பூமியன் புதல்வி சீதாதேவி..


தசரத மைந்தனால் சீதாபிராட்டிக்கு நேர்ந்த துன்பம்!






     திருப்பூர் புத்தக திருவிழாவில் நான் வாங்கிய, *வால்மீகி இராமாயணம் * (தமிழில் சிவன். கற்பகம் புத்தகாலயம். சென்னை.)படித்து முடித்துவிட்டேன். பின் என் துணைவியார் தற்போது படித்துக்கொண்டுள்ளார். நேற்று ஒரு கேள்வி கேட்டார். என்னங்க, "..சீதையை மீட்க இராமன் நேரில் செல்லாமல், சுக்ரீவனையும், நீலனையும் அனுப்பி வைக்கிறார். சீதை ஒரு வருடமாக அசோக வனத்தில் இராவணன் என்ற அசுரனின் கைதியாக இருக்கிறார். சீதையை மீட்க இராமன் தானே சென்றிருக்க வேண்டும். அப்போ தன் ஆருயிர் மனைவியான சீதை மேலே இராமனுக்கு அன்பு இல்லையா..?" எனக்கேட்டார். அப்போதுதான் என் மண்டைக்குள்ளும் பல கேள்விகள் பிறந்தன..!
காலம் காலமாக கோடிக்கணக்கான இந்துக்களாகிய நமக்கு , கணவன் மனைவியென்றால் அது இராமனும், சீதையும் போல வாழ வேண்டும் என்பது தான். அதாவது ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற ஒரு தாரக்கொள்கையை வலியுறுத்தும் விதமாக கூறுகிறார்கள். ஒரு பெண்ணைப்பார்த்து சீதை போல வாழவேண்டும் என வாழ்த்துகிறார்கள்.( மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் ஒரு படத்திற்கு இராமன் தேடிய சீதை என்றே பெயர் வைத்துள்ளார்.).அதே சமயம்  மகாபாரதத்தின் திரெளபதி போல வாழு என வாழ்த்துவதில்லையே?  என்ற கேள்வியை் நானே கேட்டுக்கொண்டேன்.  இந்த வால்மீகி இராமாயணத்தின் மூலமாக எனக்கு கிடைத்த  தகவல்கள் கீழ்கண்டவையாக இருக்கின்றன..
  
        தசரதருக்கு மூன்று அதிகாரபூர்வமான மனைவிகள். ஒருவருக்கும் குழந்தைகள் இல்லை. ரிஷ்ய சிருங்கர் என்ற ரிஷியே நேரிடையாக அயோத்தி நகருக்கு வந்து புத்திரகாமகோஷ்டியாகம் செய்கிறார். , கெளசல்யாவிற்கு இராமனும், கைகேயிக்கு பரதனும்,, சுமத்திரைக்கு லட்சுமனனும், சத்ருக்கணும் பிறக்கிறார்கள். இராமனும் லட்சுமனனும் சிறுவர்களாக இருக்கும் போதே வில்வித்தையில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். விசுவாமித்திர முனிவர் இராமனையும், லட்சுமனனையும் , தான் தவம் செய்யும் வனத்திற்கு அழைத்துச்சென்று, தன் தவத்திற்கு ஊறு விளைவிக்கும் அசுரர்களை  கொல்லச்சொல்கிறார். பின் மிதிலை நாட்டிற்கு ஜனகனின் அரசவைக்கு கூட்டிச்சென்று, சிவதனுசை முறிக்கச்செய்வதன் மூலம் தன் மூத்த மகள் சீதையை இராமனுக்கும், சீதையின் தங்கை ஊர்மிளாவை லட்சுமணனுக்கும் திருமணம் முடிக்கச்செய்கிறார். இராமனின் சித்தி கைகேயியினால் இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சீதையும் அனுப்பப்படுகிறார்.உடன் தன் மனைவி ஊர்மிளாவை விட்டு விட்டு, லட்சுமணன் தன் அண்ணனுடன் வன வாசம் செல்கிறார். பதின் மூன்று ஆண்டுகள் வனவாசத்தில் பல்வேறு விதமான துன்பங்களை சீதை சந்தித்தாலும், இராமன் இருக்குமிடமே அயோத்தி என நினைத்து இராமனைத்தவிர மனதார ஒருவரையும் நினைக்காத கற்புக்கரசி சீதா, இராவணனால் தந்திரமாக கடத்தப்பட்டு, இலங்கையில் உள்ள இராவணனின் அரண்மனையின் ஒரு பகுதியான அசோக வனத்தில் ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டு சொல்லணா துயரத்துக்கு ஆளாகிறாள்.

