சனிப்பெயர்ச்சி என்றால் என்ன ? !

படம் 1.அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான அழகிய சனி கிரகம். இந்த கிரகம் உங்கள் வீட்டில் (பூமியில்)இருந்து 1.2 பில்லியன் கி.மீ தூரத்தில் இருக்கிறது. சூரியனை ஒரு முறை சுற்ற 30 வருடம் எடுத்துக்கொள்கிறது. மணிக்கு 36480 கி.மீ. வேகத்தில் செல்கிறது. # சனியின் தாக்கமண்டலம் அதன் மையத்தில் இருந்து வெறும் 5.45 கோடி கி.மீ. தான் என்று 19- ம் நூற்றாண்டிலேயே கணிதமேதை லாப்ளாஸ் கண்டுபிடித்துவிட்டார். இதன் பின்னரும் 120 கோடி கி.மீ தூரத்தில் உள்ள சனியின் தாக்கம் பூமியில் உள்ள மனிதர்கள் மீது இருக்கும் சோதிடர்கள் கூறுவது தவறானது, பொய்யானது என்பதை புரியாமல் மக்கள் இருப்பது வேதனையாக உள்ளது.# ( நன்றி விஞ்ஞான துளிர் டிசம்பர் 2023 இதழ் 12ம் பக்கம்)
படம் 2. புராணக்கதைகளில் வரும் போலியான சனி கிரகம். மனிதர்கள் உருவாக்கிய மனித சிற்பம். இவரின் வாகனம் காகம். இவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு போகிறார் என்று ஜனவரி 17 - 2023 ல் சொல்லி மக்கள் மத்தியில் பயம் ஊட்டி,அப்பனும் மகனும், அம்மாவும் மகளும் 2 வருடம் முகம் பார்க்க கூடாது என்று( திருக்கணித பஞ்சாங்கத்தின் படி) ஜோதிடர்கள் கூறினார்கள்.! இல்லையில்லை சனிபகவான் 29 ம் தேதி மார்ச் மாதம் 2023 ல் தான் கும்பராசிக்கு செல்கிறார் என்று வாக்கிய பஞ்சாங்கம் கூறுகிறது எனக்கூறி பரிகார பூஜையெல்லாம் செய்து மக்களை பயமுறுத்தினார்கள். இப்போ என்னவென்றால் மீண்டும் வரும் 20 தேதி மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு செல்கிறார் எனக்கூறி எல்லாக் கோவில்களிலும் பரிகார பூஜைக்கு பணம் வசூலித்து மக்களில் 4 பேருக்கு ஒருவர் சனி தோசத்தில் இருப்பார். இப்படி அடிக்கடி சனி தோசம் எனக்கூறி அச்சம் ஏற்படுத்துகிறார்கள்! இரண்டரை வருடம் கழித்து வரவேண்டிய சனிப்பெயர்ச்சி அதெப்படி 11 மாதத்தில் மீண்டும் வருகிறது! ஜனவரி 2023 ல் மகரத்தில் இருந்து கும்பம் போன சனி ,பேக் அடித்து மீண்டும் மகரம் வர முடியுமா? அதற்கு இன்னும் 27 .5 ஆண்டுகள் ஆகணுமே! எப்படிங்க 11 மாதத்தில் வருவார் என மக்கள் கேட்காததால் கோடிக்கணக்கில் வருமானத்திற்கு ஜோதிடர்களும், கோவில் அர்ச்சகர்களும் வழி கண்டுபிடித்துள்ளார்கள்!
ஆமாம்,,, செவ்வாய் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனிபெயர்ச்சி எனக்கூறும் சோதிடர்கள், உண்மையாக வானில் சனிக்கு அடுத்து இருக்கும் யுரேனஸ் பெயர்ச்சி, நெப்டியூன் பெயர்ச்சி பற்றி ஏன் கூறுவதில்லை? ஆனால் வானில் இல்லாத கற்பனை கிரகங்களான ராகு-கேது பெயர்ச்சி பற்றிக்கூறி மக்களை நம்ப வைத்துள்ளார்கள்.!
இன்றைய இளைய தலைமுறையினர் இதையெல்லாம் நம்பாமல் போய்விடுவார்களோ எனப்பயந்த ஜோதிடர்கள் கூட்டம் ஒன்றிய அரசு மூலம் புராணக்கற்பனைக்கதைகளை வரலாறாகவும், பல்கலைக்கழகங்களில் ஜோதிடத்தை ஒரு பாடமாகவும் கொண்டுவந்து வரும்காலத்தலைமுறைகளை சிந்திக்கவிடாமல் செய்து அவர்களின் திறமையை முடக்கப்பார்க்கிறார்களோ என சந்தேகமாகவும் இருக்கிறது!

எனக்குத்தெரிந்த ஒரு திருமணம் ஆகாத ஆசிரியை ஒருவர் போன் செய்து, சார் எனக்கு கும்பராசி, பூரட்டாதி நட்சத்திரம் , வரும் 20 ம் தேதி மகர ராசியில் உள்ள சனிபகவான் என்னுடைய ராசிக்கு வருகிறாராம். அதனால் எனக்கு சனி தோஷம் கடுமையாக இருக்கும் என்றும் , என் வீட்டில் உள்ள அப்பா, அம்மா இருவரும் கூறுகிறார்கள்! எனக்கு ஏழரை நாட்டு சனியென்றும் எதற்கெடுத்தாலும் கரிச்சுக்கொட்டுகிறார்கள்! சனிக்கிழமை தோறும் கருப்பு கலரில் ஆடை அணிந்து பரிகாரம் செய்யச்சொல்கிறார்கள். எனக்கு இரு சக்ர வாகனத்தில் பள்ளி செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் கூட அச்சமாக இருக்கிறது என்றார். என் ஜாதகத்தை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் கூட சனி தோஷம் இருப்பதால் என்னை வேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள் ! வரும் 20 ம் தேதி திரு நள்ளாருக்கு கருப்பு ஆடை அணிந்து சென்று பரிகாரம் செய்திட குடும்பத்தோடு போகிறோம்! இங்கு போய் வந்தால் என் ஏழரைச்சனி தீர்ந்துவிடுமா எனக்கேட்டார்! என் குடும்பத்தில் என்னை திட்டுவது நின்றுவிடுமா எனக்கேட்டார்.
நான், சனி என்பது வானத்தில் உள்ள அழகிய கிரகம்! அந்த அழகிய கிரகத்தைத்தான் கருப்பு கலரில் ஒரு மனிதனாக உருவகம் ஆக்கி அவரை ஒரு காக்கை மேஒ உட்காரவைத்து நமக்கு படமாகவும், கோவில்களில் சிலையாகவும் காட்டுகிறார்கள். சூரிய குடும்பத்தினை பள்ளியில் பாடத்தில் படித்திருப்பீர்கள்! சூரியனில் இருந்து நம் பூமி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் பூமியில் இருந்து சனி கிரகம் மூன்றாவதாக உள்ளது. இந்த சனியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது. நம் பூமியில் இருந்து வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் 27 நட்சத்திரங்கள் பிரகாசமாக இருக்கின்றன. இந்த 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளாக பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டு அல்லது மூன்று நட்சத்திரமாக அங்கின்றும் இங்கொன்றுமாக தூரத்தில் இருக்கும். அதற்கு ஒரு கற்பனை கோட்டைப்போட்டு இணைத்திருப்பார்கள் அதுதான் ராசி. இந்த ராசிகளும், நட்சத்திரங்களும் சனி கிரகத்திற்கும் அப்பால் வெகு வெகு தொலைவில் ஒளி ஆண்டு கணக்கில் இருக்கும். சனி தன் பாதையில் சூரியனை சுற்றி வரும்போது , அதன் பின்னால் எந்த ராசிக்கட்டத்திற்கு நேராக இருக்கிறதோ அதைத்தான் சனிப்பெயர்ச்சி என்கிறார்கள். பூமியில் இருந்து சனி கிரகம் 1.4938 பில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இதை ஒளியாண்டில் கணக்கிட்டால் 0.00015 ஒளியாண்டாகிறது. அதே சமயம் இந்த 27 நட்சத்திரங்களும் இந்த சனி கிரகத்தை விட மிக அதிக தூரத்தில் இருக்கிறது. உதாரணமாக கும்ப ராசியில் உள்ள உன் பூரட்டாதி நட்சத்திரம் 51 ஒளியாண்டு தூரத்திலும், உன்னைப்போலவே சனியுள்ள சதயம் 393 ஒளியாண்டு தூரத்திலும், அவிட்டம் 101 ஒளியாண்டு தூரத்திலும் உள்ளன. ஒரு ஒளியாண்டு என்பது ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மி. வேகத்தில் செல்லும். இதை ஒரு ஒளியாண்டாக கணக்கிட 300000 லட்சத்தை 60 ஆல் பெருக்கி, பின் அதையும் 60 ஆல் பெருக்கினால் ஒரு மணி நேரத்தில் ஒளி செல்லும் தூரம் கிடைக்கும். பின் இதை 24 ஆல் பெருக்கினால் ஒரு நாளில் செல்லும் தூரமும், பின் இதையே 365 ஆல் பெருக்கினால் எண்ண முடியாத அளவில் ஒரு எண் கிடைக்கும் அது தான் ஒரு ஒளியாண்டு என்பது. உன் 51 ஒளியாண்டுக்கு பெருக்கினால்... .. என்ன வருமோ அது தான் நீ பிறந்த நட்சத்திரத்திற்கும் உனக்கும் உள்ள தூரம். இந்த சனி பகவான் உன் நட்சத்திரத்திற்குள் நுழைந்தால், அந்த நிமிடத்தில் அங்கிருந்து வரும் பாதகம் உன்னை வந்து அடைய 51 ஒளியாண்டு தேவைப்படும்! நம் ஆயுள் காலமோ சராசரி 65 ஆண்டுதான்!
இந்த குரு பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, வெள்ளி பெயர்ச்சி என்பது எல்லாம் அறிவியல் வளராத காலத்தில் ஜோதிடம் என்ற பெயரில் புனையப்பட்ட கட்டுக்கதைகள்! இதற்கும் நம் வாழ்க்கைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! ஜோதிடர் கூறியதால் விரக்தியடைந்த பெற்றோர் கூறுவதை பெரிதாக எடுக்கக்கூடாது, பாரதியார் கூறியது போல ”ஜோதிடம் தனை இகழ் “ ஏழரை நாட்டு சனி தோஷம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது! அதையே நினைத்துக்கொண்டிருந்தால், ஒரு கல் தட்டினாலும் ஐயோ இது சனிதோசம் என்று நினைக்கக்கூடாது! வீட்டில் அப்பா அம்மா ஏதாவது பூஜை புனஸ்காரம் என்று சொன்னால் அவர்கள் கூறுவதை அவர்களின் மன திருப்திக்காக ஏற்றுக்கொள்! ஆனால் சனி தோஷம் எல்லாம் ஒன்றும் இல்லை என்பது உன் மனதில் இருக்கவேண்டும். தைரியமாக இரு ! என்று கூறியுள்ளேன். அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியாது!
See insights
Boost a post
All reactions:
Mangai Arasi, Sudha Senthil and 65 others

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!