Monday, January 8, 2018

ராணி ரூபா தேவி..
RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH.               ராணி ரூபா  தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெயரில் அகமதாபாத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் அடால்ஜ் என்ற கிராமத்தில்  உள்ள ஸ்டெப் வெல்லிற்குத்தான் ராணி ரூபாதேவி என அழைக்கப்படும் ஐந்தடுக்கு கொண்ட பிரம்மாண்டமான கிணறு  ஆகும்.           
               கிணறு என்றால்  நம்ம ஊர்களில் இருக்குமே வட்டமாகவோ அல்லது செவ்வகவடிவத்திலோ சிறியதாக இருக்குமே அப்படியல்ல..! பொதுவாக குஜராத் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மழையளவு குறைவாக இருப்பதால் சுமார் ஐந்தாம் நூற்றாண்டு முதல் இப்பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மழை நீரை முழுமையாக சேமிக்கவும், வழிப்போக்கர்களுக்கு தண்ணீர் தாகம் தீர்ப்பதற்காகவும் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் 300 அடி நீளம் 50 அடி அகலத்திற்கும் நூறு அடி ஆழத்திற்கும் குறையாமல் பூமிக்கடியில் ஸ்டெப் வெல் என்பதை விட ஸ்டெப்பாண்ட்(குளம்) என்று கூறத்தக்க வகையில் பிரம்மாண்டமான அளவில் அன்றைய  கட்டடக்கலையை பறை சாற்றும் விதமாகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் நிலத்திற்கடியில் ஐந்து அல்லது ஏழு அடுக்குகள் கொண்ட மாளிகை போன்ற வடிவில்  அமைக்கப்படும் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டுகளாக இந்த ஸ்டெப்வெல்கள் உள்ளன.
           25 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து 30 குழந்தைகள், 12 அறிவியல் இயக்க நண்பர்களுடன் நானும்  டிசம்பர் 25 முதல்   குஜராத் மா நிலத்தில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மா நாட்டில் கலந்துகொண்டேன்.அகமதாபாத் வந்ததே மா நாட்டில் கலந்து கொள்வது ஒரு நோக்கமாக இருந்தாலும், இரண்டு மாதம் முன்பு யூ ட்யூப்பில் பார்த்த குஜராத்தில் உள்ள சூரியக்கோவிலையும், அதன் அருகில் உள்ள ஸ்டெப்வெல்லைப் பார்ப்பதும் ஒரு நோக்கமாக இருந்தது.  மேலும் அகமதாபாத் அருகில் வதேராவில்(பரோடா)வசிக்கும் எனது  மனைவியின் தங்கை மகனையும் மருமகளையும் பேரனையும் பார்க்கலாம் என்ற ஆசையும் இருந்தது. இதனால் 30-12-2017 அன்று காலையில்  வதேரா போனேன். அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு( 31-12-2017) நானும், எனது மகன் (சகலன் மகன்)அருண்குமார், மருமகள் திவ்யாவுடன் 200 கி.மீ தூரம் உள்ள அகமதாபாத் வந்து, அங்கிருந்து  130 கி.மீ. தூரத்தில் பட்டான் மாவட்டத்தில் மொதாரோ என்ற இடத்தில் உள்ள ராணி கட்டிய ஸ்டெப்வெல் பார்த்து பிரமித்துப்போனேன். அப்போது, ”பெரியப்பா அகமதாபாத்திலும் இப்படியொன்று உள்ளது.. அது இதைவிட நன்றாக இருக்கும் என்றார்” அப்படியா அதையும் பார்க்கலாம்  சரி.போகும் வழி தானே நினைத்து, அங்கும் போகலாம் என்று தான்.. அகமதாபாத் நகரை ஒட்டியுள்ள அடால்ஜ் என்ற கிராமப்பகுதிக்கு வந்தோம். 
 
