.
     ஜெய்வாபாய் பள்ளிக்கு நன்றி சொல்லும் நேரமிது.
                             (A.ஈசுவரன் தலைவர், பெற்றோர்-ஆசிரியர் கழகம்..)

அன்புடையீர் வணக்கம்.

         1937-ம் ஆண்டு திருமதி ஜெய்வாபாய் என்ற பெண்மணி(இறக்கும் தறுவாயில்) திருப்பூரில் பெண்களுக்கென்று பள்ளி வேண்டுமென்று விருப்பப்பட்டார். தனது மனைவியின் விருப்பத்தை கணவர் D.O.ஆஷர் 1942-ல் நிறைவேற்றினார். திருமதி ஜெய்வாபாயின் பெண் கல்விக்கனவு நிஜமாகியுள்ளது. இந்தியாவிலேயே 7200 மாணவிகள் படிக்கின்ற மாபெரும்
 மாநகராட்சிப்பெண்கள் பள்ளியாக பல்வேறு சாதனைகளைப்படைத்து ஜெயக்கொடி நாட்டி வருகிறது.


          1989-ம் ஆண்டு எனது மகளை இப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்தபோது பள்ளியின் நிலையென்ன? அன்று மாணவிகளின் எண்ணிக்கை 3008. பள்ளியின் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டுக்கிடந்தது. அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பறைகள், கிணற்று நீர், வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை இல்லை. பன்றிகள் உலாவும் இடமாக பள்ளி வளாகம் காட்சியளித்தது. வேலியில்லாத பயிர் நாசம் என்பதை போலவே கண்காணிப்பும், பராமரிப்பும் இல்லாத பள்ளியும்! 

இச்சூழல் மாசுபாடு பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் “ஆராய்ச்ச்சிமணி” பகுதியில் எழுதியதில், பெற்றோர்கள்  மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. 25-07-1989 அன்று பெற்றோர்-ஆசிரியர் கழகம் புனரமைக்கப்பட்டது. மாதம் ஒரு ரூபாய் என்கிற நமக்கு நாமே திட்டம் உருவாயிற்று. பள்ளிப்பாதுகாப்புக்கமிட்டியில் என்னை இணைத்துக்கொண்டேன். மகாகவி பாரதி, சரஸ்வதி தேவி புகழ பாட்டில், கல்விக்கூடத்தை பேம்படுத்த



         நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! 
        நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!

        ஆண்மையாள ருழைப்பினை நல்கீர்! என்றார்.


தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த என்னிடம் பொற்குவை இல்லை. உழைப்பு மட்டுமே இருந்தது. எனது தொலைபேசித்துறை பணி நேரம் போக, மீதி நேரத்தையும், இலாகா விடுமுறைகளையும் கடந்த 20 வருடங்களாக  பெண் கல்வி சிறக்க எனது உழைப்பை ஜெய்வாபாய் மகளிர் பள்ளியின் முன்னேற்றத்திற்குச் செலுத்தி வருகிறேன்.



             1989-ல் போடப்பட்ட ஒரு ரூபாய் திட்டம் என்ற விதை இன்று ஆலம்விருட்சமாக உயர்ந்துள்ளது. 1991-ல் ஆசிரியை பற்றாக்குறையினைப் போக்க 2 ஆசிரியைகளை நியமித்தோம். 2 காவலர் மற்றும் 2 ஆசிரியைகள் சம்பளமாக மாதம் ரூ.2900/- தரப்பட்டது. தற்போது 67 ஆசிரியைகள், 9 பணியாளர்களுக்கு மாதம் ரூ.1.80 லட்சம் தரப்படுகிறது. 1993-முதல் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஆரம்பித்தோம். இதுவரை 34 வகுப்பறைகள், 4 ஆய்வுக்கூடங்கள், 34  டாய்லெட்டுகள், 6 கீழ்-மேல் நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. 1989-90ம் கல்வியாண்டில் இருந்து 2007-08 ம் கல்வியாண்டு வரை சுமார் ரூ.3 கோடியளவில் கட்டடங்கள், ஆசிரியைகள் சம்பளம், பள்ளி பராமரிப்பு, சூழல் மேம்பாடு, மின் கட்டணம், கம்ப்யூட்டர்கள், மின்சார விளக்குகள், மின் விசிறிகள் எனச்செலவழிக்கப்பட்டுள்ளது.



