தீபாவளி பிறந்த கதை..
தீபாவளி பிறந்த கதை!
இந்துக்கள் மத்தியில் பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளியை
முன்னிட்டுத்தான் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு போனஸ் என்பது வழங்கப்படுகிறது.
அனைத்து மதம், ஜாதிகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவதால்( குறைந்த
பட்சமாக ஒரு மாத சம்பளம் முதல் குஜராத்தில் ஒரு வைர வியாபாரி தன் அலுவலகத்தில்
பணிபுரியும் 800 தொழிலாளர்களுக்கு கார் வழங்கியுள்ளார் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன்..) இது மதங்களைக்கடந்து அனைவராலும் வரவேற்கப்படும் ஒரு
இந்துக்கள் பண்டிகையாக மட்டும் இதனை பார்க்கக்கூடாது. ஏனென்றால் தீபாவளி என்பது
இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல! சொல்லப்போனால் இந்துமதத்தினர்
சுவீகரித்துக்கொண்ட பண்டிகை என்றும் கூறலாம்..!
பீஹாரில் பவாபுரி என்ற ஊர்..கி.மு. 599 ..
அக்டோபர் மாதம் 14-ம் நாள்..அமாவாசைக்கு முந்திய இரவு.. ஒரு 72 வயது ஆடைகளற்ற ஒரு
மகான் ஊர் மக்களிடையே அகிம்சை, திருடாமை, வாய்மை போன்ற தத்துவங்களை
கூறிக்கொண்டிருக்கிறார். ஊர் தலைவர் உட்பட மொத்த ஊர் மக்களும் விடிய விடிய அவருடைய
உரையினைக்கேட்ட வண்ணமே இருக்கின்றனர். உரையாற்றிய மகான் அப்படியே தன் கடைசி மூச்சினை
நிறுத்தி முக்தியடைகிறார்.. மகான் முக்தியடைந்ததைப்பார்த்த ஊர்த்தலைவர் உட்பட
மக்கள் அனைவரும் துக்கமடைகிறார்கள்..அந்த விடியக்காலையில் அவருடைய உடலை நல்லடக்கம்
செய்துவிட்டு, அனைவரும் வீட்டிற்குச்சென்று குளித்துவிட்டு, வேறு புதிய ஆடைகள்
அணிகின்றனர். அந்த மகான் சமண மதத்தின் 24 ஆவது தீர்த்தங்கரான மகாவீர
வர்த்தமானர்தான் அவர்.
கி.மு. 527-ம் ஆண்டு பீஹாரில் உள்ள
வைசாலி என்ற சிறு அரசரான சித்தார்த்தன்-திரிசாலா என்ற இருவருக்கும் மகனாக ஏப்ரல்
மாதம் 12-ம் நாள் பிறந்தார். இவருடைய மனைவி யசோதா.. தனது 30 ஆவது வயதில்
அன்றிருந்த வேதமதத்தின் உயிர்ப்பலி, யாகம், வர்ணபேதம் போன்றவற்றினால் வெறுப்பு
கொண்டவர் வேறு வழியில் நாட்டம் கொண்டு துறவறம் மேற்கொண்டார். 12 ஆண்டுகள்
துறவறத்திற்குப்பின் வட இந்தியா முழுவதும் உள்ள ஊர்களுக்கு சென்று தான்
கண்டுணர்ந்த அகிம்சை, புலால் உண்ணாமை, திருடாமை, வாய்மை போன்றவற்றை மக்களிடையே
பரப்ப துவங்கினார். பல மன்னர்கள் இவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இவரை
பின்பற்றினர். வட இந்தியாவில் சமணம் செழித்தோங்கியது.