                இந்த கிராமத்திற்குள் வரும் வழியில் மாடுகள், எருமைகள், சாணிக்குப்பைகள் என இருந்தன.. குப்பைகளை எரித்துக்கொண்டும் இருந்தார்கள்க..இந்த கிராமம் போன்ற இடத்தில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகிறது என நினைத்துக்கொண்டு  ஒரு திறந்திருந்த  கேட்டினுள் சென்றோம்.உள்ளே நான் எதிர்பார்க்காத அளவில் எக்கச்சக்கமான மக்கள் கூட்டம் .. உள்ளே பார்த்தால் பிரம்மாண்டமான ஸ்டெப்வெல்..தரையில் இருந்து ஐந்து அடுக்குகளில் பூமிக்குக்கீழே பிரம்மாண்டமான தூண்களுடன்....என் கண் முன்னே விரிந்தது..பூமிக்குக்கீழே..
..அடடா.. என்னே கட்டுமானம்.. உள்ளே மொதேரா என்ற இடத்தில் உள்ள ஸ்டெப்வெல்லில் இந்துக்கடவுள்கள் முழுவதும் செதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கு அப்படி இந்துக்கடவுள்களின் சிலைகள் இல்லை.. ஆனால் அதே கட்டடக்கலையுடன், இஸ்லாமிய கட்டடக்கலையும் சேர்ந்து வடிவமைக்கப்பட்டிருந்தது.. பிரம்மாண்டமான கலை நயம்.. வேறு வகையான ஆபரணங்களை கல்லிலே வடித்திருந்தார்கள்.. பிரமித்துப்போய்விட்டேன்.. அதுவும் அந்த உப்பரிகை.. இதைப்பார்ப்பவர்கள் அதில் உட்கார்ந்து போட்டோ எடுக்காமல் இருக்கமாட்டார்கள்..


               ஒவ்வொரு மாடத்தில் இருந்தும் கிணற்றுக்கு போகும் வழிகள்.. கிணற்றில் தெளிவான நீர்..  நீர் மட்டம் உயர உயர அடுத்தமாடத்திற்கு நீர் வந்துவிடும். அந்த கிணற்றுக்குள் நம் மக்கள் காசு போடுகிறார்கள்.

.          கிணற்றினுள் குளிர்சாதன வசதி செய்துள்ளது போன்ற குளிர்ச்சி..மொதேரா கிணறு முழுவதும் ஓபனாக இருக்க இந்த கிணறில் மேலே இரும்பு கம்பிவலை அமைத்துள்ளார்கள்.. அதன் மேல் நடக்கலாம்.. அப்படி ஒரு இடத்தில் முஸ்லீம்கள் சமாதி போல ஐந்து இருந்தன. ஒரு வேளை இதனை முஸ்லீம் அரசர் கட்டியிருப்பார் என நினைத்துக்கொண்டோம்.. பின் அதன் அருகில் மேலும் ஒரு சமாதி.. அது மிகச்சிறப்பான வேலைப்பாட்டுடன் இருந்தது.அதன் அருகில் கூட போட்டோ எடுத்துக்கொண்டோம்..அதன் பின் தான் இதன் வரலாற்றைத்தேடினேன்.. இந்த வரலாற்றைப்படித்தபோது.. எனக்கு சமீபத்தில் சர்ச்சைக்கு ஆளான பத்மாவதி என்கிற சித்தூர் ராணி்தன் கணவனை அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து காப்பாற்ற , தான் நேரில் பல்லக்கில் வந்து கில்ஜியை காண்பதாகக்கூறிவிட்டு, பல்லக்கில் மிகச்சிறந்த 500 வீரர்களுடன் சென்று கில்ஜியுடன் போரிட்டு,தன் கணவனை மீட்டு வந்தது போல( தந்திரம் போல).. இந்த ராணி ரூபாதேவியும் .. தன் கணவரின் ஆசையை நிறைவேற்ற தந்திரம் செய்த வரலாறு..கி.பி. 1498-ம் ஆண்டு இந்தப்பகுதியில் வகேலா வம்சத்தை சேர்ந்த ராணா வீர் சிங் அரசாண்டு வருகிறார்.. இவருடைய அழகான மனைவியின் பெயர் ராணி ரூபா தேவி.. இவர் தன் நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமில்லாமல் இந்த வழியாக செல்லும் யாத்ரீகர்கள், வியாபாரிகள் தங்கி ஓய்வெடுக்கவும் இந்த பிரம்மாண்டமான ஸ்டெப்வெல்லை கட்ட ஆரம்பிக்கிறார்.

