கல்வித்தாஜ்மகால் உருவாக்கிய லட்சுமிதேவி

கல்வித்தாஜ்மகால் உருவாக்கிய லட்சுமிதேவி                             


அக்டோபர் 31 ம் தேதி மதியம் 1 மணி சுமாருக்கு எனது போனுக்கு பெயர் தெரியாத ஒரு போனில் இருந்து கால் வருகிறது. நான் யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் பேசுகிறேன்.  எதிர் முனையில் அண்ணா நான் லட்சுமிதேவி கோவையில் இருந்து பேசுகிறேன் என்றவுடன் எனக்கு முகம் ஞாபகம் வந்துவிட்டது. 1985 ம் ஆண்டில் இருந்து எனக்கு  தொலைபேசித்துறையில் முதலில் தற்காலிக தொலைபேசி இயக்குனராக இருந்தார். நான் அங்கம் வகுத்த NFTE சங்கத்தின் மூலம் இவர்களைப்போல நாடு முழுவதும் இருந்த தற்காலிக ஊழியர்களை(RTP)  நிரந்தர ஊழியர்கள் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்து, போராடி நிரந்தரமானவர்களில் இவரும் ஒருவர்.


 நான் திருப்பூரில் இருந்தாலும் கோவை தொலைபேசி நிலையத்தில் இவரைப்போல நிறையப்பேர் என்னை அண்ணா என்றே அழைப்பார்கள். 2011ம் ஆண்டு நான் ஓய்வு பெறும் வரை தொடர்பில் இருந்தார்கள். நான் ஓய்வு பெற்றபின் தொடர்பு படிப்படியாக விட்டுப்போய்விட்டது.  அண்ணா, இன்னும் ஜெய்வாபாய்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருக்கிறீர்களா? பள்ளிக்கு செல்வீர்களா? என்றார்.  நான் திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் சமூக சேவையாக பள்ளியினை மேம்படுத்திவருவதையும் அப்போது எல்லோருமே அறிவார்கள். லட்சுமிதேவியின் அப்பா திருப்பூரில் காவல் துறையில் பணிபுரிந்தபோது ஓடக்காட்டில் வசித்ததாகவும் , திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் பள்ளியில் 1980 களில் படித்ததாக ஒரு முறை சொல்லியிருந்தார்.  


  நான், இப்போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இல்லை. இருந்தாலும் அடிக்கடி பள்ளிக்குச்செல்வேன் என்று கூறினேன்.  பெரும்பாலும் என்னிடம், பள்ளியில் சேர்வதற்கும், காணாமல் போன சான்றிதழ், மதிப்பெண் சான்று வேண்டும் என்றும் அதற்கு உதவவேண்டும் என்று கேட்பார்கள், நானும் என்னால் முடிந்த அளவு தலைமையாசிரியை அவர்களிடம் கூறி செய்து கொடுத்துள்ளேன். அப்படி ஏதாவது உதவி கேட்பார் என நினைத்து, பள்ளியில் என்ன வேண்டும் எனக்கேட்டேன். அண்ணா எனக்கு ஒன்றும் வேண்டாம்.   நான் கோவை தொலைபேசி நிலையத்தில் இருந்து இரண்டு வருடம் முன்பு  விருப்ப ஒய்வு பெற்றுவிட்டேன். தற்போது 60 வய்து முடிந்ததால், பணி ஒய்வுப்பணம் வந்துள்ளது.  அதில் நான் படித்த ஜெய்வாபாய் பள்ளிக்கு சிறிது உதவிட எண்ணுகிறேன் என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இவர் போலவேதான் திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த செல்வி காந்திமதி சண்முகம் என்பவரும், தான் ஜெய்வாபாய் பள்ளியில் படிக்கவில்லை என்றாலும், தன் ஓய்வுப்பணம் வந்தவுடன் ஜெய்வாபாய் பள்ளியின் குழந்தைகளுக்கு  விளையாட்டு பூங்கா சாதனங்களை வாங்கித்தந்த செய்தியையும் கூறினேன். 

