக்கு நாமே என்ற திட்டம், தீட்டப்பட்டு பள்ளியில் வளர்ச்சிப்பணிகளுக்கு முதலடி எடுத்து வைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டில் 6-ம் வகுப்பு ஆங்கிலப்பிரிவில் 90 மாணவிகளுக்கும் மேல் சேர்ந்ததன் காரணமாக பெ.ஆ.கழக பொதுக்குழுவின்படி இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு ஆசிரியை பெ.ஆ.கழகம் மூலமாக நியமிக்கப்பட்டார்.

       1992-ல் திருமதி.பிரேமா டேனியல் அவர்கள் தலைமையாசிரியையாக வந்தார். இவர் வந்தபின் பள்ளி வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டது.. பள்ளி வளர்ச்சிக்குழு கூட்டத்தில் வேதியியல் ஆய்வுக்கூடம் இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதைக்கூறி, விருப்பமுள்ள பெற்றோர்கள் ஆளுக்கு ரூபாய் நூறு நன்கொடையாகத்தரவேண்டும் எனக்கோரிக்கை விடுத்தோம். அப்போது ஒரு பெற்றோர் எழுந்திருந்து, அனைவரும் வாருங்கள், நகராட்சி முன்பு சென்று ஆய்வுக்கூடம் கட்டச்சொல்லிக்கேட்போம்..கட்டாவிட்டால் தீக்குளிப்போம் என்றார். இந்தச்சமயம் ஒரு அம்மா அவர்கள் என்னிடம் ரூ.10/-இருக்கிறது. இந்தாருங்கள் என்று வழங்கி ஆய்வுக்கூடத்திற்கான முதல் நன்கொடையைக்கொடுத்தார். இதனால் ஊக்கமுற்ற நாங்கள்  பள்ளி வளர்ச்சிக்காக பல செல்வந்தர்களை  அணுகிய போது, ஒரு சிலர் நாங்கள் நன்கொடை தருகிறோம்.. எங்களுக்கு 80-ஜில் வருமான வரி விலக்கு வாங்கித்தர முடியுமா எனக்கேட்டார்கள்.. வருமான வரி விலக்கு பெற வேண்டுமானால் அறக்கட்டளை மூலமாகத்தான் பெற முடியும் என்று அறிந்தோம். இதனால் பெற்றோர்-ஆசிரியர் கழக பொதுக்குழுவின் ஒப்புதல் பெற்று., 1994-ல் அன்றைய தலைமையாசிரியை திருமதி.பிரேமாடேனியல் அவர்களின் முயற்சியில் பள்ளி வளர்ச்சிக்குழு அறக்கட்டளையாக மாற்றப்பட்டது.
வேதியல் & இயற்பியல் ஆய்வுக்கூடம்.

            இதனால் திரு.மேகலா மணி அவர்கள் ரூ.ஒரு லட்சம் பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளைக்கு நன்கொடை தந்தார். இதன் மூலம் ஒரு வகுப்பறை கட்டப்பட்டது. பள்ளி சிறுகச்சிறுக முன்னேறியது. திருமதி பிரேமா டேனியில் காலத்தில்தான் 1994-ம் ஆண்டு 11-ம் வகுப்பில் காமர்ஸ் குரூப் சுய நிதி முறையில் பெற்றோர்கள் மற்றும் மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டது. கணிப்பொறிக்கல்விக்காக ஒரு கருப்பு வெள்ளை கம்ப்யூட்டர் வாங்கப்பட்டு, மாணவிகளுக்கு மட்டுமில்லாமல் பள்ளி விட்டபின்பு முன்னாள் மாணவிகளுக்கு கட்டணம் வாங்கிக்கொண்டு கணிப்பொறிக்கல்வி கற்பிக்கப்பட்டு, சான்றிதழும் தரப்பட்டது. கோடை கால விடுமுறையில் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டது. இதில் வரும் நிதிக்கு மேலும் கணிப்பொறிகள் வாங்கப்பட்டு கணிப்பொறி ஆய்வகம் உருவாக்கப்பட்டது.
      