மெளரிய வம்சத்தை தோற்றுவித்த
சந்திரகுப்த மெளரியர் தன் கடைசிகாலத்தில் அரசாட்சியை தன் மகனான பிந்துசாரனிடம்
கொடுத்துவிட்டு, சமண மதத்தில் சேர்ந்து துறவறம் பூண்டு கர்னாடகாவில் உள்ள
சிரவணபெல்லாவில் துறவியாக வாழ்ந்து அங்கேயே காலமானார் என்பதை நாம் அறிவோம்.. இதன்
பின் தான் தமிழகத்தில் சமண மதம் பரவத்துவங்கியது. தமிழிலில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில்
சீவக சிந்தாமணி, நாலடியார் போன்றவைகள் சமண மத காப்பியங்களாகும்..
சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர்
பவாபுரியில் மோட்சம் அடைந்த நன்னாளாக ஐப்பசி மாத அமாவாசை கருதப்படுகிறது. சமண மதத்தின் வழிகாட்டிகளாக தீர்த்தங்கரர்கள் கருதப்படுகிறார்கள். அவர்களில் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர். இவரது பரிநிர்வாண மோட்ச தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவது ஜைனர்களின் மரபு.. இதற்கு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்ய பத்ரபாகு எழுதிய ‘கல்பசூத்ரா’ என்ற நூல் ஆதாரமாகும்.முதன்முதலாக இலக்கியத்தில் காணப்படும் ‘தீபாவளி’ என்ற சொற்பிரயோகமும், சமண இலக்கியமான ஹரிவம்ச புராணத்தில் காணப்படும் ‘தீபாளி கயா’ என்பதே. இந்தச் சொல்லின் பொருள், ‘உடலிலிருந்து ஒளி விடைபெறுவது’ என்பதாகும். இதையே ஜைனர்கள் ‘தீபாலிகா’ என்று தீபங்களேற்றிக் கொண்டாடுகின்றனர்.
.சமணமதத்தை தொடர்ந்து வந்த
புத்தமதமும் அசோகர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவியது.. புத்தமதத்திலும்
அகிம்சை, யாகம், பலிகொடுத்தல் போன்றவற்றிற்கு எதிராக இருந்தது. புத்தமதம் அன்பை
போதித்தது.. வருண பேதத்தையும், ஜாதிப்பிரிவினைகளையும் , கடவுளர்களையும் புத்தமதம்
ஏற்றுக்கொள்ளவில்லை.,,புத்த மதத்தினர்களும் , அசோகர் புத்தமதத்தில் இணைந்த நாளினை
தீபாவளியாக கொண்டாடினார்கள்..
அசோகருக்குப்பின் ஆட்சிக்கு வந்த
புஷ்யமித்திரசுங்கிரர்கள் ஆட்சியில்
வேதமதமான இந்து மதம் மீண்டும் எழுச்சி பெற்றது. வேதமதத்தில் இருந்த
பலிகொடுத்தல் போன்றவைகளை களைந்து புத்த சமண மத கருத்துக்கள் போல புலால் உண்ணாமை
துறவறத்திற்கு எதிரான கருத்தை மக்களிடம் பரப்ப கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள்
போன்றவைகள் உருவாக்கப்பட்டன.. அதே போல சமண மதத்தில் இருந்தது போன்ற தீபாவளி
பண்டிகைகள் அதே நாளில் கொண்டாடப்பட்டன.. இதற்காக புராணங்க்களில் இருந்த கதைகளின்
படி தீபாவளிக்கான கதைகள் உருவாக்கப்பட்டன.
வட இந்தியாவில் இராமாயணத்தில் இருந்து
தீபாவளிக்கான கருத்து உருவாக்கப்பட்டது. அயோத்தியை ஆண்டு வந்த தசரதனின் குமாரன் இராமராகும். இவர் மகாவிஷ்ணுவின் மனித அவதாரம். இவரும், இவர் மனைவியான சீதையும், தம்பி இலக்குவனும் சித்தியின் சதியால் 14 வருடகாலம் வனவாசம் செல்லவேண்டியதாக இருக்கிறது. வனவாசத்தின் போது, இராவணன் என்ற அசுரன் சீதையை கடத்திக்கொண்டுபோய் விடுகிறான். இராமர் அனுமன் உதவியுடன் அசுரணான இராவணுடன் போரிட்டு சீதையை மீட்கிறார். பின் தன் 14 வருட வனவாசம் முடிந்து அரசனாக முடிசூட அயோத்திக்கு வருகிறார். இதையறிந்த அயோத்தி நகர மக்கள்
அனைவரும் இராமபிரானை வரவேற்க தங்கள் வீடுகளின் முன் தீப ஒளியான விளக்கை ஏற்றி
வரவேற்கின்றனர். அயோத்தி முழுவதும் எங்கு பார்த்தாலும் தீப ஒளி இராமர், சீதை,
லட்சுமணன் , என மூவரையும் வரவேற்று மக்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.. இந்த
நிகழ்வையே தீபாவளி நாளாக வட இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.
. விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்த பவுமன் பெரியவனாகி அரசனாகிறான். இவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்து பிரம்மாவிடம் இருந்து ஒரு வரம் பெறுகிறான். அது என்னவென்றால் , தனக்கு பெற்ற தாயைத்தவிர பிறர் யாராலும் மரணம் வரக்கூடாது என்பதுதான். இந்த பவுமன் பின் நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிராக அசுரத்தனமான கொடுமைகள் செய்ததால், நரகாசுரன் என மக்கள் அழைக்கிறார்கள்.
கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக அவதரிக்கிறார். கிருஷ்ணரை மணந்து கொள்கிறார். மனித அவதாரத்தில் இருந்த சத்யபாமாவிற்கு நரகாசுரன் தன் மகன் என்பது தெரியாது. நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்ததை அறிந்த கிருஷ்ணர் அவனை வதம் செய்யும் நேரம் வந்துவிட்டதை அறிந்து நரகாசுரனுடன் போரிட புறப்பட்டார். தேரோட்டுவதிலும், விற்போர், வாட்போரில் சிறந்து விளங்கிய தன் மனைவியான சத்தியபாமாவையும் உடன் அழைத்துச்சென்றார். சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு தேரோட்டியாக செல்கிறார்.
கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் போர் மூளுகிறது. தன் தாயைத்தவிர வேறு யாராலும் மரணமில்லை என்ற வரம் காரணமாக கிருஷ்ணரால் நரகாசுரசனை வெல்ல முடியாமல் தவிக்கிறார். அப்போது நரகாசுரன் வாங்கியுள்ள வரத்தை அறியும் கிருஷ்ணர் தான் அடிபட்டு வீழ்ந்தது போல வீழ்கிறார். இதனை தேரோட்டிக்கொண்டிருந்த சத்தியபாமா பார்த்து தன் கணவனைக்காப்பாற்ற, நரகாசுரனுடன் போர் புரிகிறார். சத்தியபாமாவின் ஆக்ரோசமான போரினால் நரகாசுரன் பனைமரம் வீழ்ந்தது போல மண்ணில் சாய்கிறான். அப்போது சத்தியபாமாதான் தன் தாய் என்றுணர்ந்த நரகாசுரன் அம்மா என அழைத்து உயிர்விடும்போது, தான் மக்களை கொடும் துயருக்கு ஆளாக்கிவிட்டதால் மக்கள் தன்னை மறக்காமல் இருக்க தான் உயிர்விடும் இந்த நாளினை தீப ஒளி ஏற்றி கொண்டாடவேண்டும் எனக்கூறி தன் தாயின் முன் உயிர் விடுகிறான். அப்போதுதான் நரகாசுரன் தன் மகன் என்றுணர்ந்த சத்தியபாமா, கிருஷ்ணரிடம் தனக்கு இப்படியொரு மகன் பிறந்திருக்கக்கூடாது, எனவே இவன் இறந்த இந்த நாளினை மக்கள் தீபம் ஏற்றி கொண்டாடவேண்டும் எனக்கூறுகிறார்.
இந்தக்கதைப்படிதான் தமிழ் நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இதுவே பெங்காலிலும், ஒரிசாவிலும்
வேறு இந்து மத புராணப்படி வேறு கதைகள் மூலம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியக்கலாச்சாரம்
பரவிய வெளி நாடுகளிலும் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment