காகமும் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும்!




                               காகமும் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும்....


         இன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் சி..பி.எஸ்.ஈ. பள்ளியில்   தாத்தா-பாட்டி தினவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.        நானும் இதில் விருந்தினராக  கலந்து கொண்டேன். என்னைப்போல அப்பிச்சிகளும்,-அம்முச்சிகளும், தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்..குழந்தைகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டுகளும், தாத்தா பாட்டிகளுக்கும் போட்டியும், அவர்கள் கதை சொல்லும் நிகழ்வும் நடந்தது.  என்னையும் பேச சொன்னார்கள்.. நான் கோழிக்குஞ்சு . பாட்டுப்பாடினேன். கதை சொல்ல சொன்னார்கள். என்ன கதை சொல்வது ? எல்லோருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும் இதில் என் கற்பனைகளைக்கலந்து  குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு நான் சொன்ன கதை...    
       காகம் வடை சாப்பிட்ட கதை...!


 ஒரு ஊர்லே... இல்லையில்லை... நம்ம பெம் ஸ்கூல் இருக்கிற காங்கயம் ரோட்டில் விஜயாபுரம் என்ற  ஊர் இருக்கிறது. இந்த ஊரில் சுப்பாத்தா என்ற பாட்டி வடை சுட்டு வியாபாரம் செய்து வந்தாராம்.. அப்போ ஒரு காக்கா அவரிடம் வந்து, பாட்டி பாட்டி எனக்கு பசிக்குது ஒரு வடை தாங்க என்றதாம்.. பாட்டி ஒரு வடை ரூ 5 என்று கூறினாராம்.. காக்கா என்னிடம் காசில்லையே எனக்கூறியதாம்.. உடனே பாட்டி காசில்லாவிட்டால் பரவாயில்லை.. எனக்கு வடை சுட விறகு போதவில்லை..



கொஞ்சம் காயந்த விறகு கொண்டுவா !  வடை தருகிறேன் என்றாராம்.. உடனே காக்கா பல மரங்களுக்கு சென்று அங்கு காய்ந்திருந்த குச்சிகளை சேகரித்து கட்டி, காலில் தூக்கி வந்து பாட்டியிடம் கொடுத்ததாம். உடனே பாட்டியும் காக்காவின் உழைப்பை பாராட்டி ஒரு வடை சூடாக கொடுத்தாராம்.



. சூடான வடையை காலில் தூக்கிச்சென்ற காக்கா.. ஒரு ஆலமரத்தில் உட்கார்ந்து வடை ஆறட்டும் என்று காத்திருந்தது.. அப்போது அந்த வழியே என்ன வந்தது ? என நான் கேட்க பல குழந்தைகள்.. நரி வந்தது என கோரசாக கூறினார்கள்.!. ஆமாம் நரி வந்தது..


நரிக்கு மசாலா வடை வாசனை மூக்கை துளைக்க மரத்தின் மேல் பார்த்ததாம்.. அங்கு காக்கா வடையை காலில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததாம்.. உடனே நரி, காக்கா காக்கா நீ எவ்வளவு  கருப்பா  அழகா இருக்கே.! கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற சினிமாப்பாட்டை பாடி, நீயும் ஒரு பாட்டு பாடி காலைத்தூக்கி  ஒரு டேன்ஸ் ஆடு.. நல்லா இருக்கும்.. நான் பார்க்கனும்.. என்றது.! . நரியின் பேச்சினால் மயங்கிய காக்கா காலை தூக்கி டேன்ஸ் ஆட(எத்தனை நாளைக்கு பாட்டு பாடச்சொல்வது) வடை கீழே விழ.. நரி வடையை எடுத்துக்கொண்டு ஓடியது..



        தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காக்கா.. உடனே.. கா.. கா.. என கூவியது. உடனே விஜயாபுரத்தில் இருந்த காக்கைகள் எல்லாம் கூட்டாக வந்து என்ன விபரம் என கேட்டன. உடனே இந்தக்காக்கா தான் உழைத்து பெற்ற வடையை நரி ஏமாற்றி பறித்துக்கொண்டு நரி ஓடுகிறது எனக்கூறியது.. உடனே அனைத்து காக்கைகளும் கூட்டாக பறந்து சென்று பெம்ஸ்கூல் அருகே நரியை கொத்தின.. உடனே வலி தாங்காத நரி வடையை கீழே போட்டுட்டு உயிர் தப்பினா போதும் என்று ஓடி விட்டது.. உடனே வடையை எடுத்த காக்கா மெதுவாக  பெம் ஸ்கூலுக்குள் இருந்த மரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதாம்.. வடையை சாப்பிடும் போது காக்காவிற்கு விக்கிக்கொண்டது. இருந்தாலும் முழுவதுமாக வடையை சாப்பிட்டு விட்டது. நான் கொஞ்சம் கதையை நிறுத்தினேன். உடனே குழந்தைகள் எல்லாம் கோரசாக.. தாத்தா அப்புறம். என்னாச்சு ? என்று ஆவலாக கேட்டனர். அப்புறமா..
         வடையை சாப்பிட்ட காக்காவிற்கு தண்ணீர் தாகம் எடுத்துச்சாம். உடனே அங்கும் இங்கும் பறந்து தண்ணீர் இருக்குமா என தண்ணீரை தேடியதாம்.. கேட்டது.  பள்ளிக்குள்  ஒரு இடத்தில்  குடத்தில் தண்ணீர் இருப்பதை பார்த்து அருகில் சென்று குடத்தின் மேல் உட்கார்ந்து தன் வாயால் குடிக்கப்பார்த்தது.. ஆனால் தண்ணீர் கீழே இருந்ததால் காக்காயின் வாயிற்கு தண்ணீர் எட்டவில்லையாம்.. என்ன செய்வது என கவலையில் வகுப்பறையின் ஜன்னலில் அமர்ந்து யோசித்ததாம்.. அப்போ அந்த வகுப்பறைக்குள்  மகேசுவரி டீச்சர் குழந்தைகளுக்கு ஈ.வி.எஸ் பாடம் நடத்தியதை பார்த்தது !. உடனே ஜன்னல் அருகில் உட்கார்ந்து  மகேசுவரி டீச்சர்   நடத்திக்கொண்டிருந்த பாடத்தை காக்கா கேட்குதாம்..மகேசுவரி டீச்சர் மாணவர்களுக்கு, கிரேக்க நாட்டின் அறிஞர் ஆர்க்கிமிடிஸ்  வாழ்க்கையில் நடந்த சுவையான கதையை கூறிக்கொண்டிருந்ததை காக்கா கேட்டுது... என்ன கதை தெரியுமா..? 


கிரேக்க நாட்டின் அரசர் தன் தங்க கிரீடத்தில்.. தான் கொடுத்த தங்கத்தில் பொற்கொல்லன் சரியாக செய்திருப்பானா.. ஏமாற்றியிருப்பானா என சந்தேகம் வந்துவிட்டது. உடனே ஆர்க்கிமிடீஸை கூப்பிட்டு,தன் கிரீடத்தை அவரிடம் கொடுத்து இதில் எத்தனை எடை தங்கம், எத்தனை எடை வெள்ளி இருக்கும் என கூறுங்கள் எனக்கேட்டாராம். ஆர்க்கிமிடிசுக்கு அப்போது இதனை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை. வீட்டிற்கு வந்து விட்டார். இரவு முழுவதும் யோசித்தார்..! அவரால அரசரின் கேள்விக்கான பதில் தெரியவில்லை! அடுத்த நாள் காலையில் குளிக்க பாத்டப்பில் இறங்குகிறார்..


வர் இறங்கியவுடன் டப்பில் இருந்த தண்ணீர் உயர்ந்து கீழே விழுவதைக்காண்கிறார்.. எப்படி தண்ணீர் பாத்டப்பில் இருந்து வெளியேறுச்சு என யோசிக்கும் போது அவருக்கு விடை தெரிந்துவிட்டது.. என்னன்னா இவர் எடை என்னவோ அதற்குச்சமமான எடை தண்ணீர் டப்பில் இருந்து உயரமாக கீழே சிந்தியது என்பதை உணர்ந்து..அரசரின் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதை அறிந்து.. யுரேகா.. யுரேகா (யுரேகா என்றால் கிரிஸ் மொழியில் கண்டு பிடித்துவிட்டேன்) என ஓடுகிறார்.. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்.. ஒரு பொருளை தண்ணீருக்குள் போட்டால் அந்த பொருளின் எடைக்குச்சமமான தண்ணீர் மேலே உயரும் என்ற அறிவியல் உண்மையைக்
கூறுகிறார்..  இந்த விதியினைப்பயன்படுத்தித்தான் கப்பல்கள் எல்லாம் கடல் தண்ணீரில் மிதக்கின்றன என்றார்! என்ன புரியவில்லையா! கப்பலின் எடைக்குச்சமமான தண்ணீரை வெளியேற்றுவதால் தான் கப்பல் தண்ணீரில் மிதக்கிறது என்றார்.
        இந்தக்கதையினைக்கேட்ட காக்கா என்ன செஞ்சது தெரியுமா.! ஓ தண்ணீருக்குள் ஒரு பொருளைப்போட்டால் அதன் எடைக்கு சமமான தண்ணீர் மேலே வருமா என யோசித்தது. உடனே  மைதானத்தில் கிடந்த கற்களை எடுத்து வந்து  குடத்துக்குள் போட்டுப்பார்த்தது ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தை சோதித்துப்பார்த்தது!



.   என்ன ஆச்சரியம்!  உடனே தண்ணீர் மேலே வந்தது.. மேலே வந்த தண்ணீரை காக்கா குடித்து தன் தாகத்தை தீர்த்துக்கொண்டது.!.


Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..