தன் ஆருயிர் மனைவி, இராவணனால் கடத்தப்பட்டதை அறிந்த இராமன் ஒரு வருட காலம் ஆருயிர் மனைவி சீதையை மீட்க சுக்ரீவன் , அனுமன் என்ற வானரத்தலைவர்களின் வானரப்படை மூலம் கடுமையான யுத்தத்திற்குப்பின் இராவணனை கொல்கிறார். எந்த ஒரு கணவனாக இருந்தாலும் உடனே அசோகவனம் சென்று சீதையைத்தானே முதலில் மீட்போம்.. ஆனால் இராமன் அப்படிச்செய்யாமல் அனுமனை அனுப்பி தான் வெற்றி பெற்றதை கூறும்படி செய்கிறார்.. பின் லட்சுமனனால் மன்னராக முடி சூட்டிய விபுஷணன் அசோக வனத்துக்கு வந்து, சீதையை சகலவிதமான மரியாதையுடன், அலங்கரித்த பல்லக்கில் வைத்து இராமனிடம் அழைத்து வருகிறார்..தன் மனைவி சீதாவைப்பார்த்த இராமன் என்ன செய்திருக்க வேண்டும்.. சீதாவைக்கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்திருக்கவேண்டும்.. ஆனால் அப்படி செய்யவில்லை..
   


    இராமன் சீதாவிடம் , " உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. காரணம் ஒரு வருடத்திற்கு மேலாக நீ மற்றொருவனது இருப்பிடத்தில் வசித்திருக்கிறாய். நீ இராவணனின் மடியில் அமர்ந்திருக்கிறாய்.! அவனுடைய ஆசைப்பார்வையும் உன் மேல் பதிந்திருக்கிறது.!  இராவணன் உனது அழகில் மதி மயங்க்கியிருந்தானே.! அவனது நடவடிக்கைகள் சில நேரம் உனக்குள்ளும் சிறு சபலங்களை ஏற்படுத்தியிருக்கலாம்!. அதனால் உனக்காக எனது  அரச பரம்பரைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த எனக்கு சம்மதமில்லை. ஆகவே நீ எவருடன் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். நான் உன்னை தடுக்கமாட்டேன். (இராமாயணம். வால்மீகி.பக்கம் 289) என கடுமையான வார்த்தைகளால் சீதையை சாடுகிறார்.


        தன் ஆருயிர் கணவனின் வாயிலிருந்து இப்படி விழுந்த வார்த்தைகள் சீதையை கூனிக்குறுகி அவமானப்படவைத்தது.! இராமனின் வாயிலிருந்து தெறித்து விழுந்த நாரசார வார்த்தைகளைக்கேட்டு அசைவற்று நின்று அழுதார். சகல நற்குணங்களும் கொண்டதாக கூறப்படும்  இராமனின் வார்த்தைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இராமனைப்பார்த்து, " சுவாமி என்னைத்தவிர்ப்பது என்ற நோக்கம் இருந்திருந்தால் ஹனுமான் மூலமாக அசோகவனத்திலேயே சொல்லியிருந்தால் நான் அங்கேயே உயிரை விட்டிருப்பேன்.  தாங்கள் வேண்டுமென்றே என்னை அற்பப்பெண்களின் வரிசையில் பலாத்காரமாக உட்காரவைக்கிறீர்கள்.  நான் ஜனக புத்தரி என்பதையோ, தங்களின் தர்மபத்தினி என்பதையோ கொஞ்சமாவது நினைத்துப்பார்த்தீர்களா? இனி உயிர் வாழ்வதைவிட, தீக்குள்  இறங்கி  நான் உயிரிழப்பதே மேல் எனக்கூறி, லட்சுமனனிடம் தீ மூட்டச்சொல்கிறார்!. லட்சுமணன தன் அண்ணன் இராமனைப்பார்க்கிறான். இராமன் அமைதி காக்கிறார். அண்ணனின் விருப்பமும் அது தான் என்பதை அறிந்த லட்சுமணன் தீ மூட்டுகிறார். . தீ கொளுந்துவிட்டு எறிகிறது. சுக்ரீவன் தலைமியிலான வானர சேனைகள், விபூஷணன், ஹனுமான் உட்பட அனைவரும் திக்பிரமை பிடித்து இராமனையும், சீதையையும் பார்க்கிறார்கள். ஒருவர் கூட இராமனே நீ கூறியது தவறு...பூமியின் புத்திரி சீதாவின் மீது களங்கம் செய்வது தவறு என ஒருவரும் கூறவில்லை.! தனக்கு ஆதரவாக ஒரு குரல் கூட எழும்பாததைக்கண்ட சீதை,  இராமனை மூன்று முறை வலம் வந்து இராமனின் காலைத்தொட்டு  தொழுதுவிட்டு, தீக்குள், அக்னி தேவா என்னைக்காப்பாற்று எனக்கூறி பாய்கிறார்.  அக்னி சீதையை சுடவில்லை ! சீதை அன்றலர்ந்த தாமரை போல அக்கினியை தாண்டி இந்தப்பக்கம் வருகிறார்.! .இந்த அக்னி பரீட்சையின் மூலம் தான் களங்கமற்றவள் என்பதை இராமனுக்கு உணர்த்தினாள்..! இதனைக்கண்ட இராமனும் சீதையை களங்கமற்றவள் எனக்கருதி ஏற்றுக்கொள்கிறார்.! லட்சுமணன் உட்பட அனைவரும் மகிழ்கின்றனர். ..
        இந்த இடத்தில் சீதையின் இடத்தில் மகாபாரத கதாநாயகி திரெளபதி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..! இது என் கற்பனை!
      திரெளபதி இராமனைப்பார்த்து,,"  என் கற்பில் என் புனிதத்தன்மையில் சந்தேகம் கொண்டீர்! ஒரு வருடம் நான் அசோகவனத்தில் இராவணனின் சிறையில் தனிமையில் இருந்ததால் உங்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.!. அது போல நீரும் என்னைப்பிரிந்து ஒரு வருடம் வனத்தில் முனிவர்கள், அவர்களுடைய மனைவிமார்கள்,  சுக்ரீவன் நாடான கிஷ்கிந்தையிலும் நீங்களும் தனியாகத்தானே  இருந்துள்ளீர்கள்..! ஒரு பெண்ணைக்கூட நீங்கள் ஏறெடுத்தும் பார்த்ததில்லையா..? நான் உங்கள் பதிவிரதா தன்மை மீது சந்தேகம் கொள்ளலாமா..?   கற்பு நிலையென்றால் அது இருபாலருக்கும் பொதுதானே! எனவே இராமபிரானே நான் தீக்குள் இறங்கி என் பதிவிரதா தன்மையை கற்பை நீருபிப்பது போல, நீங்களும் இந்த அக்கினிக்குள் இறங்கி உங்கள் கற்பையும் நிரூபியுங்கள் எனக்கேட்டிருப்பாரோ!!!




Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..