Saturday, October 14, 2017

மேதகு அப்துல்கலாமும் ஜெய்வாபாய் பள்ளியும்..


மேதகு அப்துல் கலாம் அவர்களும் ஜெய்வாபாய்  நகராட்சிப்பெண்கள்

                              மேல் நிலைப்பள்ளியும்

                                     (ஜெய்வாபாய்ஈசுவரன்)
       திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிதான் இந்தியளவில் மிக அதிகமான அளவில் மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளியாகும். 2009-ம் ஆண்டு இந்தப்பள்ளியில் படித்த மாணவிகள் 7285 ஆகும்.  நான் இந்தப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொருளாளராக, செயலாளராக, தலைவராக 1989-ம் ஆண்டு முதல் 2009 –ம் ஆண்டுவரை சேவைசெய்துள்ளேன். இந்தப்பள்ளியானது மேதகு பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன்  2001-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்துவந்துள்ளது. அது பற்றி எங்களது நினைவலைகள் உங்கள் பார்வைக்கு…
          தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆறுபேர் சேர்ந்து என்னுடையை வழிகாட்டுதலில் மழை நீர் சேகரிப்பு ஆய்வை நடத்தி இப்பள்ளியில் அதை அமுல்படுத்தியிருந்தனர். இந்த ஆய்வானது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்த ஆய்வு மாணவிகளின் தலைவி தமீம் சுல்தானவும் நானும் இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டில் அப்துல் கலாம் அவர்களின் பேச்சினை கேட்டோம். அப்போது அவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் என நினைக்கிறேன். பேசிவிட்டு மேடையை விட்டு வரும்போது அவரிடம் அவர் எழுதிய அக்கினிசிறகு புத்தகத்தில் கையெழுத்து கேட்டோம்.. புத்தகம் தமிழில் இருந்ததால் மாணவியிடம் என்ன தமிழ் நாடா..? எந்தப்பள்ளி எனக்கேட்டு எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.(அப்போது இப்படி செல்போனோ, கேமராவோ இல்லாத காலம்)

         2001-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 27-ம் தேதி பூனாவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை மேதகு அப்துல் கலாம் அவர்கள்( அப்போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்)  துவக்கிவைத்து உரையாற்றினார். அப்போதுதான் அவருடைய பேச்சில் கனவு காணுங்கள் என்ற பேச்சினை கேட்டோம். பின் அவர் உறுதி மொழி வாசிக்க இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரம் மாணவர்களும் திருப்பி சொன்னார்கள். அதன் பின் மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்கத்திற்கு வந்து மாணவர்கள் செய்திருந்த ஆய்வினைக்கேட்டறிந்தார். இந்த மா நாட்டிற்கும் ஜெய்வாபாய் பள்ளி மாணவி வி.பாரதியின் ஆய்வுக்கட்டுரை தேர்வாகி தேசியயளவில் கலந்துகொண்டிருந்த எங்களது ஆய்வுபற்றியும் கேட்டறிந்தார். எங்களது ஆய்வுத்தலைப்பு  அன்றைய கட்டடங்களையும் இன்றைய கட்டடங்களையும் ஒப்பீடு செய்திருந்தோம். எங்களது ஆய்வுத்தலைப்பை கேட்டவுடனே..
 அந்தக்காலத்தில் கடுக்காய் தண்ணீர், கரும்புச்சாறு, வெங்கைக்கல் பொடியெல்லாம் கொண்டு கட்டடம் கட்டியுள்ளனர். உங்கள் ஆய்வில் இதுபற்றியெல்லாம் எழுதியுள்ளீர்களா எனக்கேட்டார். டெல்லியில் ஒரு நிமிடம் மட்டுமே பேசமுட்டிந்த எங்களால், பூனாவில் சுமார் மூன்று நிமிடங்கள் எங்களுடன் பேசினார். இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத   நிகழ்வாக அமைந்தது.. எங்களின் ஆய்வறிக்கையை பார்வையிட்டு அதில் கையொப்பமும் இட்டார்


                  2002-ம் ஆண்டு மேதகு அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்த வருடம் தான் ஜெய்வாபாய் பள்ளியின் 60 ஆண்டுகால சரித்திரத்தில் முதல் முறையாக இப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.ஆர்.ஜரீன்பானு பேகம் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதியின் கையில் பெற்று திருப்பூர் நகருக்கே பெருமை தேடித்தந்தார். 