                 மிகவும் அழகான சிற்ப அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட மாடம்!


.           இந்தச்சமயத்தில் இந்த ராஜாவின் தேசத்திற்கருகில் உள்ள குஜராத்தின் முஸ்லீம் அரசர் மொகமத் பெக்டா(BEGDA) சுல்தான், ராணா வீர் சிங்குடன் நாடு பிடிக்கும் போரில் ஈடுபடுகிறார். இந்த போரில் ரானா வீர் சிங் இறந்துவிடுகிறார்.. நாடு முஸ்லீம் அரசனின் கைக்கு வந்துவிடுகிறது.. ராணி ரூபா தேவி கணவன் இறந்த துக்கத்தில் மனச்சோர்வுடன் இருக்கிறார். அப்போது அரண்மனைக்கு வந்த முஸ்லீம் மன்னன் மொகமது ராணியைப்பார்த்து, ராணியின் அழகில் மயங்கிவிடுகிறான். ராணியை திருமணம் செய்து கொள்ள விரும்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராணியிடம் வேண்டுகிறான்.
            . ராணி ரூபாவதி தனது கணவர் கட்ட ஆரம்பித்த ஸ்டெப் வெல் பாதியில் நின்றுவிட்டதே.. தனது கணவனின் கனவான ஸ்டெப்வெல்லை கட்டவேண்டுமே என்ன செய்வது என கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது.......


முஸ்லீம் மன்னனிடம் இருந்து மறுமணம் செய்திடவேண்டுமென கோரிக்கை வருகிறது.. ரூபா தேவி யோசித்து முடிவு சொல்கிறேன் என்கிறார்.. அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.. சுல்தானை திருமணம் செய்திட சம்மதம் எனப்பொய்கூறி,தனது கணவரின் கனவை நிறைவேற்றிவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்ளலாம் என ஒரு தந்திரமான திட்டம் தீட்டுகிறார்.
          13-14 ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் ராணி பத்மினி, அலாவுதீன் கில்ஜியால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்து  கணவனை மீட்க விரும்புகிறார். அலாவுதீன் கில்ஜியை தான் பல்லக்கில் 50 சேடிகளுடன் பார்க்க வருவதாகக்கூறி, சேடிகளுக்குப்பதிலாக 500 வீரர்களுடன் சென்று கில்ஜியின் முகாமில் அடைக்கப்பட்டிருந்த தன் கணவனை மீட்க செய்த தந்திரம் போலவே ராணி ரூபாவதியும் தந்திரம் செய்கிறார்
     
                       பின் தனக்கு  அரசனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று கூறி தான் ஏற்கனவே மனதிற்குள் வைத்திருந்த திட்டத்தினை நிறைவேற்றும் பொருட்டு திருமணத்திற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். ராணி ரூபா தேவியை திருமணம் செய்ய எதுவேண்டுமானாலும் செய்திட தயாராக இருந்த சுல்தான், நிபந்தனை என்ன என்கிறார்?.
அது என்ன நிபந்தனை என்றால்..

