ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி 1989-ம் ஆண்டில்


1989-ம் ஆண்டு திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்து வந்தேன்.. தொலைபேசி நிலையத்திற்கு எதிரில் தான் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளியின் ஆண் ஆசிரியர்கள் இயற்கை உபாதை நீங்க தொலைபேசி நிலையம் வருவதை பார்த்துள்ளேன்.

தொலைபேசி நிலையத்தை ஒட்டியே ஹட்கோ காலனி. இந்தக்காலனியில் 1987-ம் ஆண்டு மத்தியரசு ஊழியர்கள் கோட்டா மூலம் இலாகவின் வீட்டுக்கடன் வாங்கியிருந்தேன். நான் ஒடக்காட்டில் வாடகை வீட்டில் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக இருந்ததால் இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். 1989-ல் எனது பெரிய மகள் இந்துமதியை ஆறாம் வகுப்பில் இந்தப்பள்ளியில் சேர்த்தேன். இரண்டாவது மாடி அதுவும் ரோட்டைப்பார்த்து இருந்தததால் பள்ளிக்குள் நடப்பது நன்றாக தெரியும்.
பள்ளியின் சுற்றுச்சுவர் இரண்டடி உயரமே இருக்கும்.. சுற்றுச்சுவர் முன்பு வட நாட்டு ஜிப்சி நாடோடிகளும், நரிக்குறவர்களும் டெண்ட் அடித்து தங்கியிருப்பார்கள். காலை நேரங்களில், மாலை நேரங்களில் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் சுற்றுச்சுவரை தாண்டி பள்ளிக்குள் செல்வார்கள். தங்கள் காலைக்கடன்களை கழிப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல பக்கத்தில் உள்ள சின்னான் நகர், மிலிட்டரி காலனி மக்களும் காலையில் ஆண்களும், பெண்களும் கையில் ஒரு சொம்பு தண்ணீருடன் பள்ளிக்குள் வந்து இயற்கை
உபாதையை போக்கிவிட்டுச்செல்வார்கள்.
பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் அனைத்து சமூக விரோத காரியங்களும் நடக்கும். திங்கள் கிழமை வகுப்பறைக்குள் மாணவிகள் செல்லமுடியாத அளவில் மனிதக்கழிவுகளை போர்டில் அடித்திருப்பார்கள்..டெஸ்க்குகளின் மீதும் கழிவுகள் இருக்கும்.. காண்டம்கள் கிடக்கும்..மது பாட்டில்கள் உடைக்கப்பட்டிருக்கும்...
அப்போது பள்ளிக்குள் மனிதக்கழிவினை மனிதர் அகற்றும் கழிப்பறைதான்.. கழிப்பறைக்குள்ளே யாரும் போக முடியாது.. சத்துணவிற்காக நகராட்சி மூலம் ஒரே யொரு இரும்பு தண்ணீர் தொட்டி 5000-ம் லிட்டர் இருக்கலாம். அது ஒன்றுதான் சத்துணவு, மாணவிகள் குடிக்கவே சரியாக இருக்கும்.. பின் எங்கே.. கழிப்பறை போக, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ! மதிய நேரம் நான் குடியிருக்கும் வீடுகளுக்கு படையெடுத்து குடிக்க தண்ணீர் கேட்கும் மாணவிகள் நிலைமை பரிதாபமாக இருக்கும்..
மேலே கூறியது எல்லாம் நான் அடக்கி வாசித்திருப்பவை.. அன்றைய பள்ளியின் படங்களைப்பாருங்கள்.. நிலைமை புரியும்...என்ன செய்வது..? இன்று போல செல்போன் எல்லாம் கிடையாது.. போட்டோ எடுத்து முக நூலில் போடுவதற்கு..
எனக்குத்தெரிந்த ஒரே வழி தினமணி பத்திரிக்கையில் ஆராய்ச்சி மணிப்பகுதிக்கு நிலைமைய விளக்கி ஒரு கடிதம் எழுத.. அது ஜூன் 1989-ம் ஆண்டு தினமணி பத்திரிக்கையில் வெளிவந்தது...அன்றைய தினமணி ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பள்ளியின் தலைமையாசிரியருக்கு ஒரு கடிதமும் எழுதினார்..அப்போதைய தலைமையாசிரியை செல்வி.வி.சாவித்திரி அவர்கள்.. நான் குடியிருக்கும் பகுதியிலேயே குடியிருந்தார். பத்திரிக்கையில் வந்த செய்தி, மற்றும் தினமணி ஆசிரியரின் கடிதம் போன்றவற்றிற்காக என்னை கூப்பிட்டு அனுப்பினார்..
எங்கள் காலனியிலேயே வசித்த, தொலைபேசி நிலையத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் கே.தனகோபாலுடன் சென்று அவரைப்பார்த்தேன்..
          அவரிடம் பள்ளியை பாதுகாக்கவேண்டும் என்ற யோசனை சொன்னோம். பெற்றோர்-ஆசிரியர் கழகச்செயல்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்றோம்.. அதற்கு அவர் பெ.ஆ.கழகம் என்பது பெயர் அளவில் தான் இருக்கிறது.. கூட்டம் போட்டால் ஒருவரும் வரமாட்டார்கள் என்றார். அதற்கு நாங்கள், நீங்கள் மாணவிகளின் பெற்றோர் விபரங்கள் தாருங்கள் எனக்கேட்டு வாங்கி, பள்ளிக்கு அருகில் இருந்த ராயபுரம், ஓடக்காடு, மிலிட்டரி காலனி, கல்லம்பாளையம் பகுதிகளுக்கு சென்று பெற்றோர்களுடன் பேசி பெ.ஆ.கழகத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம்..

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!