அப்துல் கலாம் அவர்களின் அவருடைய முக்கியமான மேற்கோள்கள் பள்ளியின் சுவர்களில் வண்ணத்தில் எழுதப்பட்டு மாணவிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் தேசிய குழந்தைகளின் அறிவியல் மா நாட்டிற்கும், அதற்குப்பிறகு நடைபெறும் இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டிற்கும் இப்பள்ளியின் மாணவி சி.சவீதாவின் கிச்சன் கார்டன் என்ற ஆய்வுக்கட்டுரை தேர்வானது. இந்த இரண்டு மா நாட்டிற்கும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் துவக்கிவைக்கும் செய்தி கிடைத்தது. அவருடைய புகழ்பெற்ற 10 அம்ச திட்டத்தை 60 அடி நீளம் கொண்ட துணியில் 10 அடிக்கு எழுதப்பட்டது. மீதியிருந்த 50 அடி நீளத்திற்கும் ஜெய்வாபாய் பள்ளியின் 6000-ம் மாணவிகளும் கையெழுத்திட்டு, இதனை மைசூரில் நடைபெறும் மா நாட்டிற்கு எடுத்துச்சென்று அந்த மா நாட்டின் இந்தியக்குழந்தைகள் அனைவரும் கையெழுத்திடுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த மா நாட்டின் துவக்கவிழா நிகழ்ச்சியின் போது  ஜெய்வாபாய் பள்ளி மாணவி சவீதா மேடையில் அவரிடம் பள்ளி சார்பாக ஆறாயிரம் மாணவிகள் அவரின்கவிதையில் கையொப்பமிட்ட புகைப்படத்தைக்கொடுக்க மேடைக்குச்சென்றபோது காவலர்களால் தடுக்கப்பட்டார். இதைப்பார்த்த அவர் மேடைக்கு அழைத்து மாணவியிடம் இருந்து புகைப்படத்தை வாங்கிக்கொண்டார். மைசூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு முடிந்தபின் அப்படியே பெங்களூரில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டிலும் கலந்துகொண்டு(3-1-2003 முதல் 8-1-2003 வரை) அவருடைய உரையைக்கேட்டோம்.
                     பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்தவுடன், திருப்பூரில் உள்ள  நிட்மா சங்கத்தின் அகில் ரத்தினசாமி அவர்கள் என்னை அழைத்தார். எங்களுடைய சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டிற்கு ஜனாதிபதி அவர்களை அழைத்தோம். ஆனால் அவரோ வர மறுக்கிறார். உங்கள் ஜெய்வாபாய் பள்ளியின் மாணவிகள் சார்பாக அழைப்புவிடுங்கள்! திருப்பூர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார். அதே போல ஜெய்வாபாய் பள்ளியின் 6000-ம் மாணவிகளும் திருப்பூருக்கு அவர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து அவருக்கு கடிதம் எழுதினோம். திருப்பூர் வர ஒத்துக்கொண்டு, ஜெய்வாபாய் பள்ளிக்கே வர விரும்பினார். ஜெய்வாபாய் பள்ளியில் 6000-ம் மாணவிகளும் அமர ஆடிட்டோரியம் இல்லாத 
காரணத்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும்  வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளை சந்தித்தார்அப்போதுஇப்பள்ளி மாணவி மழை நீர் சேகரிப்பு இளம் விஞ்ஞானி தமீம் சுல்தானா வரவேற்பு பூங்கொத்து கொடுத்தார்அவரிடம் மழை நீர் சேகரிப்பு ஆய்வு அமுல் படுத்தியது பற்றி கேட்டறிந்தார்.