1995 முதல் 2006 வரை தலைமையாசிரியையாக இருந்த திருமதி.ஜரீன்பானுபேகம் தலைமையில் பள்ளியில் உண்டாக்கப்பட்ட பல்வேறுவிதமான செயல் பாடுகளின் (மூலிகைத்தோட்டம், கணனிக்கல்வி,மழை நீர் சேகரிப்பு, நீர் மறு சுழற்சி, அறிவியல் பூங்கா சுய நிதி வகுப்புகள்) காரணமாக அவருக்கு 2002-.ல் தேசிய நல்லாசிரியர் விருதும், 2004-ல் சிறந்த கணணிக்கல்விக்கான தேசிய விருதும், ரூ.1.50 லட்சமும் பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் நமது பள்ளிக்கு வழங்கப்பட்டது.  இந்தக்கணணிக்கல்வி விருது பெற எனது உழைப்பு, முயற்சி காரணமாக இருந்த காரணத்தால், திருமதி.ஜரீன்பானு தலைமையாசிரியை அவர்கள் தான் செல்வதை விட நான் செல்வதே பொருத்தமாக இருக்கும் எனக்கூறி, என்னை டெல்லிக்கு அனுப்பிவைத்தார்.
  
        நமது பள்ளியில் செயல்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு, கிச்சன் கார்டன், மண்புழு உரம் தயாரிப்பு, குப்பைகள் பிரித்தல், மூலிகை தோட்டம், மரம் வளர்ப்பு, பள்ளிக்கு வெளியே நூற்றுக்கணக்கான மரங்களை மாணவிகளைக்கொண்டு ந்ட வைத்தது, கிரே வாட்டர் மேலாண்மை, சிறந்த தூய்மையான பள்ளி வளாகம் போன்ற காரணங்களுக்காக 2005-ம் ஆண்டு இப்பள்ளியின் சுற்றுச்சூழல் செயல்பாட்டின் காரணமாக தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் செயல் வீரர்களுக்கான விருது வழங்கப்பட்டது.  தமிழகரசு வழங்கும் இவ்விருதினை அன்றைய தலைமையாசிரியையும், நானும் சென்னையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டோம்.

இதைப்போன்ற ஒரு விருது  முதன் முறையாக ஒரு பள்ளிக்கு வழங்கப்பட்டது என்றால், அது நமது பள்ளி மட்டுமே..இதன்  காரணமாகவே 2007-ம் ஆண்டில் தேசிய பசுமைப்படையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இப்பள்ளிக்குத் தலைமை தாங்கிய தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
          
             ஜூலை மாதம் 2006-ல் தலைமையாசிரியையாக பொறுப்பேற்ற தங்களுக்கு 2006 செப்டம்பரில் தமிழகரசின் நல்லாசிரியர் விருதும், அடுத்த ஆண்டிலேயே 2007-ல்  தங்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதும் கிடைத்தது. இந்தச்சாதனை தமிழகத்தில் எந்தப்பள்ளியும் எந்தத் தலைமையாசிரியையும் பெற்றிடாத மகத்தான  இமாலயச் சாதனையாகும்.

        மத்தியரசு நடத்துகின்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பத்து முறை தொடர்ச்சியாக தேசிய விருதும், மூன்று
 முறை இந்திய விஞ்ஞானிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியளவில் சாதனை புரிந்த ஒரே பள்ளி நமது பள்ளிதான். இது போக தமிழகரசின் அறிவியல் நகர விருதை ஏழு முறை பெற்ற பள்ளியும் நமது பள்ளிதான்.

   

