மாங்கல்ய நோண்பு அல்லது ஆருத்திரா தரிசனம்

இன்று 9-01-2020 மாங்கல்ய நோண்பு..
கொங்கு மண்டலத்தில் உள்ள திருமணம் ஆன குடும்பப்பெண்கள் பெரும்பாலும், மார்கழி மாதம் பெளர்ணமியன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து இரவு சிவனுக்கும், பார்வதிக்கும் 7 வகையான பலகாரங்களுடன் பூஜை செய்து, கணவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். பின் தங்கள் கழுத்தில் ஏற்கனவேயுள்ள மஞ்சள் கயிற்றுக்குப்பதிலாக புதிய மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்வார்கள்..குறிப்பாக கணவன் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதற்காக மனைவிமார்கள் ஒரு நாள் விரதம் இருந்து, கணவருக்காக கடவுளை வேண்டும் ஒரு பண்டிகையாகும்.





இதன் புராணக்கதைகள் என்ன?
துரோதயா என்ற பெண் பார்வதியின் பக்தை. திருமணம் ஆன மூன்றாம் நாளே கணவன் இறந்துவிடுகிறார். உடனே பார்வதியை வேண்டுகிறார். பார்வதி சிவனைப்பார்க்கிறார். சிவனோ எமலோகத்தில் உள்ள எமனை முறைத்துப்பார்க்க, எமன் துரோதயாவின் கணவனை உயிரோடு திருப்பி தந்து விடுகிறார். அதிலிருந்து பெண்கள் மாங்கல்ய நோண்பு இருந்தால் கணவனுக்கு மரணமில்லை என நினைத்து கொண்டாடுகிறார்கள்.
அடுத்த புராணக்கதை, சாவித்திரி கதை. தன் கணவன் சத்யவானின் மரணத்தை எதிர்த்து, சாவித்திரி எமனுடன் விவாதம் செய்து தன் கணவனை மீட்டு வருகிறார். இதனாலும் பெண்கள் தங்கள் கணவனைக்காக்க விரதமிருந்து , திருவாதிரக்களி செய்து சாப்பிட்டு தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள்.
இதுவும் இன்னொரு புராணக்கதை...கொஞ்சம் பெரியது....
ஒரு சமயம் துர்வாசமுனிவர் தன் தவ வலிமையால் சிவபெருமானிடம் இருந்து யாருக்கும் கிடைத்தற்கரிய பார்ஜாத மலர்களால் ஆன மாலையைப்பெறுகிறார். மாலையின் அழகில் மெய்மறந்த துர்வாசமுனிவர், அதனை தான் அணிவதைவிட தேவலோகத்தில் உள்ள இந்திரன் அணிவதுதான் முறையென்று நினைத்து, தேவலோகம் செல்கிறார். அங்கு இந்திரன் தன் மனைவி இந்திரானியுடன் ஐராவதம் யானை மீது அமர்ந்து நகர்வலம் வந்து கொண்டிருப்பதை பார்த்து, இந்திரனிடம் சிவபெருமான் கொடுத்த மாலையை தருகிறார். துர்வாசமுனிவரை பார்த்தறியாத இந்திரன் அவர் கொடுத்த மாலையை அலட்சியமாக இடது கையில் வாங்கி அதனை தன் கழுத்தில் அணியாமல் தன் யானையின் கழுத்தில் போட்டுவிட்டான். ஐராவதம் யானையோ தன் தும்பிக்கையால் அந்த மாலையை தூக்கி கீழே போட்டு மிதித்து துவம்சம் செய்துவிட்டது.





இதனைப்பார்த்த துர்வாசமுனிவர் வெகு சினம் கொண்டார். உடனே தன், ஏய் இந்திரா.. என்னை யாரென்று நினைத்து இப்படிப்பட்ட ஈனக்காரியத்தை செய்தாய்.! தேவர்களுக்கெல்லாம் சாகாவரம் இருப்பதால் தான் இப்படி ஆணவமாக , அகங்காரமாக, ஈனத்தனமான முறையில் நடந்து கொண்டாய்.. எனவே இனி நீங்கள் எல்லோரும் மனிதர்கள் போலவே நரை விழுந்து,முதுகு கூனாகி சாகக்கடவீர்கள் எனச் சாபம் கொடுத்துவிட்டார்.
அவர் சாபம் கொடுத்தவுடன் இந்திரனும், இந்திராணியும் வயதானவர்களாக கருமுடி போய் வெண்முடியுடன் காணப்பட்டனர். உதேவலோகப்பேரழகிகாளான ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் கிழவிகளாக மாறிவிட்டார்கள்.தேவர்கள் அனைவருமே இப்படி வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். அப்போதுதான் இந்திரனுக்கு தன் ஆணவத்தால் தேவலோகமே இப்படி ஆகிவிட்டதே என அழுது புரண்டார். துர்வாசமுனிவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். துர்வாச முனிவரோ கறந்த பால் மடி புகாது என்பது போல என்னால் சாபத்தை நீக்க இயலாது எனக்கூறிவிட்டு பூலோகம் வந்துவிட்டார்.