         2003 -ம் ஆண்டு மத்தியரசு இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பான முறையில் கணணிக்கல்வியை அமுல் படுத்திய அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விருது அளித்தது. இந்த விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளி தேர்வானது. ஜனாதிபதி அவர்கள் விருது அளிக்கும் நிகழ்ச்சியானது, தேர்தல் காரணமாக கடைசி நேரத்தில் அப்துல் கலாம் அவர்கள் ரத்து செய்துவிட்டார். அவருடைய கையால் விருது பெறும் பாக்கியம் கிடைக்காமல் போனது. ரத்து செய்யப்பட்ட விருது பற்றி அவருக்கு பள்ளி சார்பாக கடிதம் எழுதினோம். பின் இந்த விருதுக்கான விழா 4-8-2004-ம் அன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த விருதை   நான் கணிப்பொறிக்கல்விக்கான தேசிய விருதை( சீல்டு மற்றும் ரூ.1,50,000)  அவர் கையால் பெறும்போதுஅப்போது உடன் இருந்த மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் திரு.தயா நிதி மாறன் அவரிடம்  ஜெய்வாபாய் நம்ம  தமிழ் நாட்டு பள்ளிக்கூடம் எனக்கூறியபோதுஎனக்கு ஜெய்வாபாய்பள்ளி பற்றி நன்றாகவே தெரியும் எனக்கூறியதைக்கேட்டதும் அமைச்சர் அசந்துவிட்டார்..இந்தக்காட்சி இன்றும் என்னுடைய மனக்கண்ணால் காணமுடிகிறது.

          2005-ம் ஆண்டில் பல மாணவிகள் என்னிடம் , எங்களுக்கு ஜனாதிபதி அவர்களுடன் பேசவேண்டும், பார்க்கவேண்டும் என்று ஆவலாக உள்ளது. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். நானும் தலைமையாசிரியை அவர்களுடன் கலந்து, மாணவிகள் இப்படி கேட்கின்றனர். அவரை நிறைய மாணவிகள் சந்திக்கவேண்டும் என்றால் டெல்லிதான் செல்லவேண்டும். காலாண்டு விடுமுறையில் கல்விச்சுற்றுலாவிற்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களை வட நாட்டிற்கு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வது போல நமது நகராட்சிப்பள்ளி மாணவிகளும்  டெல்லி சென்றால் ஒரு வேளை மாணவிகளின் ஆசையை நிறைவேற்றலாம் எனக்கூறினேன்.  பல ஆசிரியைகள், தமிழ் நாட்டிற்குள் கல்விச்சுற்றுலா செல்வதற்கே நமது மாணவிகளுக்கு பொருளாதாரம் இடம் தராதபோது, டெல்லிக்கு சுற்றுலாவிற்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்றார்கள். ஆறாயிரம் மாணவிகளில் 10 முதல் 12-ம் வகுப்புவரையுள்ள 2000-ம் மாணவிகளுக்கு அழைப்பு விடுப்போம். சுமார் 40 மாணவிகள் வந்தால்கூடப்போதும் டெல்லி செல்லலாம் என முடிவெடுத்து அழைப்பு விடுத்ததில் 110 மாணவிகள் ரூ.3000-ம் செலுத்தி டெல்லி சுற்றுலாவிற்கு பெயர் கொடுத்து பள்ளி நிர்வாகத்தை ஆச்சரியப்படுத்தினார்கள்.
      அதில் பூங்கொடி என்ற மாணவி திருப்பூர் அருகில் உள்ள இடுவம்பாளையம் கிராமத்தில் இருந்து வருகிறார். ஏழ்மையான குடும்பம். இந்த மாணவிக்கு அவருடைய அம்மா, தனது காது கடுக்கண்களை அடமானம் வைத்து பணம் செலுத்தியதை கேள்விப்பட்டு, அவரை அழைத்து பணத்தை திருப்பிக்கொடுக்க முயன்றபோது, அந்த தாய்.. சார் நான் இந்த  நகையை காதில் போடுவதை விட  எனது மகள் ஜனாதிபதி மாளிகையில் அவரை சந்தித்தாலே போதும்.. எனது மகளின் கனவே அதுதான்.. நான் எனது மகளின் கனவை நிறைவேற்றத்தான்  நகையை அடமானம் வைத்துள்ளேன். எனது மகளை டெல்லி கூட்டி சென்று அவரை காணவையுங்கள் என்று கண்ணீர்மல்க கூறியதைக்கேட்ட போதுதான் மாணவிகள் மட்டுமல்ல படிக்காத தாய்மார்கள் கூட அவர்மீது எப்படி அன்பு வைத்துள்ளனர் என்பதைக்காணமுடிந்தது. ஜனாதிபதி அவர்களுக்கு ஜெய்வாபாய் பள்ளியில் இருந்து 110 மாணவிகள்,13 ஆசிரிய ஆசிரியைகள் செப்டம்பர் மாதம் 26-,27,28-ம் தேதிகளில் டெல்லிக்கு கல்விச்சுற்றுலா வரும்போது, தங்களைக்காணவேண்டும் என்று செப்டம்பர் மாத துவக்கத்தில் கடிதம் எழுதியிருந்தோம். டெல்லியில் அவரைக்காண்பதற்கு பிரத்தியேகமாக அவருடைய புகைப்படத்தை பனியனில் பிரிண்ட்செய்து அவருக்குப்பிடித்தமான திருக்குறளையும் அதில் அச்சடித்திருந்தோம். அவருக்கு பள்ளியின் சார்பாக தருவதற்கு 6000-ம் மாணவிகளின் மத்தியில் அவருடைய புகைப்படத்தை வைத்து அதற்கு செயற்கை கற்களைக்கொண்டு அலங்காரம் செய்து, பிரேம் போட்டும், அவரைப்பற்றிய கவிதையையும் கொண்டுசெல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
          டெல்லியில் எங்களது சுற்றுலாவின் கடைசி நாளான 28-9-2005 அன்று மதியம் வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து எந்த செய்தியும் வராத காரணத்தால் மாணவிகள் சோகமாக இருந்தனர்.  சுமார் இரண்டுமணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து எங்களுக்கு மாலை 4 மணிக்கு மாணவிகளை ஜனாதிபதி அவர்கள் சந்திப்பதாக செய்தி வந்தது. மாணவிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுமார் மாலை மூன்று மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் 11-ம் எண் நுழைவாயில் வழியாக அந்த பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகைக்குள் இரண்டு பேருந்துகளில் சென்றடைந்தோம்.  ஜனாதிபதி மாளிகையின் விருந்தினர் வரவேற்பு அறையில் உள்ளே சென்றவுடன் அந்த அறையில் இருந்த சித்திரங்களும், அலங்கார விளக்குகளையும் கண்டு மாணவிகள் ஜனாதிபதி மாளிகைக்குள்தான் இருக்கிறோமா இல்ல கனவா என ஒரு சிலர் நினைத்து தங்களை கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். வரவேற்பு அறையில் இசைக்கலைஞர்கள் மெல்லிய இசையை இசைத்து எங்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். முதலில் எங்களை சிற்றுண்டி அருந்தவைத்தனர். பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில்  110மாணவிகளும் 13 ஆசிரியைகளும் அமரவைக்கப்பட்டனர்.