         திருப்பூரின் முக்கிய பிரமுகர்களை அணுகியத்தில் சென்னை சில்க்ஸ் இரண்டு, செல்வி பர்னிச்சர்ஸ் இரண்டு, மேகலா மணி ஒன்று ஆகியோர் ஐந்து வகுப்பறைகள் கட்டித்தந்துள்ளனர்.  2008-ல் திருப்பூரில் இதுவரை யாரும் செய்திராத அளவில் ஈஸ்ட்மேன் ஏற்றுமதி நிறுவனத்தார் ரூ. 85 லட்சம்  மதிப்பில் 15 வகுப்பறைகள் கட்டி தந்துள்ளானர்.  மத்தியரசு சார்பில் மூன்று வகுப்பறைகள், திரு. கே.சுப்பராயன் MLA அவர்கள் மூன்று வகுப்பறைகள், திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் MP  அவர்கள் 4 வகுப்பறைகள்  தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித்தந்துள்ளனர்.  பள்ளியின் வைரவிழாவினை முன்னிட்டு நமது மாணவிகளால் திருப்பூர் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ 10 லட்சம் நிதியில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய மா நகராட்சி மேயர் க.செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.கோவிந்தசாமி அவர்களும் நமது பள்ளியின் வகுப்பறை பற்றாக்குறையைப்போக்கும் வண்ணம் முயற்சிகள் எடுத்து திருப்பூர் மா நகராட்சி சார்பாக ரூ. 4 கோடி மதிப்பில் 33 வகுப்பறைகள் மற்றும் திறந்தவெளி கலையரங்கமும் கட்டப்பட்டு வருவதால் 10,000 மாணவிகள் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.



          திருப்பூரில் அரசு- நகராட்சிப்பள்ளிகளில், ஜெய்வாபாய் பள்ளியில் மட்டுமே 1000 த்திற்கும் மேற்பட்ட (1991-ல் 49 மரங்கள் இருந்தது) மரம், செடி, கொடிகள், வண்ணப்பறவை, வர்ணமீன்கள் காட்சியகம், செயற்கை நீருற்றில் துள்ளி விளையாடும் மீன்கள், பூத்துக்குலுங்கும் அல்லிக்குளங்கள், வறண்ட நில தாவர வகைகள், மழை நீர் சேகரிப்பு குளம், மூலிகைத்தோட்டம், சானிட்டரி நாப்கின் பாய்லர், அறிவியல் பூங்கா எனச் சோலைவனமாக உயிரோட்டத்துடன் காட்சியளிக்கும்படி இப்பள்ளியை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மாற்றியுள்ளதால் பல பள்ளிகளில் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் நமது பள்ளியை காண வருகின்றனர்.


       பெற்றோர் ஆசிரியர் கழக(எனது) வழிகாட்டுதலின் காரணமாக பத்துமுறை தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு விருதுகள், தமிழகரசின் சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது, மத்தியரசின் சிறந்த கம்ப்யூட்டர் கல்விக்கான விருது எனப்பல்வேறு சாதனைகளை செய்ததன் காரணமாக மேண்மைமிகு முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் டாக்டர் .A.P.J. அப்துல்க்லாம் அவர்கள் நமது பள்ளியை நேரில் கான விருப்பப்பட்டார். மாண்புமிகு முன்னாள் தமிழகமுதல்வர் J.ஜெயலலிதா அவர்கள் மற்றும் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் நமது பள்ளியைப் பாராட்டியுள்ளனர். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்ததைப்போன்று நமது பள்ளியின் தலைமையாசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம் மற்றும் தற்போது பணிபுரியும் திருமதி.அ.விஜயா ஆனந்தம் அவர்களும் அடுத்தடுத்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளது மாபெரும் சிறப்பாகும்.