தன் கணவர் கட்ட ஆரம்பித்து பாதியில் நின்று போன ஸ்டெப்வெல்லை அவரின் ஆசைப்படி கட்டி நிறைவேற்றினால் .. முஸ்லீம் அரசனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன் என்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் அரசன் .. ஏற்கனவேயுள்ள இந்தியக்கட்டடக்கலையுடன் ,இஸ்லாமிய கட்டடக்கலையையும் சேர்த்து கட்ட ஆரம்பிக்கிறார்.. 1499-ம் ஆண்டிற்குள் அதாவது ஒரே ஆண்டில் ராணி ரூபாதேவியின் கோரிக்கியினை நிறைவேற்றுகிறான். இதற்காக அந்த முஸ்லீம் அரசன் மொகமது பெக்தா சுல்தான் செய்த செலவு 5,00,111 தினார் அல்லது ரூ 5 லட்சத்திற்கும் மேல் என்றால் இன்றைய மதிப்பை போட்டு பாருங்கள்..அதாவது 517 வருடம் முன்பு..ரூபாய் ஐந்து லட்சம் என்றால் தற்போதைய மதிப்பை கணக்கு   கூடப்போடமுடியாது..
       ராணியின் விருப்பப்படி ஸ்டெப்வெல்லை கட்டுகிறான்.. தண்ணீர் நிரம்பி வளிகிறது. அழகான பிரம்மாண்டமான பூமிக்கடியில் ஐந்தடுக்கு கிணறு... ராணி ரூபா தேவியிடம் சென்று, ராணியின் விருப்பப்படி தான் ஸ்டெப்வெல்லை கட்டிவிட்டதாகவும் அதனை பார்க்க ராணியை அழைக்கிறான். ராணியும் அவனுடன் கிணற்றைப்பார்க்க வருகிறார்.

                  


                     கிணற்றினைப்பார்வையிடும் போது, ராணி ஏற்கனவே கூறியிருந்த உறுதிமொழியை ஞாபகப்படுத்தி, திருமணம் செய்து கொள்ளச்சொல்கிறான்.! என்ன நடந்திருக்கும்.! கற்புக்கரசியான ராணி ரூபாவதி அந்த முஸ்லீம் மன்னன் முன்னிலையிலேயே 100 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி வழிந்துகொண்டிருந்த கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்... அதர்ச்சியில் சுல்தான் செய்வதறியாது நிற்கிறான்..!
                  தன் கணவனின் ஆசையை நிறைவேற்றவே ராணி ரூபாவதி ஒரு வருடம் முன்பு தன்னிடம் தவறான உறுதிமொழியை தந்திரமாகக்கூறியுள்ளார் என்பதையும், இந்தியப்பெண்கள் தங்கள் கணவனின் இறப்புக்குப்பின் ஒன்று தீக்குளிப்பார்கள் அல்லது விதவையாகக்கூட வாழ்வார்களேயொழிய, எப்பேர்ப்பட்ட அரசனாக இருந்தாலும் மறுமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்பதை அறிகிறான்.

       தன்னை ஏமாற்றிய ராணி ரூபாவதி மீது கோபம் கொண்டு கிணற்றையே அழித்திருக்கலாம்.. ஆனால் ராணி ரூபாவதியின் அழகு, அவரின் கற்புத்தன்மை மீது மதிப்பு கொண்ட முஸ்லீம் அரசன் அந்தக்கிணற்றுக்கு ராணி ரூபாவதியின் பெயரையே வைக்கிறான்... ராணி மீது அவன் கொண்ட காதல் வேறு தளத்திற்கு அவனை கொண்டு செல்கிறது..!அது என்ன தெரியுமா..?
இத்தனை பிரம்மாண்டமான அழகிய வேலைப்பாடு மிக்க கிணற்றினை வடிவமைத்து கட்டிய முக்கியமான ஆறு கட்டடக்கலைஞர்களையும் கூப்பிட்டு பாராட்டுகிறான்.. இதே போல வேறு கட்ட முடியுமா எனக்கேட்கிறான்.. அவர்களும் மகிழ்ச்சியாக கட்ட முடியும் மன்னா எனக்கூறுகிறார்கள்..
         
அவ்வளவுதான் அந்த ஆறுபேரையும் அங்கேயே சமாதியாக்கி அந்தக்கிணற்றின் அருகிலேயே புதைத்துவிடுகிறான்..ராணி ரூபாவதியின் கிணறு போல இன்னொன்று உருவாக மொகமத்பெக்டா விரும்பவில்லை..என்பதையும், ராணி மீது அவன் கொண்ட காதலையும் அன்பையும் இது வெளிப்படுத்துகிறது..

      இந்த இடம் அகமதாபாத்தில் இருந்து 17 கி.மீ தூரத்திலும், காந்தி நகரில் இருந்து 5 கி.மீ தூரத்திலும் உள்ளது. அனுமதிக்கும் நேரம் காலை 8 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே..
No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...