         ஜனாதிபதி அவர்களை அறைக்குள் வரவேற்க  அறையின் வாசலில் நானும், வயதில் சிறிய கவிதா என்ற மாணவியும் நிறுத்திவைக்கப்பட்டோம். சரியாக 4 மணிக்கு  நாங்கள் இருந்த அறைக்குள் வந்தார். நாங்கள் வரவேற்றோம். தமிழகத்தில் இருந்து வந்துள்ள 110 நகராட்சிப்பள்ளி மாணவிகளைக்கண்டவுடன் அவர் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. மாணவிகளிடம் சென்றவர் அனைவரையும் பார்த்து சிற்றுண்டி சாப்பிட்டீர்களா என்றார்! சாப்பிட்டோம் என மாணவிகள் கூறினர் என்ன சாப்பிட்டீர்கள் என்றார்..மாணவிகள் எங்களுக்குஜிலேபியும்இட்லி,வடையுடன் விருந்து கொடுத்துள்ளீர்கள் எனக்கூறியவுடன் தான் நம்பினார் போலத்தெரிந்தது.  முக்கால் மணி நேரம் மாணவிகளுடன் அறிவியல் பற்றியும்,  நமது குறிக்கோளையடைய ஏன் கனவு காணவேண்டும் என்பது பற்றி  உரையாடினார்கேள்விகள் கேட்பார்.. ஒரு மாணவியைப்பார்த்து நீ சொல் என்பார்.. இப்படி கேள்விகள் கேட்டு மாணவிகளின் அறிவுத்திறன் எப்படி இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டார். கடைசியாக அவர்  மாணவிகளிடம்
 ”, நீங்கள் திருப்பூரில் இருந்து வந்துள்ளீர்கள்.. வேலை தேடுபவர்களாக இருக்காதீர்கள்வேலை தருபவர்களாக மாறுங்கள் ” என்ற சொற்கள்
      இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறதுபின் ஆசிரியைகளுடன் தனியாக புகைப்படம் எடுக்கலாம் எனக்கூறி தோட்டத்தில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைவிட நாங்கள் அவரை சந்தித்தையும், கவிதை வாசித்ததையும் நினைவு கூர்ந்து தலைமை ஆசிரியைக்கு கடிதம் எழுதி நன்றி கூறியது வியப்பிற்குரியது.. இந்தியாவின் முதல் குடிமகன் ஒரு பள்ளியின் தலைமையாசிரியைக்கு கடிதம் எழுதியது சரித்திர பொக்கிசமாகும்.
    
   அப்துல் கலாம் அவர்களின் தன்னம்பிக்கை உரையான கனவு கானுங்கள் தன்னம்பிக்கைதான் எங்களுக்கு உற்சாகமூட்டி வழி நடத்தும்பாதையாக இருக்கிறது. 2003-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியில் ஆடிட்டோரியம் இல்லாத காரணத்தால் அவர் எங்கள் பள்ளிக்கு வரமுடியாத சூல் நிலைமை ஏற்பட்டது.அன்றில் இருந்து ஆடிட்டோரியம் கட்ட கண்ட கனவை 2010-ல் நிறைவேற்றியுள்ளோம். இதைத்தகர்க்கும் விதமாக தற்போது 7000-ம் மாணவிகள் அமரக்கூடிய பிரம்மாண்டமான கலையரங்கத்தை கட்டியுள்ளோம்.. அது போலவே இப்பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தில் ஆக்கிரமித்து இருந்த தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியினரை வெளியேற்றி சுப்ரீம் கோர்ட்வரை சென்று பள்ளி இடத்தை 15-5-2015-ல் மீட்டுள்ளோம்.
      எங்களின் ஆதர்ச கனவு நாயகருக்கு 2005 -ம் ஆண்டில் இருந்து அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதியரசு இவரின் பிறந்த தினத்தை உலக மாணவர் தினமாக கொண்டாட ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் மாணவிகள் சார்பான வேண்டுகோளாகும்.
.ஜெய்வாபாய்ஈசுவரன். திருப்பூர் 15-10-2017.

-- No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...