பள்ளி இடம்: ஜெய்வாபாய் பள்ளியின் ஒரு ஏக்கர் இடம், சமூகத்தில் செல்வமும் செல்வாக்கும் மிகுந்த ரோட்டரி கிளப் மற்றும் அவகள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பெ.ஆ.கழகத்திற்கு 1990-ல் தெரியவந்தது. அன்று முதல் பள்ளி இடத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். 1996-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தோம். சென்னை உயர் நீதிமன்றம் 2005-ல்  வழங்கிய தீர்ப்பில், ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்து ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியினர் 31-5-2006-க்குள் வெளியேறி விடவேண்டும் என்று தீர்ப்பளித்தும் ரோட்டரி நிர்வாகம் நீதிக்குத்தலைவணங்காமல் அப்பீல் செய்தனர்.  2008-ல் அவர்களின் அப்பீலை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் ஜெய்வாபாய் நகராட்சிப் பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் நோக்கத்துடன் வளர்ச்சி மற்றும் 7200 மாணவிகளின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு உழைத்டு வந்த நான் இன்று துரோணாச்சாரியார்கள் உருவாக்கிய கெளரவ் சேனையின் சக்கரவியூகத்தில் மாட்டிக்கொண்ட அபிமன்யு போல நிற்கிறேன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி விட்டது. தர்மம் மறுபடியும் வெல்லும்.


                 மூன்று .அங்குல மண்புழு கூட மண்ணை வளப்படுத்தி மனிதனுக்கு உதவுகிறது. மனிதராக பிறந்த நாம் பிறருக்கு உதவவேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் எனது வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றவும், பெண் கல்வி சிறக்கவும் சேவைபுரிய ஜெய்வாபாய் பள்ளியில் அனுமதித்த தலைமையாசிரியைகள் செல்வி.ஜி.சாவித்திரி, திருமதி.பிரேமா டேனியல், திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம், திருமதி.அ.விஜயா ஆனந்தம் மற்றும் ஒத்துழைப்பை நல்கிய அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவிகள் தமிழக் அரசின் கல்வித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கும், எனது செயல்பாட்டுக்கு பல்வேறு வழிகளில் உதவிப்புரிந்தவர்களுக்கும், மனமாற வாழ்த்தியவர்களுக்கும், அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்களுக்கும், எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி அரசிற்கும், BSNL இலாகாவிற்கும் தவறான புகார்களை,  அனுப்பி எனக்கு மன உளச்சலையும் துயரத்தையும் உருவாக்கிய அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

               ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக திகழ்கிறது என்று பிரபல கல்வியாளர்கள் டாக்டர் வசந்திதேவி, டாக்டர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், டாக்டர் ராமனுஜம், சாகித்திய அகதாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உள்பட பலர் பாராட்டி உள்ளனர். இச்சிறப்பை மேலும் முன்னெடுத்து செல்லும் முகமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் . ஜெய்வாபாய் பள்ளி மற்றும் மாணவிகளின் நலனுக்காக புதிய நிர்வாகிகளுக்கு எனது அனுபவம், ஆலோசனை மட்டுமல்ல உழைப்பையும் தரத்தயாராக உள்ளேன்.

 திருப்பூர்.                                                                                                                  வாழ்த்துக்களுடன்
03-10-2008                                                                                                                       ஆ.ஈசுவரன்

03-10-2008 அன்று  மாவட்டக்கல்வி அலுவலரின்(தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ) வேண்டுகோளுக்கிணங்க ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியபோது ஆசிரியைகளுக்கும், பெற்றோர்களுக்கும் நான் வினியோகித்த துண்டுப்பிரசுரம்.

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!