    1989-90-ல் ஒரு ரூபாய் திட்டம் மூலம் வந்த வரவு சுமார் 31,000/-ம் தான். இன்றோ சுமார் ரூ.35 லட்சமாக பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களால் ஆங்கில/தமிழ் வழி சுய நிதிப்பிரிவுகள், கேண்டீன், கணிப்பொறி பயிற்சி வகுப்புகள்,தொலைபேசி பூத், விடுமு1989-90-ல் ஒரு ரூபாய் திட்டம் மூலம் வந்த வரவு சுமார் 31,000/-ம் தான். இன்றோ சுமார் ரூ.35 லட்சமாக பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களால் ஆங்கில/தமிழ் வழி சுய நிதிப்பிரிவுகள், கேண்டீன், கணிப்பொறி பயிற்சி வகுப்புகள்,தொலைபேசி பூத், விடுமுறை நாட்களில் தொலைதூரக்கல்வி வகுப்புகள், மற்றும் ஆடிட்டர் பயிற்சித்தேர்வு  வகுப்புகளுக்கு பராமரிப்பு நிதி போன்றவை மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2008-2009-ம் ஆண்டு முடிய சுமார் ரூ. 3  கோடிக்கு மேல், வகுப்பறைகள், ஆசிரியர் சம்பளம் என செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே எந்த அரசு/ நகராட்சிப்பள்ளியிலும் இல்லாத முறையில் இதற்கான வரவு-செலவுகள், பெற்றோர்-ஆசிரியர் கழக விதிமுறைகளின் படி முறையாக  பதிவு பெற்ற தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

    ஜெய்வாபாய் பள்ளிக்குள் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து , செயல்பட்டு வந்த ரோட்டரி பள்ளியினை வேறு இடத்திற்கு மாற்றி, பள்ளியின் இடத்தை மீட்கும் முயற்சியில் எனது உயிரைக்கூட பணயம் வைத்து அரசுப்பள்ளியின் இடம் தனியாருக்கு போகக்கூடாது, பெண்கல்வி பெருக வேண்டும் என்ற முயற்சியில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜன நாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் போன்ற பொது நல அமைப்புகளின்  ஒத்துழைப்புடன் 16 வருட முயற்சிக்கு சென்னை உயர் நீதி மன்றம் நலலதொரு தீர்ப்பை நமது பள்ளிக்கு வழங்கினாலும், தற்போது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. சென்னை உயர் நீதி மன்றம் தனது தீர்ப்பில், நமது பள்ளியிப்போன்று தனியார் பள்ளிகள் கூட இல்லை என்று புகழ்ந்துள்ளது. இந்தப்புகழை நமது
 பள்ளி தக்க வைக்க வேண்டும். ஏற்கனவே தங்கள் காலம் வரை 2009-வரை உருவாக்கப்பட்ட அமைப்புகள், செயல்பாடுகள் தொடர்ந்து பராமரிக்கப்படவேண்டும். அப்போதுதான் சுப்ரீம் கோர்ட்டிலும் நமது பள்ளிக்கு நல்லதொரு தீர்ப்பும், நியாயமும் கிடைக்கும்.

          நமது பள்ளியின் வெளிப்புறச்சுவற்றில் கீழ்கண்ட சுற்றுச்சூழல் பற்றிய வாசகத்தை எழுதி வைத்துள்ளேன்.

      வளமான மரம் செடி கொடிகளுடன் சென்ற தலைமுறை உங்களிடம் கொடுத்தது. என்னை நீங்கள் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக்கொடுக்க வேண்டும் மண்.

       மேற்கண்ட வாசகத்திற்கு ஏற்ப 2006-ம் ஆண்டு தாங்கள் ஜூலை  மாதத்தில் இப்பள்ளியில் இருந்த பல சிறப்புகள் (தனியாக இணைக்கப்பட்டுள்ளது) தற்போது இல்லை.. முன்பிருந்த பெருமை, புகழ் மங்கி வருகிறது.. எனவே மீண்டும் முன்பிருந்த நிலைக்கு பள்ளியை நாம் கொண்டுவரவேண்டும். பள்ளியை  நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இந்த நீண்ட கடிதம் பல மாதங்களுக்குமுன்பு எழுதப்பட்டது. அனுப்பலாமா...வேண்டாமா...என்ற தயக்கத்தில் இத்தனை நாட்கள் மெளனமாக இருந்துவிட்டேன்..இனியும் மெளனம் சாதித்தால் பள்ளியின் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் பாழாகிவிடுமோ என்ற பயத்தில் தான் இக்கடிதம் தங்களுக்கு அனுப்பப்படுகிறது.


      நன்றியுடன்,
  
    திருப்பூர்.                   ஜெய்வாபாய் பள்ளி நலன் நாடும்.
    27-12-2012.                      ஆ.ஈசுவரன்.
                            முன்னாள் பெ.ஆ.கழகத்தலைவர்.
      

 

           

No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...