தேவர்கள் பார்த்தார்கள்..உடனே கைலாயம் சென்று ஈசனிடம் காலில் விழுந்து தங்கள் சாபத்தை நீக்கச்சொன்னார்கள். ஈசுனும் இந்த சாபத்தை என்னால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. வைகுந்தம் சென்று பெருமாளிடமும் உதவி கேட்கச்சொன்னார். பெருமாள், தேவர்களிடம் மேரு மலையை மத்தாகக்கொண்டு, வாசுகி என்ற பாம்பினை கயிறாக மேருமலையில் கட்டி, திருப்பாற்கடலை அசுரர்களுடன் சேர்ந்து கடையுங்கள். கடலில் இருந்து அமிர்தம் கிடைக்கும். அதனை சாப்பிட்டீர்கள் என்றால் மீண்டும் நீங்கள் சாகாவரம் பெறுவீர்கள் எனக்கூறினார்.
உடனே தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து , மார்கழி மாதம் பெளர்ணமியன்று, சந்திரன் தன் மனைவியான திருவாதிரை நட்சத்திரத்தின் வீட்டில் இருந்த போது, மேரு மலையை தூக்கிவந்து திருப்பாற்கடலில் போட்டனர். பின் வாசுகி என்ற மிகப்பெரிய நீளமான பாம்பினை எடுத்து மேருமலையில் கட்டினர். பயந்தாங்கொள்ளிகளான தேவர்கள் பாம்பின் வாலைப்பிடித்துக்கொண்டனர். தைரிய சாலிகளான அசுரர்கள் வாசுகியின் தலையை பிடித்துக்கொண்டு தயிர் கடைவதைப்போல திருப்பாற்கடலை கடைந்தனர்

 இதனை சிவன், பார்வதி,விஷ்ணு என மூவரும் மேற்பார்வை செய்துகொண்டிருந்தனர். அசுரர்களின் பிடியின் வலி காரணமாக வாசுகி தன் கொடிய விஷத்தினை வாயில் இருந்து துப்பியது. இதனைப்பார்த்த சிவன், விஷம் கடலில் விழாதவண்ணம் ஒரு கிண்ணத்தில் பிடித்து தானே உட்கொண்டார். விஷத்தை உண்ட தன் கணவர் ஈசனை காப்பாற்ற பார்வதி தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணத்தை எடுத்து, ஈசனின் கழுத்தை நோக்கி வீசினார். அந்த ஆபரணம் ஈசனின் கழுத்தை இறுக சுற்றிக்கொண்டு, பாம்பின் விஷம் அவரின் உடலுக்குள் செல்லாதவண்ணம் தடுத்து நிறுத்திவிட்டது. பார்வதி சிவனின் அருகில் வந்து கழுத்தில் இருந்த தன் தங்க ஆபரணத்தை எடுத்து மீண்டும் அணிந்து கொண்டார். சிவனின் கழுத்தில் ஆபரணம் சுற்றியிருந்த கழுத்துப்பகுதி பாம்பின் விஷத்தால் நீலக்கலரில் இருந்தது. அன்று முதல் சிவனுக்கு, திரு நீலகண்டர் என்ற பெயரும் வழங்கலாயிற்று..பார்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலிதான், பார்வதியின் கணவரான சிவனைக்காப்பாற்றியது. பார்வதியும் அடுத்த ஆண்டில் இருந்து திருவாதிரை நட்சத்திரத்தில் தன் பழைய தங்கத்திலான சங்கிலியை எடுத்துவிட்டு புதிய சங்கிலியை அணிய ஆரம்பித்தார்.( இதற்குப்பின் அமிர்தம் கிடைத்ததும் அதை எப்படி தேவர்கள் அசுரர்களை ஏமாற்றி தாங்களே உண்டார்கள் என்பதும் தனிக்கதை)

இதனை கேள்விப்பட்ட இமாலயக்காடுகளில் வசித்த முனிபுங்கவர்கள் இந்த முறையை கடைபிடிக்க தங்கள் மனைவிகள் மூலம் , தங்களின் நலனுக்காக , அவர்களை விரதம் இருக்க வைத்து, தங்களின் ஆயுளை நீடித்துக்கொண்டனர். இது அப்படியே நாளடைவில் பூலோக பெண்களும் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று பெளர்ணமி தினத்தில் விரதம் இருந்து, புதிய தங்கச்சங்கிலி வாங்கமுடியாத காரணத்தால் , பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப்போல மஞ்சள் கயிற்றை அணிய ஆரம்பித்தனர். இதற்கு அடுத்த நாள் காலையில் அவரவர்கள் ஊரில் இருந்த சிவபெருமானின் ஆலயத்திற்குச்சென்று வணங்கும் வழக்கத்தை கைக்கொண்டார்கள். திருவாதிரை நட்சத்திரத்திற்கு வட மொழியில் ஆருத்திரா என்று பெயர். அதனால் தான் இதனை ஆருத்திரா தரிசனம் எங்கிறார்கள். மாங்கல்ய நோண்பு இப்படித்தான் புராணக்கதை வழியாக நம் ஊரில் வழிபடப்படுகிறது.
இந்தக்கதைகளில் மனைவிகள் தான் தங்கள் கணவர்களை காப்பாற்றுகிறார்கள்.உண்மையில் இந்த நோண்பை கணவர்கள் தான் விரதமிருந்து, தங்கள் மனைவியை வணங்கி பூஜிக்க வேண்டும். தங்கள் நன்றியை மனைவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாறாக , கதையை எழுதிய முனிவர்கள் தங்களின் ஆணாதிக்க மனப்பான்மையினால் பெண்களின் மீது ஏற்றிவிட்டனர்.
இதனால்தானோ...வேதாத்திரி மகரிஷியின், வாழ்க வளமுடன் அமைப்பினர் , மனைவி நல வேட்பு என்ற பெயரில் மனைவிகளை கொண்டாடும் நிகழ்வை வருடாவருடம் நடத்துகிறார்கள் என நினைக்கிறேன்.



Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..