                  தான் இன்னும் சில தினங்களில்  பள்ளிக்கு நேரில் வருவதாக கூறியிருந்தார்.  கடந்த 3 ம் தேதி மதியம் 12 மணிக்கு பள்ளிக்கு கோவை துடியலூரில்  இருந்து ஒரு வாடகை காரில் இவரும் இவர் கணவர் திரு.சுப்பிரமணியம்  அவர்களும் வந்திருந்தார்கள். பள்ளியில் இவர்களின் வருகைக்காக காத்திருந்த நான்,  தலைமையாசிரியை திருமதி.ஸ்டெல்லா அமலேற்பவ மேரி அவர்களின் அறைக்கு  அழைத்துச்சென்றேன். சிறிது நேரம் தலைமையாசிரியையிடம் பேசினார்கள். தான் 1977-78 ம் ஆண்டுமுதல் 1981 ம் ஆண்டுவரை 9 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்புவரை படித்த பின் ஒரு வருடம் கல்லூரிக்கு சென்றதாகவும் கூறினார். கல்லூரியில் படிக்கும் போதே, தான் படித்த 12 ம் வகுப்பு மதிப்பெண்னை வைத்து(80 % க்கும் மேல் மதிப்பெண் இருந்தால் மட்டுமே எடுப்பார்கள்), தனக்கு மத்தியரசின் தொலைபேசித்துறையில்  1983 ம் ஆண்டில் டெலிபோன் ஆப்ரேட்டர் வேலை கிடைத்துவிட்டது என்றும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன் என்றும் கூறினார். தனக்கு 1983 ல் வேலை கிடைத்ததற்கு தா 12 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணே காரணம் என்றும் அதற்கு ஆசிரியைகளே முழுக்காரணம் எனக்கூறினார். அந்த ஆசிரியைகள் சார்பாக  நான் பள்ளிக்கு என் ஓய்வூதியத்தில் இருந்து  நன்கொடையாக  தருகிறேன் எனக்கூறி ஒரு காசோலையை , ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து என்னிடம் கொடுத்து அதனை தலைமையாசிரியையிடம் கொடுக்க கூறினார்.  தலைமையாசிரியை அவர்கள் சிறிது பொறுங்கள் எனக்கூறி பக்கத்து அறையில் இருந்த சில ஆசிரியர்களையும் வரச்சொல்லி அவர்கள் கையில் கொடுக்கும்படி கூறினார். நானும்  அவர்களிடம் தரும்போது காசோலையினை பார்த்தபோது அதில் ரூபாய் ஒரு லட்சம் என்று போடப்பட்டிருந்தது கண்டு எனக்கு அதர்ச்சியுடன் கூடிய பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.



 திருமதி.சி.லட்சுமிதேவிக்கென்று   வசதி படைத்த குடும்பப்பின்னணி கிடையாது என்பது எனக்குத்தெரியும். ஒரு மகன், மற்றும் மகள். மகளுக்கு திருமணம் ஆகி ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். மகனுக்கு இப்போதுதான் படிப்பு முடியப்போகிறது. கோவை  துடியலூர் அருகில்  சொந்த வீடு மட்டும் உள்ளது. கார் கூட கிடையாது. இருந்தாலும்  தனக்கு வந்த ஓய்வூதியத்தில் சுமார் 20% ஐ, தான் 4 வருடம் படித்த ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு நன்கொடையாக தந்திருப்பது மாபெரும் கொடையாக நான் பார்க்கிறேன்.  இவரின் வாழ்க்கைத்தரத்தில் இருக்கும் ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் தருவது என்பது நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத செயல். இதற்கு உறுதுணையாக இருந்த இவரின் கணவர் சுப்பிரமணியம், மற்றும் மகன் சுபாஷ், மகள் திருமதி சுமிதாசாய்ராம்  இருவரையும்  பாராட்டியே ஆகவேண்டும். 

மகன், மகளிடம் கூறியிருப்பாரா எனத்தெரியவில்லை!  ஏனென்றால், என்னிடம் பேசும்போது நாங்கள் இருவரும் (இவரும் கணவரும்) முடிவெடுத்தோம்!  ஒருவரிடமும் சொல்லவில்லை! சொன்னால் ஆளுக்கு ஒரு ஆலோசனை சொல்வார்கள்! எங்களுக்கு குழப்பம் வரும். ! அதனால் உடனே வந்துவிட்டோம்  எனக்கூறினார். இவரின் வார்த்தை   சமூக யதார்த்தத்தை பிரதிபலிப்பதைக்காணலாம்.  இவரின் செய்கை எனக்கு பாரதியாரின்

 ”அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்

 ஆலயம் பதினாயிரம் நாட்டல்

 அன்னயாவினும் புண்ணியம்கோடி

 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்! “

 என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.



                பள்ளியில் இவர்கள் வந்த போது நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு பள்ளி மேலாண்மைக்குழுவினரும் இருந்தார்கள். மாணவிகள் மத்தியில் சிறிது பேசினார். ஆசிரியர்கள் மட்டுமே எந்தவித பிரதிபலனும் காணாமல் நமக்காக உழைக்கிறார்கள். அவர்களை நாம் மதிக்கவேண்டும். நம் பெற்றோர்கள் நமக்காகத்தான் வாழ்கிறார்கள். அவர்களை நாம் கடைசிவரை காப்பாற்றவேண்டும்!அவர்களின் சொற்படி நடக்கவேண்டும் எனக்கூறினார். பள்ளி மேலாண்மைக்குழுவினர் பொன்னாடை போர்த்தினார்கள். நான் என் சார்பாக பாரதியாரின் கவிதை நூலினைக்கொடுத்து நன்றி தெரிவித்துக்கொண்டேன்.  மாணவிகள் சார்பாக பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல ஒரு தாமரைப்பூவினைக்கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

                

                  

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..